தீ மிதிப்பது கடவுள் அருளா?

மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா என்ற சுவரொட்டி, பேருந்தில் சென்று கொண்டிருந்த தங்கமணியின் கண்களில்பட்டது.

இருபத்தியோராம் நூற்றாண்டிலும்.... இந்த மக்கள் எப்பத்தான் திருந்துவாங்களோ! என்று வாய்விட்டு அலுத்துக்கொண்டார். என்ன சொல்றீங்க! அருகிலிருந்த அங்கமுத்து கேட்க,

பின்ன என்னங்க, செவ்வாய்க்கு மனிதன் போனாலும், இந்தச் செம்மறியாட்டுக் கூட்டங்கள் மாறாது காட்டுமிராண்டிச் செயல்களைச் செய்துகொண்டுதானே இருக்கின்றன! எழுபது வருஷம் பெரியார் பிரச்சாரம் செய்தும், இன்னும் தீமிதிக்கிறது, அக்கினிச் சட்டி தூக்கறது மாறலயே...! அறிவியல் பாடம் நடத்தற ஆசிரியர்-தான் முதல்ல தீமிதிக்கிறார். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லங்கறது எவ்வளவு சரியா இருக்குபாருங்க என்று ஆத்திரமும் ஆதங்கமும் கலந்து பொங்கினார்.

ஏங்க, கடவுள் சக்தி இல்லாமலா நெருப்பு சுடாம இருக்கு? நீங்க என்ன இப்படிப் பேசறீங்க!
அப்படியா.... ஒரே ஒரு துண்டு நெருப்பைத் தரையில்போட்டு, கடவுள் பேரைச் சொல்லி எந்த பக்தனாவது அதன் மீது நிற்கத் தயாரா?

பழுக்கக் காய்ச்சிய செப்புத் தகட்டில் எந்த பக்தனாவது கடவுள் பேரைச் சொல்லிக்-கொண்டே நடந்து போகத் தயாரா? கடவுள் சக்தியின்னா இதையெல்லாம் செய்யச் சொல்லுங்க! ஏன் நீங்கதான் செய்யுங்களேன்!

அருகிலிருந்தவர் வாயடைத்து அமைதி-யானார். அவரது சிந்தனைகள் அதிர்-வுடனும், அறிவுடனும் சுழல, அதுவரை அவருக்கிருந்த ஆணித்தரமான நம்பிக்கை தகர்ந்து குலைய,
பின் எப்படி தீமிதிக்கும்போது சுடாமல் இருக்கிறது? உண்மை அறியும் ஆவலுடன் கேட்டார்.

கடவுள் பக்தியால், பழுக்கக் காய்ச்சிய செப்புத்தகட்டில் நடக்கமுடியாது; நெருப்புத் துண்டின்மீது நிற்க முடியாது என்றால், கடவுள் சக்தியால் சுடாது என்பது பொய் என்பது புரிகிறதா? தங்கமணி கேட்டார்.

அதுசரி, தீமிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்? தனக்குள்ள சந்தேகத்தை மீண்டும் வலுவுடன் கேட்டார்.

தீக்குழியில் தீ சுடாமல் இருப்பதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. சுடாமல் இருப்பதற்கான நிபந்தனைகள் என்றும் அவற்றைக் கூறலாம்.

(1) நெருப்பு அதிக அளவில் சமமாகப் பரப்பப்பட்டிருக்க வேண்டும்.

(2) நெருப்பில் நீறுபூத்த சாம்பல் இருக்கக்கூடாது.

(3) கால் ஒரே இடத்தில் நில்லாமல் மாறி மாறி எடுத்துவைக்கப்பட வேண்டும் (விரைவாக நடக்க வேண்டும்). இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே தீமிதிக்கமுடியும். இதில் ஒன்று சரியாக இல்லையென்றாலும் நெருப்பு சுட்டுவிடும்.
சாம்பல் நீக்கப்படாத நெருப்பில் யாரும் தீ மிதிக்கமுடியாது. அதனால்தான் தீக்குழியில் உள்ள நெருப்பை முறத்தால் அல்லது வேப்பிலைக்கொத்தால் விசிறி சாம்பலை அகற்றுவார்கள்.

மேடுபள்ளமான நெருப்பில் தீ மிதிக்க-முடியாது. அதனால்தான் நெருப்பை அடித்து நொறுக்கிச் சமப்படுத்துகிறார்கள்.

ஒரே இடத்தில் நின்றால் சுட்டுவிடும். அதனால்தான் விரைந்து ஓடிக்கொண்-டேயிருக்கிறார்கள்.

உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டைப் போட்டு, இரண்டு உள்ளங்கைக்கும் அதை விரைந்து மாற்றிக் கொண்டேயிருந்தால் சுடாது. மாறாக ஒரே கையில் வைத்திருந்தால் சுட்டுவிடும்.

அடுப்பிலிருந்து வெளியில் சிதறிவிழும் நெருப்புத்துண்டை பெண்கள் விரலால் சட்டென்று எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவார்கள். ஆனால், சாம்பல் பூத்த நெருப்பைத் தொடமாட்டார்கள். தொட்டால் சுடுவது மட்டுமல்ல, கொப்பளம் போட்டுவிடும். சுடுசாம்பல் பசைபோல் ஒட்டிக்கொள்வதே அதற்குக் காரணம்.

ஆக, இக்காரணங்களால்தான் தீக்குழியில் உள்ள நெருப்பு சுடுவதில்லையே தவிர கடவுள் அருளால் அல்ல. கடவுள் அருளால் நெருப்புச் சுடாது என்றால், பச்சிளங்குழந்தைகள் அறியாமல் நெருப்பை, விளக்கைத் தொடும்-போது சுடாமல் இருக்கவேண்டுமல்லவா? குழந்தையிடம் காட்டாத கருணையா கடவுள் கோயிலில் காட்டும்? சிந்திக்க வேண்டாமா?
தங்கமணியின் விளக்கங்களும், வினாவும் அங்கமுத்துவின் அறிவுக் கண்களைத் திறந்தன. தெளிவுபெற்ற அவர் மேலும் தெளிவு வேண்டி,
அக்கினிச் சட்டி சுடாமலிருப்பது எப்படி? என்று கேட்டார்.

கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு எந்த பக்தனாவது உள்ளங்கையில் ஒரு கரண்டி நெருப்பை ஏந்தத் தயாரா? முடியவே முடியாது. கை வெந்து போகும். பக்தியில் நெருப்புச் சுடாது என்றால் வெறுங்கையில் ஏந்த வேண்டியது-தானே? பின் சட்டியில் வைத்து ஏன் ஏந்த-வேண்டும்? அங்குதான் சூழ்ச்சியே உள்ளது.

சட்டியின் அடியில் தடவப்படும் சாறு மற்றும் வேப்பிலைக் கொத்தும்தான் கையைச் சுடாமல் காப்பாற்றுகின்றன. மற்றபடி கடவுள் அருள் அல்ல! சுருக்கமாக, நறுக்கென்று பதிலளித்தார் தங்கமணி.

அங்கமுத்து அமைதியாய் இருந்தார். ஆனால், அவர் முகத்தில் இருந்த தெளிவு, அவருக்கு ஏற்பட்ட தெளிவைக்காட்டிற்று.

ஆணிச் செருப்பு காலில் குத்தாதது எப்படி? அடுத்த கேள்வியை எழுப்பினார்.

- அடுத்த இதழில் பார்ப்போம்.

Bookmark and Share