சிந்திப்போம் - பட்டறிவு
மதியும், குணாவும் நல்ல நண்பர்கள். இருவரின் வீடும் ஒரே தெருவில் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை என்றதால், மதி குணாவின் வீட்டிற்குச் சென்றான். டேய் குணா, எங்கெங்கிருந்தெல்லாமோ மக்கள் கடற்-கரையைக் காண - கடற்காற்றை வாங்க வருகிறார்கள். நம் வீட்டிலிருந்து 15 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் கடற்கரைக்குச் சென்று இன்றைய மாலைப் பொழுதை அனுபவிக்கலாம் வா என்றான்.
குணாவோ, கடற்கரையா என்று சலிப்புக் கொட்டினான். கடலின் இரைச்சலைக் கேட்டு என்ன அனுபவிப்பதாம். எரிச்சல்தான் வரும் என்றான்.
இந்த பதிலைக் கேட்ட மதி, கடலைப்பற்றியும் கடல் அலையினைப்பற்றியும் உனக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறேன். சொல்கிறேன் கேள் குணா.
இந்த உலகத்தில், எந்தச் சூழ்நிலையிலும் ஓய்வு கொள்ளாமல் ஒன்று இயங்கிக் கொண்டி-ருக்கிறது என்றால் அது கடல் அலைதான். தன்னைப்போல் ஒவ்வொருவரும் சோர்ந்து-விடாமல் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே கடல் அலையானது நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
மேலும், போட்டி போட்டுக் கொண்டு அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னுக்கு வந்து, கடைசி நேரத்தில் பெரிய அலையினால் சிறிய அலை கரையைத் தொடமுடியாமல் உள்ளிழுக்கப்-படுகிறது. இருப்பினும், சிறிய அலை அதற்காகச் சோர்ந்துவிடாமல் மீண்டும் அலையாக உருவெடுத்து, கரையைத் தொட முயற்சி செய்கிறது - பெரிய அலையாகி கரையைத் தொடுகிறது.
இது, போட்டி நிறைந்த உலகில் உழைத்துப் பாடுபட்டு முன்னுக்கு வந்து, கடைசி நேரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும். மீண்டும் முயற்சி செய்தால் அவர்கள் பெரிய வெற்றியை - நினைத்த இலக்கினை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறதல்லவா?
கவிஞர்கள் இந்தக் கடல் அலையினையும், சூரியன் தோன்றி மறையும் அழகினையும் பார்த்-தால் கவிதை மழை பொழிந்துவிடுவர். கடல் நீரிலிருந்துதானே நம் சமையலுக்கு முக்கியச் சுவையினைத் தரக்கூடிய உப்பு தயாரிக்கப்-படுகிறது. மேலும் மீன், நண்டு போன்ற உணவுப் பொருள்களையும் சங்கு, சிப்பி என்று எவ்வளவோ பயன்களைக் கடல் மனித இனத்திற்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்-தோமானால் நம் கவலைகள் எல்லாம் ஓடிவிடும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும் என்றான்.
இதனைக் கேட்ட குணா வியப்பில் ஆழ்ந்தான். இவ்வளவு அற்புதங்களைத் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேனே! வா கடற்கரைக்குச் செல்லலாம் என மதியிடம் கூறினான். நண்பர்கள் இருவரும் அன்றைய மாலைப் பொழுதினை இன்பமாக அனுபவித்துச் சுவைத்தனர் கடற்கரையில்.
நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, எதனையும் மேலோட்டமாகப் பார்த்து முடிவு செய்யக் கூடாது. நன்கு ஆராய்ந்து, அதிலுள்ள நன்மைகளை நினைத்துப் பெருமைப்-பட்டு, பூரித்து அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தான் குணா.
- செல்வா