பொறாமைத் தீ!
அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்

கல்விச் சுற்றுலா எல்லா மாணவர்-களுக்கும் மிக இனிமையாகத்தான் முடிந்தது. ஆனால், ஆதவனுக்கு மட்டும் அது உற்சாகம் தரவில்லை. வகுப்பு மாணவர் தலைவனான மனோகரன் எல்லாரையும் சட்டாம்பிள்ளைத்-தனம் செய்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனோகரன்மீது ஏற்கெனவே பொறா-மைத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தான் ஆதவன். சுற்றுலாவில் அப்படி வா, இப்படி வா என்-றெல்லாம் அதட்டியதால் மனோகரன்மீது ஆதவனின்மனதில் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது.
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்-டான். திடீரென்று தீ!தீ! என்று தெருவெல்லாம் சத்தம் கேட்டது. ஆதவ-னின் தந்தை தனசேகரன் அவசரமாகச் சென்று கதவைத் திறந்தார்.
படப்புல தீ வச்சிட்டாங்க... எல்லாரும் ஓடியாங்க!
ஆதவன் படுக்கையை விட்டு எழுந்து கூடவே ஓடினான்.
ஊர்க்கடைசியில் அடுக்கி வைத்திருந்த படப்பில் தீபற்றி எரிந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி பக்கத்தில் இருந்த கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றார்கள். ஆதவனும் தன் பங்கிற்கு உதவியாக இருந்தான். கொஞ்ச நேரத்தில் தீ அணைக்-கும் படையினர் விரைந்து வந்தனர். அரைமணி நேரத்தில் தீ முழுவதும் அணைக்-கப்பட்டு விட்டது. படப்பின் அருகில் இருந்த இரண்டு வீடும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. உயிர்ச்சேதம் இல்லை என்றாலும் பொருள் சேதம் அதிகம் என்று பேசிக் கொண்டார்கள். பக்கத்து ஊருக்கும் இந்த ஊருக்கும் பகை இருந்து வந்ததாகவும், பக்கத்து ஊர்க்காரன்-தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்து சிலர் காவல்துறையில் புகார் செய்தனர்.
வெகுநேரம் விழித்திருந்ததால் ஆதவன் படுக்கையில் படுத்தவுடன் அயர்ந்து தூங்கிப் போய்விட்டான்.
காலையில் தூங்கிவிழித்ததும் ஆதவனுக்கு மனோகரனின் சட்டாம்பிள்ளைத்தனம்தான் ஞாபகம் வந்தது அவனது கொட்டத்தை எந்த வழியிலாவது அடக்கியே தீரவேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.
சுற்றுலா செல்கிற மகிழ்ச்சியில் வீட்டுக் கணக்கை செய்யாமல் விட்டுவிட்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவசரம் அவசர-மாக எழுந்திருந்து முகத்தை அலம்-பினான். கணக்கு நோட்டை எடுத்தான். முதல் கணக்கே ரொம்பவும் தகராறு செய்தது.
ஆதவனின் அன்னை காலைச் சமையலுக்கு தயார் செய்ய முனைந்து கொண்டிருந்தார். தீப்பெட்டியை எடுத்து உரசி அடுப்பைப் பற்றவைத்ததும் அடுப்பில் தீ பற்றிக் கொண்டது. இதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.
அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீயும், நேற்று இரவில் படப்பில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயும் அவன் கவனத்தில் மாறி மாறி வந்தது.
படப்பில் யாரோ பற்றவைத்த தீ படப்பை எரித்து பக்கத்து வீடுகளையெல்லாம் நாச-மாக்கி விட்டது. ஆனால் அம்மா அடுப்-புக்குள் பற்றவைத்த தீயோ சோறு ஆக்கப் பயன்படுகிறதே! இது எப்படி சாத்திய-மாகிறது? இரண்டும் தீதானே! தீவிரமாக யோசித்தான், ஆதவன். ஒரு உண்மை அவனுக்கு விளங்கியது. தீயை வைத்து வீட்டையும் எரிக்கலாம், சோறும் ஆக்கலாம்.
மனோகரன்மீது ஆதவனுக்கு ஏற்பட்டிரு-க்கும் பொறாமைகூட ஒரு தீதானே! அந்தப் பொறாமைத்தீயை அம்மா சோறு ஆக்கப் பயன்-படுத்துவதைப்போல நாமும் ஆக்கபூர்-வமாகப் பயன்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? என்று ஆழமாகச் சிந்தித்தான், ஆதவன்.
அடுத்த மாதம் ஆண்டுவிழாவும் விளை-யாட்டுப் போட்டியும் வருகிறது. ஆண்டு-விழா மாறுவேடப் போட்டியிலும், நாட-கத்திலும் முதல் பரிசை வாங்கிவிட வேண்டும்! விளையாட்டுப் போட்டியில் பல பரிசு-களையும் வென்றுவிட வேண்டும். அது மட்டுமின்றி நன்றாகப் படித்து முழுப்-பரீட்சையில் முதல் மார்க் வாங்கிவிட வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் அடுத்த மாணவர் தலைவர் ஆதவன்தானே?
பொறாமைத் தீயை அம்மா பயன்படுத்திய அடுப்புத் தீபோல் பயன் உள்ளதாகச் செய்-வதற்கு இதுதான் சிறந்தவழி! என்று ஆதவன் முடிவு செய்தபோது அவனுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. |