உருவான உயிர்கள் உருவாக்கிய உயிர்

பிஞ்சண்ணா

கடவுள் உலகத்தைப் படைச்சார்
இருக்கட்டும். கடவுளை யாருவோய் படைச்சார்
கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ, கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?
என்ற அறிவார்ந்த கேள்வியை பெரியார் தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பார்த்திருக்கிறோமே நினைவிருக்கிறதா?

உலகை, உயிர்களைப் படைத்தவர் கடவுள்தான் என்று தான் ஆத்திகர்களும், மத நம்பிக்கையாளர்களும் அளந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் கடவுள் விஷ்க் என்று கையை ஆட்டியவுடன் உலகம் தோன்றியது; உயிர்களும் தோன்றின என்று காலங்காலமாக கதை விட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு மதமோ உயிர்களைப் படைப்பதற்கென்றே ஒரு தனிக் கடவுளை உண்டாக்கியது. அவருக்கு வேலையே சதா உயிர்களைப் படைத்துக் கொண்டிருப்பதுதான். அவரைத்தவிர வேறு யாரும் அப்பணியைச் செய்ய முடியாது என்றது. உயிரை அவனன்றி யாரும் ஆக்க முடியாது என்றது மதம். உலகின் தோற்றம், உயிரின் தோற்றம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்தவர்களை, ஆய்வு செய்யலாம் என்று கருத்துச் சொன்னவர்களைக் கூட விட்டுவைக்காமல் கூண்டிலேற்றினார்கள்; கழுவி லேற்றினார்கள். கொன்று குவித்தார்கள். ஆக மொத்தம் எந்த மதமும் உயிரின் உருவாக்கம் குறித்து யாரையும் எதுவும் பேசவிடவில்லை. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னர் உடைந்து போனது.

உலகை கடவுள் படைக்கவில்லை. சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய எண்ணற்ற நெருப்புப் பந்துகளில் ஒன்றுதான் குளிர்ந்து பூமியானது என்று அறிவியல் சொன்னது. அப்படியானால், அந்த சூரியன் எப்படித் தோன்றியது என்றார்கள் மதவாதிகள்.

பிக் பேங் எனப்படும் பெரு வெடிப்பு நிகழ்ந்தது; சின்னஞ்சிறிய அணுவிலிருந்து தான் பூமியும், சூரியனும், எண்ணற்ற நட்சத்திரங்களும், கோள்களும் கொண்ட இந்த மாபெரும் பிரபஞ்சம் எனப் படும் பேரண்டம் உருவானது என்றனர் அறிவியலாளர்கள்.

அப்படியானால் அந்த பெரு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்றனர் மதவாதிகள். பெருவெடிப்பு எப்படி நடந்திருக்கக் கூடும்; அப்போது தோன்றியிருக்கக்கூடிய ஆற்றல் எப்படியிருந்திருக்கும் என்பதை ஒரு செயல் விளக்கம் போல செயற் கையாகவே பெருவெடிப்பை நிகழ்த்திக் காட்டினார்கள் அறிவியலாளர்கள்.

அது மட்டுமா?

டார்வின் தாத்தா பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம் அல்லவா? ஒரே நாளில் உலகம் தோன்றிவிடவில்லை. உயிரினங்கள் படிப்படியாகத்தான் பரிணாம வளர்ச்சி பெற்றன என்றார்.

குரங்கும் மனிதனும், ஏப் என்ற வேறொரு இனத்திலிருந்து உருவானவை என்றார் அவர்.

ஆகா! இவ்வளவு நாள் கடவுள் தன் வடிவில் மனிதனைப் படைத் தார் என்றல்லவா நாம் சொல்லி வருகிறோம். குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்றால் கடவுள் என்ன குரங்கா? விடக் கூடாது இவனை என்று துள்ளித் துடித்தனர். அப்படியானால் குரங்குக்கு முன்னால் என்ன? அதற்கு முன்னால் என்ன? அதற்கும் முன்னால் என்ன? என்று கேள்விகளை அடுக்கி கட்டிப் போட்டுவிடலாம் என்று திட்ட மிட்டனர் அவர்கள். கேள்விகளுக்கா அறிவியல் சளைக்கும். கேட்கக் கேட்க பதில் கிடைத்தது. கடைசியில் விடை ஒரு செல் உயிரிலிருந்து உயிர் தோன்றியதாக வந்தது. இனி என்ன செய்யலாம்?

"அந்த ஒரு செல் உயிரி எங்கிருந்து தோன்றியது..? எங்களுக்கு நேரமில்லை விடை சொல் விரைவாய்" என்றது மதக் கூட்டம். "தாராள மாய் சொல்லலாமே... உயிரற்ற பொருள்களின் மீது ஏற்பட்ட விளைவு, அமினோ அமிலத்தின் செயல், வேதியியல் மாற்றம் இவைதான் முதல் செல்லின், உயிரின் தோற்றத்திற்குக் காரணம்" என்று அதற்கும் விடை சொன்னது அறிவியல்.

அப்போது தான் நீண்ட காலமாக தேங்கி யிருந்த அந்தக் கேள்வியை மீண்டும் எடுத்து வீசினர் மூடநம்பிக்கையின் மொத்தக் குத்தகை தாரர்களான மதவாதிகள்.

"எப்படியோ வந்ததென்று விடை சொன்னாய்? போகட்டும். அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உன்னால் ஒரு புதிய உயிரை உருவாக்கிக் காட்ட முடியுமா?" என்றொரு கேள்வியை எடுத்து வீசி இறுமாப் புடன் நின்றது மடமைக் கூட்டம்.

"முடியாது என்பது முட்டாள்கள் பேச்சு! நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்! பொறுத்திருங்கள் நாங்கள் உருவாக்கிய உயிரோடு வருகிறோம்." என்று சொன்ன அறிவியல் ஓருயிரிலிந்து அதே மாதிரியில் இன் னொன்றை நகலெடுத்துக் காட்டியது.

ஆம். அப்படித்தான் முதல் குளோனிங் செய்யப்பட்டது. டாலி என்ற ஆடு, பிறகு எலி, குரங்கு, தேவி என்ற மான் இப்படி எல்லா உயிர்களையும் உருவாக்கிக் காட்டியது. மனிதனை உருவாக்க இன்னும் ஒரு அடி தான்... எட்டிப்பிடித்துவிடும் என்ற நிலையில், "போதும் போதும். ஆண்டவன் உருவாக்கிய ஒரு உயிரிலிருந்து இன்னொன்றை உருவாக்கி விட்டீர்கள். நாங்கள் கேட்டது புதிய உயிர். முற்றிலும் உயிரற்ற பொருள்களிலிருந்து ஒரு செயற்கை உயிர். எப்படி வசதி? தோல்வியை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?" என்று தனது தோல்வியை மறைத்துக் கொள்ள பதில் கேள்வி தொடுத்தது.

தொடர்ந்தன ஆய்வுகள்! புதிய உயிர்.. செயற்கை உயிர்... உயிரற்றவற்றிலிருந்து உயிர்! ஆய்வகங்கள்... நூல்கள்... மாதிரிகள்.. முயற்சிகள்.... முடிவில்... வெற்றி... வெற்றி....

அய்யாயிரம் ஆண்டின் கேள்விகளுக்குக் கிடைத்த வெற்றி..! அறிவை விரிவு செய்ததால் கிடைத்த வெற்றி! ஆம் செயற்கை உயிர் உருவானது. முற்றிலும் செயற்கை உயிர்.. உயிர்களின் கட்டமைப்பான டி.என்.ஏ.விற்குள் மனிதன் உருவாக்கிய புதிய உயிர். குழந்தை வடிவில் பொம்மையை உருவாக்கி அதனை மின்சாரம் மூலம் செயல்பட வைப்பதுபோல், வெள்ளாட்டின் மடியில் ஒருவித நோயினை உருவாக்கும் பாக்டீரியாவின் வடிவத்தில் வேதியியல் பொருள்களைக் கொண்டு உயிர் தரப்பட்டுள்ளது. பாக்டீரியா இப்போது செழித்து வலர்ந்து இனப்பெருக்கம் செய்து குட்டிக் குட்டி புதிய பாக்டீரியாக்கள் உருவாகிவிட்டன. அறிவியல் சாதித்துவிட்டது.

பாக்டீரியா என்னும் உயிரை உருவாக்க முடியும் போது, மாடு, ஆடு, பூனை, யானை, மனிதன் ஏன் விரும்பினால் டைனோசரைக் கூட இனி உயிரோடு கொண்டு வரமுடியும்.. வாழும் மனிதனுக்கு நோய்களிலிருந்து மாற்று அளிக்க முடியும்... ஆம் அறிவியல் சாதித்துவிட்டது. கடவுள் மட்டும்தான் படைக்க முடியும் என்று சொன்னவர்கள் இப்போது நடையைக் கட்டிக் கொண்டுவிட்டார்கள். அமெரிக்க அறிவியலார் ஜெ. கிரெய்க் வெண்டர் மற்றும் அவரது குழுவினர் தங்களின் தொடர் முயற்சிகளின் விளைவால் உருவாக்கிய செயற்கை உயிர் தான், இனி அடுத்த கட்ட அறிவியலின் அடிக்கல்.. அறிவைத் தடுத்த கடவுள் கொள்கைக்கு சமாதிக் கல். கிரிக், ஹாமில்டன் ஸ்மித், வாட்சன், சஞ்சய் வாஸி இப்படி எண்ணற்ற உயிர் வேதியியல் வல்லுநர்க ளோடு ராதா கிருஷ்ணகுமார் என்ற நம் தமிழ் நாட்டு அறிவியலாளரும் இணைந்து தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வேதிப்பொருள்களின் வினைதான் உயிர் களின் உருவாக்கம் என்று இத்தனை நாள் கருத்தளவில் நாம் சொல்லி வந்தது இப்போது செய்து காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவின் பெருவெற்றி இது என்று கூடிக் கொண்டாடு வோம். மடமையைப் பந்தாடுவோம்.

Bookmark and Share

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008

>