சின்னக்கதை - பகுத்த்றிவுச் சுடர்
தாதா

குன்னக்குடியிலே கன்னக்கோலய்யன் என்ற ஒரு சோம்பேறிப் பார்ப்பான் இருந்தான். அவன் பரம்பரை பரம்பரையாய்ச் சோசியம் சொல்வதாக ஏதோ உளறி ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கும் உலுத்தர் குடும்பத்தில் பிறந்தவன்.
ஒரு நாள், குன்னக்குடிக்கோயில் குழவிக்-கல்லைக் கழுவி வயிறு வளர்க்கும் சின்னக்குடிக் காலாடி அய்யனைக் கன்னக் கோலய்யன் சந்தித்து, ஓய் காலாடி; உம்ம பிழைப்புத்தான் வரவரக் குறைந்-துண்டே வருதேங்காணும்! அதைத் தொலைச்சுத் தலையை முழுகிண்டு சோசியம் சொல்லக் கத்துக்கப்-படாதோ? என்றான்.
சோசியந்தான் என்ன வாழ்றது? சூத்திராளுந்-தான் சோசியம் சொல்லிண்டலையறா! எல்லார் பிழைப்-புந்தானேங்காணும் சந்தி சிரிச் சுண்டிருக்கு! என்றான் காலாடி.
அவர்கள் இருவரும் அவ்வாறு பேசிக்-கொண்டிருக்கும் போது, அவ்வூர் அம்பலக்காரர் மகன் குமரன் பள்ளிக்கூடப் புத்தகங்களைச் சுமந்து-கொண்டே அங்கு வந்தான்.
குமரனைக் கண்ட கன்னக்கோலய்யன், வாடிக்-கையாகச் சரக்கு வாங்கிச் செல்ல வருப-வனைக் காணும் கடைக்காரனைப்போல் முகமலர்ச்சி-யோடு வரவேற்று, அம்பலம் என்னை அழைச்-சுண்டு வரச் சொல்லுச்சா....?என்று ஆவலோடு கேட்டான்.
உன்னை இல்லை. சின்னக்குடிக் காலாடி அய்யரைத்-தான் கையோடு கூட்டிக்கொண்டு வரும்படி அப்பாவின் கட்டளை. என்றான் குமரன்.
காலாடி அய்யன் மிக்க மகிழ்ச்சியோடு குமரனை நோக்கி இன்றைக்கு உங்க ஆத்துலே என்ன விசேஷம்? என்று கேட்டான்.
என்ன விசேஷமாக இருக்கலாம் என்பதைக் கன்னக்கோலய்யரைச் சோசியம் பார்த்துச் சொல்லச் சொல்லும், பார்க்கலாம்என்றான் குமரன்.
உடனே கன்னக்கோலய்யன் பஞ்சாங்கத்தைக் கையில் எடுத்தான்; ஏதோ இரண்டு மூன்று எண்-களைப் போட்டுக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்துப் பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மலரின் பெயர் சொல் என்று குமரனிடம் கேட்டான்.
மல்லிகை என்று குமரன் கூறினான்.
மல்லிகையா! சரி. அப்படியானால்... இப்போது உங்காத்தில்... உம்... மங்கலகரமான ஒரு விசேஷந்தான் நடந்தாக வேண்டும்! என்றான் கன்னக்-கோலய்யன். இல்லை என்று மறுத்து விட்டான் குமரன்.
இல்லையா? என்று ஆச்சரியப்படுபவனைப் போல் பாசாங்காக நடித்து முணு முணுத்துக் கொண்டே உம். இன்னொரு மலரின் பெயர், அல்லது ஏழுக்கு மேலே இருபதுக்குள்ளே ஏதாவது ஒரு எண் சொல்லு பார்க்கலாம், என்றான் கன்னக்கோலன்.
எட்டு என்றான் குமரன், ஊம்! அப்படி-யானால்...... அமங்கலகரமான காரியந்தான் நடந்தாக வேண்டியிருக்கிறது. இதில் சந்தேகமே இல்லை, என்றான் கன்னக்கோலய்யன்.
ஒரு வீட்டில் ஏதாவது ஒரு காரியம் நடை-பெற்றால் மங்கலம் அல்லது அமங்கலம் என்ற இரண்டில் ஒன்றாகத்தானே இருக்கும்! இதை நீர் சொல்லித்-தான் தெரிய வேண்டுமோ? சென்ற ஆண்டு நீர் நல்ல நாள் பார்த்துச் சுப முகூர்த்தம் குறித்துக் கொடுத்த பிறகு தான் என் அண்ணனுக்-குத் திருமணம் நடந்தது; அதே அண்ணனுக்குத் திவசம் கொடுக்கத்தான் இந்த ஆண்டு காலடி அய்யரை அழைத்துக் கொண்டு போக வந்திருக்-கிறேன். மங்கல மந்திரம் ஓதி மூட்டை கட்டிக்-கொண்டு சென்ற மறு ஆண்டுக்குள்ளாகவே, அமங்கல மந்திரமும் ஓதி அரிசி, காய்கறி பருப்பு-களை அள்ளிக் கொண்டு போக ஆயத்தமாகவும் இருக்கிறார் இந்த அய்யர்! இப்படிப்பட்ட உங்கள் மந்திரங்-களையும், சோசியங்களையும் நெருப்பில் போட்டுக் கொளுத்தினால்தான் என்ன? என்று கோப-மாகக் கூறினான் குமரன்.
அதைக் கேட்ட கன்னக்கோலய்யனுக்கும், காலாடி அய்யனுக்கும் ஆத்திரம் பொங்கி விட்டது. இருவரும் சேர்ந்துகொண்டு குமரனைத் தாறு-மாறாகத் திட்டி அற்பாயிசில் சாகக்கடவாய் என்று சபித்தனர்.
குமரனும் பதிலுக்குப் பதில் நன்றாகத் திட்டி-விட்டு நீங்கள் வாழ்த்திய வாழ்த்தில் என் அண்ணன் வாழ்ந்து விட்டான்! இப்போது நீங்கள் சபித்தவுடன் நாங்கள் செத்துவிடுவோம்!! இல்லே....? என்று ஏளனமும் செய்தான்.
அவ்வளவுதான், குமரனைப் பிடித்து அடிக்கக் கன்னக்-கோலய்யன் துள்ளி எழுந்தான். எழுந்த வேகத்தில், அவன் வீட்டு நிலையில் அவனே மோதி மண்டையை உடைத்துக் கொண்டான். இரத்தம் பீறிட்டு வடிந்தது. காலாடி அய்யன் கன்னக்-கோலய்யனை அப்படியே அழைத்துக் கொண்டு-போய் குமரனின் அப்பாவிடம் காட்டிக் குமரன்தான் இப்படி மண்டையை உடைத்து விட்டான் என்று பழி சுமத்தினான்.
அம்பலக்காரர் கன்னக்கோலய்யன் நிலையைக் கண்டு மனங்கலங்கித், தன்மகன் குமரன் குற்ற-வாளிதானா என்றுகூட விசாரிக்காமல், குமரனைப் பிடித்துத் தடியால் பலமாக அடித்து விட்டார்.-
குற்றமற்ற குமரன் தன் தந்தையால் கொடு-மையாகத் தாக்கப்படும் போது, பயந்து நடுநடுங்கி விட்டான். அதே நோயாகச் சில தினங்கள் அவன் படுக்கையில் கிடந்தும் புலம்பிக் கொண்டிருந்தான்.
குமரனுடைய தாயார் குமரனின் புலம்பலைக் கண்டு அவன் அருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அம்பலக்காரரும் தன்னுடைய மூர்க்கத்தனத்திற்காக வருந்திய வண்ணம் குமரன் உடம்பில் மருந்து தடவிக்கொண்டிருந்தார்.
குமரன் ஒருநாள் திடீரென்று புலம்பலை நிறுத்திவிட்டு அம்பலக்காரரை நோக்கி அப்பா! சோசியம் என்பது உண்மைதானா.....? என்று மெதுவாகக் கேட்டான். அதற்கு அம்பலக்காரர் ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருப்பதைக் கண்ட குமரனின் தாயார் ஆமடா கண்ணே! அதுவும் ஒரு சாஸ்திரந்தானே! நீ உன் பள்ளிக்-கூடத்தில் பூகோள சாஸ்திரம், தாவர சாஸ்திரம் என்று பல சாஸ்திரங்களைப் படிக்கிறாய்யல்லவா?. அதைப்போலவே சோதிட சாஸ்திரம் என்றும் ஒரு சாஸ்திரம் இருக்கிறது என்றாள்.
அப்படியானால், அதை ஏனம்மா பள்ளிக்கூடப் பாடங்களில் ஒன்றாக வைக்கவில்லை? என்று கேட்டான் குமரன்.
அது என்னமோப்பா எனக்குத் தெரிய-வில்லையே! என்றாள் குமரனின் தாயார். அப்போது, அம்பலக்காரர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சோசியம் கற்றுக்கொடுப்பதால், பிற்காலத்தில் அப்பிள்ளைகளால் அரசாங்கத்திற்கு என்னடா பிரயோசனம்? என்று கேட்டார்.
ஏம்ப்பா பிரயோசனமில்லை? மாணாக்கர்கள் சோசியப் பரீட்சையில் தேர்ச்சிபெற்று, பதவிக்-கு வரமுடிந்தால், இரகசிய போலீஸ் இலாகாவையே நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இரண்டு சோசியப் பட்டதாரிகளை நியமித்துவிட்டால் அரசாங்கத்திற்கு எவ்வளவு இலட்சக்கணக்கான ரூபாய்கள் மிச்சப்படும்!
கொஞ்சங்கூடச் சங்கடமே இல்லாமல் திருடர்-களையும், திருட்டுக்களையும் கண்டுபிடித்து விடலாமே! உண்மையான குற்றவாளிகளையும், கொலையாளிகளையும் கண்டுபிடித்து நிரபராதிகளின் உயிர்களைக் காப்பாற்றலாமே! இன்னும் அரசாங்-கத்தின் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வி என்பதே இல்லாமல் செய்துவிடலாமல்லவா?
சோசியம் உண்மையானதாக இருந்தால், இவ்வளவு காலமாக அரசாங்கத்தார் அந்த சாஸ்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ளாமல் சோம்-பேறிகளாய் ஏன் இருந்தார்கள்? அல்லது சோசியம் பொய்யானதாக இருந்தால், அந்தப் பித்தலாட்டங்-களை ஏன் இந்த அரசாங்கத்தார் சூதாட்டம்போல் கருதித் தடைவிதிக்காமல் இருந்தனர்? என்று கேட்டான் படுக்கையில் கிடந்தவாறே பல நாள் சிந்தித்து வந்த குமரன்.
அம்பலக்காரர் உள்ளத்தில் ஏதோ ஓர் புதிய உணர்ச்சி சுளீர் என்று பாய்ந்தது! உடனே குமரனைக் கட்டித் தழுவி என் கண்மணியே! பகுத்தறிவுச் சுடரே!! இனிமேல் இந்தக் குன்னக்குடிக்கு ஏழேழு தடவைகள் காவடி எடுத்தாலும், எந்தப் பார்ப்பானும் நம்வீட்டு நன்மை தீமைகளில் தலையிடவோ, ஒரு செம்புச் சல்லியைக் கூடச் சுரண்டிக்கொண்டு போகவோ நான் அனுமதிக்கவே மாட்டேண்டா கண்ணே! என்றார்.
உடனே குமரன் மகிழ்ச்சியோடு குதித்தெழுந்து பள்ளிக்-கூடத்திற்கு ஓடிவிட்டான். அவன் நோய் போன இடமே தெரியவில்லை. அன்று முதல் அம்பலக்காரர் வீட்டில் பகுத்தறிவுச் சுடர் பிரகாசிக்க ஆரம்-பித்துவிட்டதைக் கண்ட குன்னக்குடிப் பார்ப்-பனர்கள்,. குழவிக்கல்லைக் கண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கின்றனர்.
- குடிஅரசு (18.09.1948)
|