அறிவுச்சுரங்கம் - நூல்கள்

அப்பா எனக்கு வாங்கித் தந்தார்
அழகு நூல்கள் இரண்டு - நான்
ஆசைகொண்டு கற்றுவந்தேன்
அறிவின் தாகம் கொண்டு!

எப்போதுமே எனக்கு நல்ல
இனிய நூல்கள் பிடிக்கும் - அவை எடுத்துச் சொல்லும் கருத்துகளில் ஏற்றம் நமக்குக் கிடைக்கும்.

நூல்கள் நமக்கு நல்ல நண்பன்
நூறுமுறையும் சொல்வேன் - அதை
நேரடியாய் அனுபவிப்பேன்
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்வேன்.

ஆண்கள் பெண்கள் வேறுபாடு
அறிவு பெற்றால் இல்லை - நம்
அத்தனைபேர் உள்ளத்திலும்
ஆனந்தமே எல்லை

நூலகத்தைத் தேடிச் சென்றால்
நுண்ணறிவு கொடுக்கும் - நல்
நுழைவு வாயில் வெற்றி வாழ்வில்
நேரடியாய் கிடைக்கும்

அறிவுச் சுரங்கம் நூல்கள் காட்டும்
அள்ளிக் கொள்ளத் தூண்டும் - அதை
அடைந்து விட்டால் புகழின் உச்சி
ஆகாயமும் தாண்டும்.

- கவிஞர் நீரை.அத்திப்பூ, வண்டலூர்

 

Bookmark and Share