எரிமலை எப்படிப் பொறுக்கும்?

"எரிமலை எப்படிப் பொறுக்கும்

நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்"

மே - 1 தொழிலாளர் நாளையொட்டி வீதியில் தான் கேட்ட பாடலை முணுமுணுத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான் புருனோ. "என்ன பாட்டு இது" என்றாள் குறிஞ்சி.

"தமிழ்ப் படப் பாட்டுதான். சிவப்பு மல்லின்னு ஒரு படத்தில் வந்தது. தொழிலாளர்கள் தினமான மே தினத்தையொட்டி நடக்குற ஊர்வலத்தில பாடுற மாதிரி பாட்டு இது." என்று பதில் தந்தான் புரு.

"தொழிலாளர் தினம்னா?" என்று வியப்பாய்க் கேட்டான் சிபி. "அப்படின்னா குழந்தைகள் தினம், மகளிர் தினம்னு எல்லாம் இருக்கிற மாதிரி கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளர்களோட உரிமைக்கான, போராட்டத்துக்கான அடையாளமா இருக்கிறது தான் மே தினம்னு சொல்லப்படுற தொழிலாளர் தினம். சரியா புரு?" என்றாள் பவானி.

"ரொம்பச் சரி. இந்தியாவிலேயே முதன் முதலா 1923-ல தமிழ்நாட்டிலதான் மேதினக் கொண்டாட்டம் ஆரம்பிச்சது. உழைப்பாளர் தினத்துக்கென்று எவ்வளவோ பாட்டுகள் இருந்தாலும் 'எரிமலை எப்படிப் பொறுக்கும்'ங்கிற இந்தப் பாட்டு ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமான பாட்டு. எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தவனை இடை மறித்த தமிழீழம், "ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... புரு" என்றாள்.

"என்ன?" என்றார்கள் அனைவரும்.

"நல்ல வேளை நினைவுபடுத்தின. நான் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன்." என்றாள் மேலும் புதிர் போட்டபடி.

"என்னாது?" என்றான் சூர்யா வடிவேலு பாணியில்.

"அய்ஸ்லாந்தில எரிமலை வெடிச்சுக்கிட்டிருக்கே அதைப் பத்தி தான் கேட்கணும்னு நினைச்சேன்; மறந்துட்டேன்" என்ற தமிழீழம், தனக்குத் தோன்றிய கேள்வியை உடனடியாகக் கேட்டுவிடும் அவசரத்தோடு, "அதெப்படி புரு? பனிமலைகள் இருக்கிற அய்ஸ்லாந்தில, பனிமலையே எரிமலை ஆகியிருக்கும். எனக்குப் புரியவேயில்லை" என்று கேட்டாள்.

"ஆமா... அய்ஸ்லாந்தில எப்படி எரிமலை வரலாம். லாஜிக் இடிக்குதே" என்று குறும்புத் தனத்தைக் காட்டினான் சிபி.

"சரி தான் நீங்க யோசிக்கிறது. ஆனா தப்பு!" என்றான் புரு.

"அதென்ன 'சரிதான்; ஆனா தப்பு'?" என்றார்கள் பிஞ்சுகள். "ஆமா.. பனி சூழ்ந்த பகுதி, அதுவும் பனி மலை. இருக்கிற குளிர்ல நெருப்பே அணைஞ்சிடும். அப்படி இருக்கிற இடத்தில எப்படி எரிமலை வெடிப்பு; நெருப்புக் குழம்பு அப்படின்னு யோசிச்சீங்களே! அது சரி. ஆனா, பனிமலையா இருந்தாலும் அதுவும் பூமியிலதான் இருக்குன்னு யோசிக்க விட்டுட்டீங்களே அது தப்பு" என்ற புரு தொடர்ந்தான்.

"பூமிங்கிறது சூரியன்ல இருந்து தெறிச்சு விழுந்து ஆறிப்போன ஒரு நெருப்புக் கோளம்னு ஏற்கெனவே நமக்குத் தெரியும்ல.. பூமியினுடைய மேல் ஓடு தான் ஆறிப்பொயிருக்கே தவிர, உள்ளுக்குள்ள இன்னும் நெருப்புக் குழம்புகள் அப்படியேதான் இருக்கு. மெல்ல மெல்லத் தான் ஆறும். நம்ம சாப்பிடுற போண்டாவோட மேல் பகுதி ஆறியிருந்தாலும் உள்ளுக்குள்ள சூடு இருக்கும் இல்லையா? அது மாதிரி தான்"

"சரி, அப்புறம் ஏன் அது வெளியே வருது? உள்ளுக்குள்ளேயே பத்திரமா இருக்க வேண்டியது தானே" என்றான் சூர்யா.

"இங்கே பாரு உனக்குப் பதில் சொல்ற மாதிரி இந்தக் கட்டுரை இருக்கு. இதை சத்தமா படி" என்று புருனோ கொடுக்க, உரக்கப் படித்தாள் குறிஞ்சி.

"பாறைகள் புவிக்கு மிகவும் ஆழத்திற்குத் தள்ளப்படும்போது வெப்பத்தால் உருகிக் கற்குழம்பு ஆகின்றன. உருகி, நீர்ம நிலையில் இருக்கும் இந்த கற்குழம்பு தொடர்ந்து அப்படியே இருக்கும் சூழல் இல்லாமல் போகும்போது, குளிர்ந்து உறுதியாகி தீப்பாறையாக மாறும். இவ்வாறு புவிக்கடியில் உருவாகும் தீப் பாறைகள், பாதாளப் பாறைகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் அது கற்குழம்பாக உருகிய நிலையில் இருக்கும்போது புவியின் இடைத் தட்டுகளில் ஏற்படும் அசைவால் அல்லது பிளவால் தீ குழம்பை வெளியேறுவதை தான் எரிமலை வெடிப்பு என்கிறோம். புவியின் மேலுள்ள வளிமண்டலத்திற்கு தீ குழம்பு வரும்போது விரைவாகக் குளிர்ச்சியடைவதால் எரிமலைப் பாறைகள் உருவாகின்றன."

அப்படியே அவர்கள் முழுதாக எரிமலைகள் பற்றித் தெரிந்து கொள்ள உதவிய செய்திகளை நாமும் படிப்போமா?

எரிமலைகள் உள்ள இடங்களிலும், எரிமலைகள் தணியும் திடல்களிலும் "வெந்நீர் ஊற்றுகள்" தோன்றுவது இயற்கை. ஐஸ்லாண்டின் சொல்லான 'கெய்ஸர் ' என்பது விட்டுவிட்டு எழும்பும் வெப்ப நீரூற்றுக்களைக் குறிக்கும். எரிமலைகளின் சீற்றம் ஓய்ந்து ஆறி அடங்கும் நிலையைக் இந்த வெப்ப நீரூற்றுகள் வெளிப்படுத்தும். அடித்தளத்தில் சூடாகிக் கொண்டிருக்கும் நிலை தணிவதை இந்த வெந்நீர் ஊற்றுக்கள் மிக உயரமாக எழுந்து பாய்வது அறிவிக்கின்றது. இவ்வாறான வெந்நீர் ஊற்றுகளி லிருந்து வெளிவரும் நீரில் பல்வேறு உப்புகள் தாதுக்கள் கலந்துள்ளதால் சில நோய்கள் குணம டையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எரிமலைகள் பலவிதம்! இதுவரை உலகின் பலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றங்கள் ஐந்து மாதிரிகளில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதலாவதாக எரிமலை சீற்றங்கள் உயரமாக இல்லாமல், தீக்குழம்பு ஆற்று வெள்ளம் போல் வெளிவருவது. இரண்டாவதாக, உறுதியாக ஒட்டிக் கொள்ளும் திட்டுத் திட்டான தீக்குழம்பை வெளியேற்றுவதோடு, எரியும் வாயுவையும், சாம்பலையும் வெளியேற்றுவது. மூன்றாவதாக, சிறிது சிறிதாக வெளிப்படும் ஒட்டும் தன்மையுடைய தீக்குழம்புடன் மின்னும் தீப்பொறிகள், வாயுக்கள், சாம்பலை வெளியேற்றுபவை. நான்காவதாக, தீவிர வெடிப்பும், உறுதியான தீக்குழம்புக் குண்டுகளையும் வெளியேற்றுபவை. ஐந்தாவதாக, மிக அதிக உயரத்தில் எழுந்து பொழியும் நச்சு வாயுக்கள், கருஞ்சாம்பல், கற்பாறை வீச்சுகளை கொண்டவை. எரிமலை சீற்றம் இடம்பெயர்தல், உயிரிழப்பு, காலநிலை பாதிப்பு என பல இன்னல்களை மக்களுக்கு கொண்டு வருகிறது.

உலக நாடுகளை முடக்கியுள்ள தெற்கு ஐஸ்லாந்தில் சீறிக் கொண்டிருக்கும் எரிமலை காலநிலையில் எத்தகைய பாதிப்புகளை கொண்டுவரும் என்பதில் வானிலை ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த எரிமலையால் வளிமண்டலத்திற்கு மேலே பரவியுள்ள தூசி திரள் பல ஆண்டுகள் அப்படியே இருந்து சூரிய வெப்பம் புவிக்கு வந்தடைவதை தடுத்துவிடும். இதனால் உலக வெப்பநிலை குளிராகும் என்று வியென்னா பல்கலைக் கழகத்தின் வானிலை ஆய்வாளர் ஹர்பர்ட் பர்மேயர் தெரிவித்துள்ளார். வளிமண்டலத்திற்கு மேலே ஏறக்குறைய 12 கிலோமீட்டர் உயரத்திற்கு அப்பால் மிக குறைந்த ஈரப்பதம் கொண்ட பகுதியுள்ளது. இதனால் தான் இப்பகுதியில் மிகவும் குறைவான மழையும், காற்றும் காணப்படுகின்றன. இந்த பகுதியை அடையும் எரிமலை தூசி திரள் பல ஆண்டுகள் அங்கேயே தங்கிவிடும். ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே தூசிகள் அங்கு தங்கிவிடுவதால் புவிக்கு வருகின்ற சூரியகதிர்கள் தடுக்கப்பட்டு உலக காலநிலை குளிர்ச்சியடைய காரணமாகிவிடும் என்று ஹர்பர்ட் பர்மேயர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிமலையால் ஏற்பட்ட புகை, தூசி, சாம்பல் ஆகியவை மக்களின் உடல்நலனில் ஏற்படுத்தும் தாக்கங்களை பற்றி இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஐஸ்லாந்து எரிமலை அமைதியடையும் வரை மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க உலக சுகாதரா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. எரிமலை சாம்பல் ஆபத் தானது என்றும், மூச்சு வழியாக உள்ளிழுக்கப் படும் எரிமலை துகள்கள் நுரையீரல் சென்று மூச்சுக்குழாய் சார்ந்த நோய்களை உருவாக்கும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக்குழாய் சார்ந்த பிரச்சனையுள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளது. ஆனால், எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்திற்கு பக்கத்திலுள்ளோர் மட்டுமே இந்த சாம்பல் மற்றும் தூசு தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். தொலைவில் உள்ளோரை இது அதிகமாக பாதிப்பதில்லை. அப்படியே ஏற்படும் பாதிப்பு புகைபிடித்தல் மற்றும் மாசுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட மிகவும் குறைவே என நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இந்த துகள்கள் வளிமண்டலத்தில் இருக்கும்போது காற்றோடும் பிற துகள்களோடு கலந்து பாதிக்கும் திறனை இழந்து விடுவதால் தொலைதூர மக்கள் அதிகமாக பாதிக்கப் படுவதில்லை. எனவே எரிமலை துகள்களை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இயற்கை சீற்றங்களின் வரிசையில் ஒன்றான எரிமலை சீற்றம் உலக செயல்பாடுகளை முடக்கிபோட முடியும் என்பதை தெற்கு அய்ஸ்லாந்தில் ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றம் உறுதி செய்துள்ளது. வருமுன் காப்பதே நல்லது. எனவே எரிமலை துகள்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்வதும் சிறந்ததே. இதன் பாதிப்புகளை கண்டறிந்து, ஆய்ந்து, சமாளிப்பது நமது இணைந்த செயல்பாட்டில் தான் வெற்றியடையும்."

"படிச்சீங்களா? சீன வானொலியோட தமிழ் பதிப்புல இந்தச் செய்தி வந்திருந்தது. இன்னும் அய்ஸ்லாந்தில எரிமலை வெடிச்சதினால் என்னென்ன ஆச்சு தெரியுமா?" விமானப் போக்குவரத்தையெல்லாம் ஒன்றிரண்டு நாள் அப்படியே நிறுத்திட்டாங்க. அந்தப் பகுதி முழுக்க வானத்தில இருந்த புகை மூட்டத்தினால உடல் நிலைக் கோளாறில இருந்து ஏகப்பட்ட சிக்கல். தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள இயாஸ்யாத்திலாயோகுச் என்ற பனிமலையில திடீர்ன எரிமலை வெடிச்சு தீக்குழம்பை கக்க ஆரம்பிச்சது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவின தீ குழம்பு, அருகிலுள்ள பனி மலையை தாக்கினதால, பனிக்கட்டியோட சேர்ந்து வெள்ளம் பெருக ஆரம்பிச்சிடுச்சு. ஏப்ரல் 14-ஆம் தேதி தான் எரிமலை சீற ஆரம்பிச்சது. ஆனா அதுக்கு முன்னாடியே அதுக்கான அறிகுறிகள் மார்ச் 20-ஆம் தேதியில இருந்தே ஆரம்பிச்சிடுச்சாம். அதுக்குப் பிறகு 10, 15 நாட்களுக்கும் மேல இதே நிலை தொடருது. "இப்போதுதான் எனக்குப் புரியுது. அடங்கி இருக்கிற இந்தத் தொழிலாளர்கள் எல்லாம் எரிமலை மாதிரி வெடிக்க ஆரம்பிச்சா என்னாகும்னு யோசிக்கத் தான் "எரிமலை எப்படிப் பொறுக்கும் பாட்டா?" என்றாள் தமிழீழம்.

"ஆமா இப்படி வெளிவந்த எரிமலைக் குழம்புகளில் இருந்து நிறைய தாதுக்கள் கிடைக்குமாம். அது மாதிரி, ஒடுங்கியிருக்கிற தொழிலாலர்கள் ஒன்றுபட்டு எழுந் தாலும் அது உலகத்துக்கு நன்மைதான். எப்புடீ?" என்று இழுத்த புருவுக்கு, "அப்படித்தான்" என்று எல்லோரும் ஒரே குரலில் பதில் தந்தார்கள் பிஞ்சுகள்.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008