வஞ்சம் தீர்ந்தது

ஒரு ஊரிலே, தன்மதி என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு துன்மதி என்ற பெயருடைய ஒரு தம்பியும் உண்டு. துன்மதி தன்மதியின் அரசை அபகரித்துக் கொள்ள வெகு காலமாக எண்ணிவந்தான்.

அந்தக் காலத்தில் ஆரியர்கள் காட்டில் வாழ்ந்தனர். அங்கு பெரிய பெரிய குழிகளைத் தோண்டி அதில் விறகுகளையும் சருகுகளையும்போட்டு நெருப்பை மூட்டி, நாட்டில் உள்ள உணவுப் பொருள்களாகிய அரிசி, பருப்பு, நெய், இறைச்சி முதலானவைகளைக் கொண்டு வந்து அந் நெருப்புக் குழியில் கொட்டி நாசஞ்செய்து நாட்டில் உணவுப் பஞ்சத்தை உண்டாக்கி வந்தார்கள்.

அதனால், தன்மதி கடுங்கோபங்கொண்டு எங்கெங்கு நெருப்புக் குழிகளுண்டோ அங்கெல்லாம் சென்று அந்-நெருப்புக் குழிகளை அழித்து அந்த ஆரியர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்துவந்தான்.

ஒரு நாள் நடுக்காட்டில் தனிமையாக ஒரு குடிசை இருப்பதை அறிந்து, அங்கு ஏதாவது நெருப்புக் குழி-வேலை நடைபெறுகிறதாவென்று பார்க்கச் சென்றான்.

அங்க நெருப்புக் குழியில்லை. ஆனால், ஒரு பெண் தன்னந்தனியே இருப்பதைக் கண்டான். தன்-மதிக்கு இரக்கம் பிறந்தது. ஏ, பெண்ணே! நீ ஒரு அனாதையாக இக்காட்டில் தனியே இருக்க வேண்டாம். என்னோடு வா, நான் இந்நாட்டின் மன்னன், உன்னைக் காப்பாற்றுவேன் என்றான். அதற்கு அக் காட்டுப் பெண் சம்மதித்து வந்து அரண்-மனையில் சுகமாக இருந்தாள்.

அதற்குப் பிறகு, ஆண்டுகள் பனிரெண்டாகி-விட்டன. ஆனால், துன்மதியின் கெட்ட எண்ணம் அவனைவிட்டு விலகவில்லை. ஏதாவது துரோகம் செய்தேனும் அண்ணன் அரசை அபகரித்துக் கொள்ள-வேண்டும் என்ற நினைவுக்கும் வந்துவிட்டான்.

அதற்கேற்ப அத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு, அக்காட்டுப் பெண்ணுக்கு ஒரு கணவன் இருப்பதாகத் தெரிய வந்ததும், துன்மதி துள்ளி எழுந்தான் சூழ்ச்சி செய்ய வழி பிறந்துவிட்டது என்று. காட்டுப் பெண்ணின் கணவன் அனுப்பிய தூதன் வந்து காட்டுப் பெண்ணைக்கண்டு உன் கணவன் உன்னைத் தேடிக் கண்கலங்கி நிற்கிறார். நீ உடனே என்னோடு வா என்று அழைத்தான். காட்டுப் பெண் வரமுடியாது என்று தூதனிடம் சொல்லிவிட்டாள்.

அதுவும் துன்மதியின் சூழ்ச்சிக்கு அநுகூலமாகி-விட்டது. உடனே துன்மதி அந்தத் தூதனை அழைத்துக்-கொண்டு தன்மதியிடம் சென்று, தன்மதிக்கும், தூதனுக்கும் தடித்த வாக்குவாதம் நடக்கும்படி சூழ்ச்சிகள் செய்தான்.

தன்னை அவமரியாதையாகப் பேசிய தூதனையும், துன்மதியையும் தன்மதி மன்னித்து விரட்டி விட்டான்.

விரட்டப்பட்ட தூதன், துன்மதியின் பேச்சைக்-கேட்டுத் தன்மதியின் அரண்மனைக்கு தீ வைத்து விட்டுச் சென்றான்.

உணவுப் பொருள்களை மட்டும் நெருப்பில் போட்டுக் கொளுத்தும் ஆரியர்கள், தன்மதியின் அரண்மனையே தீக்கிரையாவது கண்டு ஆனந்தப்பட்டனர்.

கடைசியாக, அக்காட்டுப் பெண்ணின் கணவன், துன்மதி போன்ற மற்றொரு நாட்டுச் சகோதரத்து-ரோகியின் படை பலத்தாலும், துன்மதியின் அய்ந்தாம்படை வேலையாலும் தன்மதி மீது போர் தொடுத்து வெற்றி பெற்றான்.

பிறகு, தன்னை விட்டுப் பனிரெண்டு வருடங்-களுக்கு முன் பிரிந்து அரண்மனைச்சுகம் அனுபவித்து வந்த அக்காட்டுப் பெண்ணைக் கண்டு பிடித்தான். அவளிடம் கடுங்கோப-த்தோடு நான் அனுப்பிய தூதனிடம் தான் வரமுடியாது என்று சொன்ன காரணம் என்ன என்று கேட்டான். அவள் ஏதோ சமயத்திற்குத் தகுந்த பதிலைச் சொன்னாள். அவன் அதில் திருப்தி அடையா-மல் அவளை நெருப்புக்குழியில் போட்டு எரித்து சாம்பலாக்கித் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான்.

தூதன் அக்காட்டுப் பெண்ணைப்பற்றி அவன் கணவனிடம் வந்து விசாரித்தபோது வஞ்சம் தீர்ந்தது- என்று பதிலளித்தான். இராமாயணம் முடிந்தது.

சிறுவர்களே! இதுதான் நம் திராவிடத்தில் நடந்த உண்மையான இராமாயணமாக இருக்க வேண்டும். (பெரியாரின் குடியரசிலிருந்து)

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008