திரும்பவும் எப்போ?

பருவத்தே பயிர் செய் - என்பது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது பருவத்தே அறிவு செய் - என்பதும். ஆனால், இன்று நடந்து கொண்டிருப்பது என்ன? பருவத்தே மடமை செய் என்பதுதான். காரணம், இந்தியத் துணைக் கண்டத்தில் பின்னிக்கிடக்கும் ஜாதி, மதம், கடவுள் ஆகிய மூட நம்பிக்கைகள் தான். அறிவியல் உணர்வைத் தூண்டுவதற்குப் பதிலாக மலிந்து கிடக்கும் வியாபார ஊடகங்களும் மடமையைப் போற்றி வளர்க்கின்றன. இந்தப் போச்க்கை மாற்றி அமைக்கத்தான் இந்தப் பழகுமுகாம்.

புது இடம் என்றால் பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்குக்கூட வியப்புதான். அதிலும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இருக்கிறதே! அடேயப்பா! சாலைகளைத்தவிர, கட்டிடங்களைத்தவிர மற்ற இடங்கள் எங்கெங்கு காணினும் மரங்கள், மரங்கள், மரங்கள்தான். பசுமை அங்கு கொஞ்சி விளையாடியது. பிஞ்சுகளுக்கும் தொடக்கத்தில் Home Sick இருந்தது. அதன்பிறகு, ஆளாளுக்கு புதுப் புது நண்பர்களைச் சம்பாதிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு களமிறங்கி விட்டனர்.

அடேயப்பா... உணவுக்கூடம் கவிஞர்களின் கனவுக் கூடமாகிவிட்டது. வெவ்வேறு விதமான பறவைகள் ஒரு தோப்பில் குடியிருந்தால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது சுமார் 200 பிஞ்சுகள் ஓரிடத்தில் உணவு உண்ணும் காட்சி.

ஓரிருவர் மட்டும் பெற்றோர்களின் நினைவில் வாடிப்போயிருந்தனர். அவர்களை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் போன்றோர் தாயினும் சாலப் பரிந்து உண்ண வைத்தனர்.

பிஞ்சுகளை, பத்துப் பத்துப் பேராக ஒரு குழுவாகத் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்து, அந்தக் குழுவுக்கு ஒரு எண் கொடுக்கப்பட்டு, எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் அந்தக் குழுவின் எண்ணைச் சொன்னால் அந்தக் குழுவில் இருக்கும் பிஞ்சு-கள் அந்தக் குழுவின் ஆசிரியரின் தலைமையில் ஓரிடத்தில் கூடிட வேண்டும் என்கின்ற பயிற்சி கொடுக்கப்பட்டது.

அறிவுக்கு விருந்தளிக்கும் கணினிப் பயிற்சியில், பிஞ்சுகளின் இது என்ன? அது என்ன? இதை எப்படி இயக்குவது, எனக்கு வரவில்லை என்ற கயா முயா கேள்விக் கணைகள். பயிற்றுநர்கள் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு ஈடு கொடுத்தபடியே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். இது பரவாயில்லை, கண் கருவிழியைத் தவிர முற்று முழுதுமாக வெளேரென்று ஆறடிக்கும் மேல் இருந்து குதிரை மீது ஏறி சவாரி செய்யும் போது அவர்களைப் பார்க்க வேண்டும்! அய்யோடா.... இவ்வளவு உயரமான குதிரை மீது ஏறுவதா என்கிற மிரட்சியும் தயக்கமும் இருந்தாலும், ஏறித்தான் பார்ப்போம்! என்கின்ற துணிச்சலை ஒவ்வொரு பிஞ்சுகளிடத்தும் காணமுடிந்தது. ஏறும் போதுதான் இந்த நிலை. இறங்கிய பிறகு, சூப்பர் - என்றும் , அய் ஜாலியா இருந்திச்சு, இவ்வளவுதானா என்றும் ஒவ்வொருவரும் அவரவர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தனர். இது மற்றப் பிஞ்சுகளுக்கும், பயிற்றுநர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் அறியாமையால் ஏற்பட்ட தயக்கம், அதைச் செய்த பிறகு இதற்குத்தானா தயங்கினோம் என்கின்ற ஊக்கத்தை இந்தக் குதிரையேற்றம் கற்றுக் கொடுத்திருக்கும். இது மட்டுமா?

ஓவியம், கலைப்பொருட்கள் செய்தல், உடலுக்கும், அறிவுக்கும் ஆற்றலைத் தருகின்ற விளையாட்டு என்று மாலைவரையில் பட்டாம் பூச்சிகளைப் போல பிஞ்சுகள் அங்கும், இங்கும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். ம்.... எத்தனை நாள் ஏக்கமோ? இவ்வளவு சுதந்திரமாக வீட்டில் இருக்க வாய்ப்பேது? அதுவும் இத்தனை நண்பர்களுடன். அதுமட்டுமல்ல, குழு மனப்பான்மையையும் கட்டுப்பாட்டையும் அவர்கள் புதிதாகக் கற்றுக்கொண்டனர்.

அடுத்த நிகழ்ச்சி அன்றைய நிகழ்ச்சிக்குச் சிகரம் வைத்தாற் போல வேலு சரவணனின் - நாடகம். அடேயப்பா... நாடகம் பார்க்கின்ற அனைவரையும் நாடகத்தின் கதாபாத்திரம் ஆக்குகின்ற உத்தியுடன் இருந்த நாடகம் பிஞ்சுகளைக் கட்டிப் போட்டுவிட்டது. அந்த நாடகம், பிஞ்சுகளுக்குத் தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகிவிட்டது. பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல, ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. என்னதான் பிஞ்சுகள் கட்டுப்பாடாக இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு சலசலப்பு கேட்கத்தான் செய்தது. அப்படிக் கேட்டால்தானே அவர்கள் பிஞ்சுகள். அதை உடனே மாற்றக்கூடிய அவர்களை மீண்டும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு காந்தச் சொல் ஒருங்கிணைப்பாளர்க-ளுக்குக் கிடைத்தது. அதை வெறுமனே பயன்படுத்த முடியாது. குனிந்து நிற்க வேண்டும், வலது கையை வாயருகே வைத்துக் குவிக்க வேண்டும், அடிவயிற்றிலிருந்து ஹேய்.... என்று ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குரலுக்கு பிஞ்சுகள் அப்படியே கட்டுப்பட்டு தாங்களும் அந்தக் குரலை எதிரொலிப்பர். இந்தப் பழக்கம் வழக்கமாகி பழகுமுகாம் முடிகிறவரையிலும் எல்லோராலும் விரும்பப்பட்டு புறப்படும்போதும் சரி, வணக்கம் சொல்லும் போதும் சரி, முடிக்கும்போதும் சரி, பேருந்தில் ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி, அந்த காந்தச் சொல்லை - இதை பிஞ்சுகள் எதிர்பார்த்து இருப்பர். அந்த எதிர்பார்ப்பை யாராவது ஒருவர் நிறைவு செய்ய வேண்டும். இல்லையென்றால் பிஞ்சுகள் அதற்கும் கேள்விக்கணையுடன் தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் இதில் மாட்டிக் கொண்டது பிரின்சு அண்ணாதான்.

அதன்பிறகு, பிஞ்சுகள் சுற்றுலா போனதும், அண்ணா கோளரங்கத்தைக் கண்டதும், பெரியார் மருந்தியல் கல்லூரிக்குச் சென்று அறிவியல் கண்காட்சியைப் பார்த்ததும், முக்கியமாக ஆசிரியர் தாத்தாவிடம் - தமிழர் தலைவரிடம் மாறி மாறி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்ததும் இவை யெல்லாவற்றையும் காணும்போது அவர்களுக்குள் இருந்த உற்சாகமும், தன்னம்பிக்கையும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உட்பட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மிகுந்த மன நிறைவைக் கொடுத்தது. அதுமட்டுமல்ல, பிஞ்சுகள் பலரும் பழகுமுகாமில் தாங்கள் பழகியதைப்பற்றி ஆசிரியர் தாத்தாவுக்குக் கடிதங்-கள் எழுதியிருக்கின்றார்கள். அவற்றில் ஒன்றிரண்டை மாதிரிக்காக இந்த இதழில் கொடுத்திருக்கிறோம்.

முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் - என்பது வள்ளுவம். அப்படி அரிய செயல்களை எல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர் நமது தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். அப்படியே இந்தப் பணியும் அவர் திட்டமிட்டபடியே கச்சிதமாக நடந்து முடிந்திருக்கிறது. பிஞ்சுகளும் கூட அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து எங்கெங்கோ சென்று வந்திருப்பார்கள் ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் இந்தப் பழகு முகாம் 2010 அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும். இதை விட அவர்களுக்கு வேறென்ன வேண்டும்.

இப்போது பழகுமுகாமில் பங்கேற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல.... பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அத்தனை குழந்தைகளுக்கும் முன் நிற்கும் ஒரே கேள்வி இதுதான். பழகு முகாம் திரும்பவும் எப்போ?


அன்புள்ள தாத்தாவிற்கு

வணக்கம். நாங்கள் நலம். நீங்களும் பாட்டியும் எப்படி இருக்கின்றீர்கள். எங்கள் நினைவு-கள் பழகு முகாமைச் சுற்றியே வந்து கொண்டிருகிறது. அங்கு அய்ந்து நாட்களும் நாங்கள் உண்ட அறுசுவை உணவு, கற்றுக் கொண்ட பாடங்கள், பழக்க வழக்கங்கள்பற்றி எங்கள் சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, நண்பர்கள் அனைவரிடமும் சொன்ன உடன் அடுத்த முறை அவர்களும் தங்கள் பிள்ளைகளை பழகு முகாமுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருக்கின்றார்கள். நன்றி வணக்கம்

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள பேத்திகள்
சி. யாழினி
சி.குழலினி.


நான் முந்தி நீ முந்தி

பிஞ்சுகள் அவரவர் வீடுகளுக்கு வந்தவுடன் பெற்றோர்களிடம் வலியுறுத்தி நான் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்குக் கொடுப் பதற்குச் சேமிக்க வேண்டும். எனக்குக் காசு தாருங்கள் என்று கேட்டு, அதை உண்டியலில் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில்

முந்திக்கொண்டவர்கள் குடியாத்தம் சடகோபனின் பேத்தி அறிவுச்சுடர், ரவி அவர்களின் மகன் கமலேஷ் குமார் ஆகிய பிஞ்சுகள் திருப்பத்தூர் மாநாட்டில் தாங்கள் சேமித்ததை ஆசிரியர் தாத்தாவிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்காகக் கொடுத்தனர்.


ஆறு நேரமும் அறுசுவையும்

26.09.2010-லிருந்து 30.09.2010 வரையிலான அய்ந்து நாட்களுக்கும் ஒரு நாளில் ஆறுவேளை உணவு கொடுத்து அசத்தி விட்டார்கள். பிஞ்சுகளில் அனைவருமே அவர்களுக்குக் கொடுத்திருந்த கையேட்டில் அன்றன்றைக்குப் பெற்றதை, கற்றதை எழுதி வைக்கும் பழக்கம் வழக்கமாகி இருந்தது. அதில் தங்கள் குழு ஆசிரியர் பற்றி, வகுப்பில் கற்றுக் கொண்டதைப்பற்றி விளையாட்டுகள்பற்றி, கலைகள்பற்றி, கணினி கற்றல் பற்றி அவரவர்களுக்கு ஏற்றது போல குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். ஆனால், அனைவரும் ஒன்றுபோல உணவு மிக மிக நன்றாக இருந்தது என்று எழுதி வைத்திருந்தனர்.


உபசரிப்பு

பொதுவாக விருந்தினர்கள் வரும்போது அவர்களை வரவேற்க பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால், பூங்கொத்துகளே விருந்தினர்களாக வந்தால்!... அப்படித்தான் ஆகிப்போனது பழகுமுகாமில். 28.09.2010 - அன்று பழகு முகாமின் மூன்றாவது நாளில் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சுற்றுலா சென்றனர் பிஞ்சுகள். அங்கு பயிற்சிகள் எல்லாம் முடிந்தவுடன் பெரியார் பாலிடெக்னிக் சார்பில் ஆசிரியர் தாத்தா பிஞ்சுகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். அதேபோல் பெரியார் மருந்தியல் கல்லூரியிலும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது எப்படி இருக்கு

பழகு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெ. ரஞ்சித் என்ற பிஞ்சு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் சாதனையாளரை உருவாக்கும் முயற்சியின் அடிப்படையில் பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் - 2010 - என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி என்று வண்ணத்தில் அச்சடிக்கப்பட்ட அட்டைகளை அனுப்பி வைத்திருக்கிறார்.


அறிவுச்சுற்றுலா

கல்லணை

அணைபோட்டுத் தடுத்து வைத்திருந்த வெள்ளத்தைத் திறந்துவிட்டால் எப்படி இருக்கும். அது போல ஆகிவிட்டது பிஞ்சுகளிடம் சுற்றுலா போகப் போகிறோம் என்றவுடன். அடேயப்பா...அப்போது அவர்கள் முகங்களில் தென்பட்ட மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் சொல்ல வார்த்தைகளுக்கு வக்கில்லாமல் போயிற்று. பிஞ்சுகளையும், ஒருங்கிணைப்பாளர்களையும் சுமந்து கொண்டு மூன்று பேருந்துகள் முதலில் தஞ்சை யிலுள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்களின் நலன் கருதி மன்னன் கரிகாலன் கட்டி வைத்த கல்லணை. பிஞ்சுகள் ஆசை தீர கல்லணையைச் சுற்றிப் பார்த்தனர். அறிவுப்பசி தீர்ந்ததும், வயிற்றுப்பசிக்கும் அங்கேயே உணவு கிடைத்தது.

அண்ணா கோளரங்கம்

திருச்சியில் அண்ணா கோளரங்கத்தில் காட்டப் பட்ட வானவியல் காட்சிகளாகட்டும், அறிவியல் கண்காட்சியாகட்டும், முப்பரிமாணக் காட்சிப் படமாகட்டும் (3D) அப்பப்பா... அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட பிஞ்சுகள் தேன் நிறைந்த தேன் கூடு போல, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

பெரியார் மருந்தியல் கல்லூரி

பயணம் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரிக்குச் சென்றது. மருந்து வில்லைகள் தயாரிப்பு எப்படி என்பதைச் செய்முறை மூலம் அருகிலிருந்து பார்த்துப் பரவசப் பட்டனர் பிஞ்சுகள். அங்கும் அறிவியல் கண்காட்சியுடன், உயிரியல் கண்காட்சியும் நூலகமும் தீராத அறிவுப் பசியை, தற்காலிகமாகத் தீர்த்துக்கொள்ள உதவியது. அதுமட்டுமல்ல, அங்கு பிஞ்சுகளுக்கு பெரியார் திரைப்படமும், நாகம்மையார் குழந்தைகள் இல்லம் பற்றிய ஆவணப்படமும் காட்டப்பட்டது.


2 கிலோ எடை ஏறிவிட்டது

அன்புள்ள தாத்தா அவர்களுக்கு வணக்கம்,

எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள்கள் பழகு முகாமில் இருந்த 5 நாள்கள்தான். மாணவர் களாகிய நாங்கள் அனைவரும் மரங்கள் நட்டோம். மரம் நட்டால் மழை பெய்யும், வீட்டிலிருந்து பழகு முகாமுக்குப் புறப்படும்போது நாங்கள் வருத்தப் பட்டோம். அங்கு சென்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தோம். அங்கு சாப்பிட்டுச் சாப்பிட்டு 2 கிலோ எடை ஏறிவிட்டது.

கா.சிந்து
எட்டாம் வகுப்பு, திருச்சி - 14

சிந்து 2 கிலோ எடை ஏறியது பெரிய செய்தியல்ல என்று சொல்லும் அளவிற்கு 4 கிலோ எடை ஏறிய குழந்தைகளும் இருக்கிறார்கள்.


மூடநம்பிக்கை ஒழிப்பு

பழகு முகாமின் கடைசி நாளில் பிஞ்சுகளுக்கு தீச்சட்டி ஏந்துவதுபற்றிய விளக்கம் கொடுக்கப் பட்டு, அதை யார் வேண்டுமானாலும் ஏந்த முடியும் என்பதைக் காட்ட ஒரு தீச்சட்டியைத் தயார் செய்து அதை ஒவ்வொரு பிஞ்சுகளும் தங்கள் கைகளில் ஏந்தும் வண்ணம் வாய்ப்புக் கொடுத்து பக்தி இருந்தால்தான் தீச்சட்டியை ஏந்த முடியும் என்பதல்லாமல் கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டும் ஏந்தலாம், அதற்கு மனிதனின் தாங்கு சக்தியேகாரணம் என்று அவர்களே கற்றுக்கொள்ளும் வண்ணம் அந்த நிகழ்ச்சி அமைந்தது.

- உடுமலை வடிவேல்

Bookmark and Share