எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீர்கள்? - [ 8 ]
வேலை நிறுத்த உரிமை என்பது...

1. அன்புள்ள மிஸ்! வேலை நிறுத்த உரிமை என்பது ஒவ்வொரு தொழிலாளியின் புனிதமான உரிமை என ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால் எங்களைப் போன்ற மாணவர்களுக்குக் கற்பிக்கிற உங்களைப் போன்றோரின் வேலைநிறுத்தம் எப்படியிருக்க வேண்டும், தெரியுமா மிஸ்?
நீங்கள் காந்தியடிகளைப் படிக்கும்போது நிறைய மாற்றுப் போராட்ட முறைகளை அவர் கையாண்டதைத் தெரிந்து கொள்ளலாம்.
நீதிபதிகளைப்போல நீங்கள் போராட வேண்டும். தேர்வுகள், மதிப்பீடுகள், அறிக்கைகள் ஆகிய பணிகளை நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால் எங்களைப் போன்ற ஏழை மாணவர்களின் வகுப்பு நேரங்களைப் புறக்கணித்துவிட்டு நீங்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது. இதன் மூலம் மக்களின் நன்மதிப்பை நீங்கள் மேலும் பெறுவீர்கள். பள்ளி நேரங்களிலும், பள்ளி நாள்களிலும் அரசாங்கம் பள்ளிகளை நடத்தட்டும். மாலை நேரங்களில், கோடை விடுமுறைகளில் வேறு யாரேனும் நடத்த முன்வர வேண்டும். அது வர்க்க வேறுபாடுகளற்ற பள்ளிகளாக, அனைவரையும் அனுமதிக்கிற பள்ளிகளாக இருக்க வேண்டும்.
அது இறை நம்பிக்கையாளர்கள், நாத்திகர்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற இலக்குகளை நிறைவேற்றுகிற பள்ளியாக இருக்க வேண்டும். எல்லா நாள்களிலும் நடத்தப்படுகிற ஏழைகளின், இயலாதோரின் அத்தகைய கல்வித் தேவையை நிறைவு செய்கிற முழு நேரப் பள்ளியே தற்போது தேவைப்படுகிறது மிஸ்.
ஆனால் மிஸ்! மக்களுக்கான புதிய கல்வித்திட்டம் இத்தாலியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போது இது பற்றியெல்லாம் நாங்கள் ஏதும் கருத்துத் தெரிவிக்க முடியவில்லை. காரணம் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை.
உங்கள் பாராளுமன்றக் கட்டிடங்களில், விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் பற்றிய விவாதம், விவசாயத் தொழிலாளர்களான எங்களின் பிரதிநிதித்துவம் இன்றியே நடந்தது.
எங்கள் செவிகளுக்கும் செயல்களுக்கும் எட்டாத வெகுதூரத்தில் நீங்கள் நடத்திய சலசலத்த விவாதங்கள் நடந்து முடிந்து விட்டன.
பாராளுமன்றம் இரு குழுக்களாக விவாதித்தது. வலதுசாரிகள் பாடத்திட்டத்தில் ஒன்றைத் திணிக்க முடிவு செய்தார்கள். இடதுசாரிகள் வேறொன்றைச் சேர்க்கக் குரலெழுப்பினார்கள்.
உங்களைப் போன்ற ஆசிரியர்களால் பெயிலாக்கப்பட்டு பள்ளிக் கனவுகள் தகர்ந்து இடையில் கல்வியை இழந்து வெளியேற்றப்படும் எங்கள் நிலையை ஒருவரும் உணரவில்லையே மிஸ்!
நாம் நமது குழந்தைகளை டாக்டர்களாகவும் இஞ்சீனியர்களாகவும் ஆக்குவதை மறந்துவிட்டு தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றுவோம்! நாங்கள் விவாதங்களில் பேசுவதற்கான அதிகாரம் பெறும் போது, எங்கள் குழந்தைகள் பல்கலைக் கழகங்களின் பட்டங்களையெல்லாம் பெற்று சிறப்பான பதவிகளையெல்லாம் பெறுவார்கள். மிஸ்! நாங்கள் அதிகாரங்களைப் பெறுவதுபற்றிக் கவலைப்படாதவரை எங்கள் குழந்தைகளும் எங்கள் நிலையிலேயே நீடிக்க வேண்டிவரும்.
அதிகாரங்களில் ஏழைகள் பங்கு பெற்றால் மட்டுமே கல்வியும் அவர்களுடையதாகும் மிஸ்!
மாற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.
பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால், எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது.
மிஸ்!
எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத மாற்றங்களை, சூழல்கள் உருவாக்கும். அதற்கு எதிராக நின்று கொண்டு உங்கள் ஆன்மாவை, அன்பைக் கறைப்படுத்திக் கொள்ளாதீர்கள் மிஸ்!
நிறைவு
|