உலகப்புகழ் பெற்ற மனிதர்கள்-19

மாஜினியும் இத்தாலியின் விடுதலையும்
கு.வெ.கி.ஆசான்

அய்ரோப்பாக் கண்டத்தின் தெற்கில், அதன் நடுப்பகுதியில் அமைந்துள்ள தீபகற்ப நாடு இதாலி; அதன் தலைநகர் ரோம். தொன்-மைக் காலத்தில், விரிந்து பரந்திருந்த ரோம் பேரரசின் நடுநாயகமாக அந்நாடு விளங்கியது. மத்திய தரைக்கடல் எனும் நடுநிலக் கடலைச் சுற்றியிருந்த பகுதிகளிலும், அவற்றைத் தாண்டியும் அதன் ஆதிக்கம் கொடி கட்டிப் பரந்தது. நிலையான சாலைகளையும், நீர்-வழிகளையும், முறையான சட்டங்களையும், நெடுங்-கால அமைதியையும் அளித்த பெருமை அதற்கு உண்டு. அதை அடுத்து கிறித்துவ மதம் அய்ரோப்பா முழுவதும் பரவிய பொழுது, அதன் வலிமை புனித ரோம் பேரரசு என்ற பெயரில்தான் வெளிப்பட்டது.

பிளவுண்ட அடிமை நாடு

ஆனால் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்-தில் இதாலி எனும் பெயர் ஒரு நிலப்பகுதியை மட்டுமே குறித்தது; ஒன்றுபட்ட, உரிமையுள்ள ஒரு நாட்டை அச்சொல் குறிப்பிடவில்லை. அந்த அளவிற்கு அது பிளவுபட்டும், அடிமைப்பட்டும் கிடந்தது. 1. தென் கோடியில், சிசிலி, மற்றும் நேபிள்ஸ் ஆகியவை, ஸ்பெய்ன் அரசு வழியில் வந்த போர்பன் மன்னர்களின் கொடுங்கோன்மையில் இருந்தன.

2. அவற்றிற்கு வடக்கில் இருக்கும் ரோம், மற்றும் சுற்றுப் பகுதிகள் போப்பின் மத அடக்குமுறையில் இருந்தன.

3. அதற்கு வடக்கில் இருந்த டஸ்கானி, மடோனா, பரமா முதலியவை ஆஸ்திரியா-விற்குக் கட்டுப்பட்டு, வல்லாட்சி செலுத்திய சிற்றரசுகளாக விளங்கின. 4. லம்பார்டி, வெனீசியா ஆகியவை ஆஸ்திரியாவின் நேரடி ஆட்சியில் அடிமைப்-பட்டு இருந்தன.

5. இதாலியின் மேற்கில் இருந்த சார்டீனியா தீவும், நாட்டின் வடபகுதியான பியட்மண்ட் எனும் பகுதியும் இதாலியர் வழிவந்த மன்னரால் அடக்கி ஆளப்பட்டன.

அடிமைப்பட்ட இதாலி நாட்டின் பகுதிகளை விடுதலை செய்யவும், அவற்றில் மக்களாட்சியை நிறுவவும், ஒன்றுபட்ட நாட்டைக் குடியரசு ஆக்க-வும் தம் வாழ்வை முழுமையாக ஈடுபடுத்தி உழைத்தவர், ஜோசஃப் மாஜினி. இதாலியின் வடமேற்கில் உள்ள துறைமுக நகரான ஜினோவாவில் 1805 ஜூன் 22இல் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு மருத்துவர், பல்கலைக் கழகத்தில் உடற்கூறு இயல் கற்றுத் தந்தார். முதலில் மாஜினி வீட்டில் தனியாகக் கற்றார். பின்பு பல்கலைக் கழகத்தில் பயின்று 14 வயதில் மெட்ரிக் படிப்பை முடித்தார். சட்டம் பயின்றார்; வழக்குரைஞர் தொழில் செய்யத் தொடங்கினார். அரசியல் கலந்த அவருடைய இலக்கியக் கட்டுரை-களை இதழ்கள் வெளியிட்டன. வரலாறு, இலக்கியம், அரசியல் முதலியனபற்றி நிறையப் பயின்றார்.

சிறைவாசம் பல இன்னல்களை ஏற்று, இதாலிய விடுதலைக்காக கார்போனாரி (கரி எரிப்போர்) எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தன்னலம் இன்றிக் கடுமையாக உழைத்தனர். ஆகையால் இந்த இயக்கம் மாஜினியை 16ஆம் வயதி-லேயே கவர்ந்தது. 1829இல் அந்த ரகசிய இயக்-கத்தின் உறுப்பினர் ஆனார். 1830இல் அதற்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருந்த-பொழுது கைதானார்; ஆறு மாதம் தண்டனை பெற்று, ஸாவோனா சிறையில் இருந்தார். சிறை-யில் இளம் இதாலி எனும் இயக்கம் காண்பது குறித்துத் திட்டம் தீட்டினார்.

நாடு கடத்தப்பட்டார்

1831இல் சிறையில் இருந்து வெளிவந்த மாஜினிக்கு, நாட்டைவிட்டு வெளியேற ஆணை பிறந்தது. சார்டீனியா - _ பியட்மண்ட் அரசின் இந்த நடவடிக்கை காரணமாக மாஜினி-யின் நிலையற்ற நடோடி வாழ்க்கை தொடங்-கியது. வாழ்க்கை முழுவதும் அவ்வாறே வாழ வேண்டியவர் ஆனார். முதலில் ஃபிரான்சின் தெற்கில் இருந்த மார்சேல் சென்று தங்கினார். அங்கே 1832இல் இளம் இதாலி எனும் பெய-ரில் இதழ் ஒன்றும், அதே பெயரில் தம் நாட்-டின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் ஓர் அமைப்பும் தொடங்கினார்.

இதாலிய நாடான சார்டீனியா _ பியட்-மண்டிற்கு 1831_இல் சார்லஸ் ஆல்பர்ட் அரசர் ஆனார். விடுதலைப் போருக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று மாஜினி அவருக்கு எழுதினார். ஆனால், சார்டீனியா நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் ஃபிரான்ஸில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். சுவிட்சர்லாந்தில் மாஜினி குடியேறினார். அங்கிருந்து கொண்டு இதாலி விடுதலைக் கிளர்ச்சிகளுக்கு ஊக்கம் தந்தார். 1833இல் சார்டீனியா அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது. அவருடைய இளம் இதாலி இயக்கம் பல இடங்களில் கிளைகள் கண்டது. அதில் உறுப்பினர் ஆவோ-ருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரிய ஏகாதிபத்தியம் மிரட்டியது. 1834இல் இளம் அய்ரோப்பா எனும் சங்கம் தோற்று-விக்கப்பட்டது.

லண்டன்

சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மாஜினி, 1837இல் லண்டனில் குடியமர்ந்தார். அங்கு தொடர்ந்து 11 ஆண்டுகள் தங்கினார். முதலில் வறுமையில் வாடினார். பின்பு ஆங்-கிலம் கற்றுக் கொண்டு, இதழ்களுக்குக் கட்டு-ரைகள் எழுதி போதிய ஊதியம் பெற்றார். கார்லைல் (1795_1881), ஜான் ஸ்டுவர்டு மில் (1806_73) ஆகிய அறிஞர்களின் நட்பும் உதவி-யும் பெற்றார். இதாலியத் தொழிலாளர் பலர் லண்டனில் வாழ்ந்தனர். அவர்களுக்கு இதழ் ஒன்று நடத்தினார். அதில் மனிதரின் கடமை என்பது பற்றித் தொடர் கட்டுரை வரைந்தார்.

1848_இல் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றில் உரிமைக் கிளர்ச்சிகள் தோன்றின. இதாலியில் ஆஸ்திரியாவுக்கு எதிரான கிளிர்ச்சியில் கலந்து கொள்ள மிலான் சென்றார். நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனால் கிளர்ச்சியை ஆஸ்திரியப் படை அடக்கியது. இதற்கு இடையில், போப் வெளியேற்றப்பட்டு, ரோம் குடியரசு என அறி-விக்கப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் அழைத்தனர்; அதன் பேரில் மாஜினி அங்கு சென்று தலை-மை தாங்கினார். ஆனால், போப் வேண்டிக் கொண்டதன் காரணமாக, ஃபிரான்சு நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் நெப்போலியன் (1808-_73), படையை அனுப்பி ரோம் நகரைக் கைப்-பற்றினான்; காரிபால்டி (1807-_1882) வீரத்துடன் போரிட்டும் குடியரசு ஆட்சியைக் காப்பாற்ற முடியவில்லை. மனந்தளர்ந்த மாஜினி மீண்டும் 1850இல் லண்டன் திரும்பினார்.

சோர்வில் இருந்து மீண்ட பின்பு 1851இல், இதாலிய நண்பர்கள் சங்கத்தை லண்டனில் தோற்றுவித்தார். மகன் மாஜினியை என்றும் நேசித்துவந்த தாய் 1852இல் மறைந்தார். மறை-வதற்கு முன்பு, நாட்டு மக்களின் விடுதலைக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டி-ருந்த மகனுக்கு உதவும் பொருட்டு ஒரு சேம நிதியை ஏற்படுத்தியிருந்தார்.

1849இல் சார்டீனியாவின் புதிய மன்னராக, விக்டர் இமானுவல் (1820-_78) பொறுப்பேற்றார். காவூர் (1810_61) எனும் ராஜதந்திரி, 1851இல் அவருடைய பிரதமர் ஆனார். அவர்களுடைய அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கையாலும், காரிபால்டி மற்றும் அவருடைய வீரர்களின் தாக்குதலாலும், மாஜினியின் பிரச்சாரத்தாலும், ஒத்துழைப்பாலும் இதாலி படிப்படியாக விடுதலை பெற்றது. இருப்பினும் மாஜினி விரும்-பியதுபோல் அது குடியரசு ஆகவில்லை; 1871-இல் ரோமைத் தலைநகராகக் கொண்டு, முடிய-ரசாக மலர்ந்தது.

தாம் பிறந்த ஜெனோவாவிற்குத் தெற்கில் உள்ள பைசா நகரில் 1872 மார்ச் 10இல் மாஜினி இயற்கை எய்தினார். இதாலியின் உணர்வு மாஜினி; போர்க் கருவி கரிபால்டி; அறிவு காவூர் என ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரி-டித் (1828_1909) கூறியுள்ளார்.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008