உலகப் புகழ்பெற்ற மனிதர்கள்
சாக்ரடீஸ் எனும் சான்றோர்
அய்ரோப்பாக் கண்டத்தின் தென்கிழக்கில் இருப்பது கிரீஸ் (GREECE) நாடு. அங்குள்ள குடிகள் பேசுவது கிரேக்க மொழி. ஒரே மொழியினராக இருந்தும், பண்டைக் காலத்தில் அவர்கள் பல நகர நாடுகளாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். ஏதன்ஸ், ஸ்பார்ட்டா, கொரிந்த், தி பெஸ் என்பவை அவற்றில் சில நகர நாடுகள்.
தொழில்
ஏதன்ஸ் நகரில் கி.மு. 469 இல் சாக்ரடீஸ் பிறந்தார். அவருடைய தந்தை கல்கொத்தர்; கற்களைச் செதுக்கி, வேண்டிய அளவில் வெட்டித் தருபவர். சாக்ரடீஸ் சிற்பியாகத் தொழில் செய்தார். வலிவான உடற்கட்டுப் பெற்றிருந்தார். நல்ல உழைப்பாளி. ஏதன்ஸ் நகர நாட்டின் காலாட்படையில் துணிவுடன் பணியாற்றினார். கி.மு. 432 இல் பொடிடேயா (POTIDAEA) எனும் இடத்தில் நடந்த போரில் காயம்பட்ட அல்சிபியாடஸ் (Alcibiades) என்பவரைக் காப்பாற்றினார். அவர் காலம் முழுதும் சாக்ரடீசைப் பின்பற்றினார்.
தோற்றம்
சாக்ரடீஸ் சாதாரணக் குடிமக்களின் தோற்றம் பெற்றவர்; உருண்டை முகம் ; அகன்ற சப்பை மூக்கு; தடித்த உதடு; பெரிய கண்கள். அவர் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாஃபேனஸ், தம்முடைய மேகங்கள் எனும் நாடகத்தில், இவரை அழகற்ற முகமும், அலங்கோல ஆடையும் கொண்ட-வராகக் காட்டுகிறார். பழைய பழக்கங்களையும், கடவுளரையும் அழிக்க முயன்றவராக அதில் சித்தரிக்கப்படுகிறார்.
பேரறிவாளர்: சாக்ரடீஸ் பற்றி கற்பனை கலந்த மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு. டெல்ஃபி எனும், இடத்தில் இருந்த குறிசொல்லும் (தேவ வாக்குத் தரும்) ஒருவரிடம் (DELPHIC ORACLE) உயர் குடியைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் சென்றார். எனக்கு எதுவும் தெரியாது என்பதை மட்டும் அறிந்தவன் நான், எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன்சென்றவர் கேட்டார், ஏ, பேராற்றல் வாய்ந்த குறிசொல்லியே கூறும்: மனிதர் யாவரிலும் சிறந்த பேரறிவாளர் யார்? அதற்குக் குறிசொல்லி கூறினார்: உன்னைத் தெரிந்து கொள்: (ஞாதி செயாடன் Gnothi Seauton.) அனைவரிலும் சிறந்த பேரறிவாளர் சாக்ரடீஸ். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என உணர்வது பேரறிவாளர்களின் இயல்பு.
உண்மை - அறிவு
செல்வத்தைக் குவிப்பதை விட, உண்மையை நாடுவது உயர்ந்தது என்பது அவருடைய நோக்கு. மனிதரின் மகிழ்ச்சிக்கும், முன்-னேற்றத்திற்கும், நன்நெறிக்கும் அறிவே அடிப்படை. மூச்சுக் காற்றைப் போன்றே அறிவுத்தேடலும் வாழ்வுக்குத் தேவை. ஆராய்ந்து வாழாத வாழ்வு வாழத் தகுதியற்றது, என்பது சாக்ரடீசின் புகழ்வாய்ந்த ஒரு சொல். தங்களைப் பற்றியும், மற்றவர்களுடன் தங்களுக்குள்ள உறவு, வாழ்வின் இலக்குகள் ஆகியவை பற்றியும் மக்களுக்குத் தெளிவு தேவை.
தம்மைக் கடந்துசெல்லும் இளைஞரைப் பார்த்து சாக்ரடீஸ் இவ்வாறு கேள்விகள் கேட்பார்: உணவகம் எங்கே இருக்கிறது? எங்கு சென்றால் முடிவெட்டிக் கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கு எளிதில் பதில் கிடைக்கும். அடுத்துக் கேட்பார்: நன்மை என்பது என்ன? எது உண்மை எனப்படுவது? நன்நெறி எது? இந்தக் கேள்விகள் சிக்கலானவை. ஒவ்வொருவரும் வெவ்வேறான பதில்களைத் தருவார்கள். அவற்றில் உள்ள முரண்பாடுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவார். விளக்கம் தருவார்; படிப்படியாக உண்மையை நோக்கி இட்டுச் செல்வார். இது, இயங்கியல் (dialectical) சிந்தனை முறையின் ஒரு கூறு ஆகும்.
இடியும் மழையும்
வாழ்வின் பிற்காலத்தில் சாக்ரடீஸ், திருமணம் செய்துகொண்டார். அவருக்கு மூன்று மகன்கள். ஆனால், அவர் குடும்பத்திற்கு உரிய ஊதியத்தை ஈட்டுவதில் நாட்டம் செலுத்தவில்லை. கட்டணம் வாங்காமலேயே இளைஞர்களுக்கு அறிவைத் தந்தார். அதனால் அவருடைய மனைவியார், ஜாந்திபி அவருடன் அடிக்கடி சண்டை-போடுவார். ஒரு முறை இளம் நண்பர்களுடன் சாக்ரடீஸ் தமது வீட்டில் விவாதித்துக் கொண்டிருந்தார். அங்குவந்து அவரை ஜாந்திபி உரத்த குரலில் திட்டத் தொடங்கினார். அங்கிருந்து நகர்ந்து செல்லக்கோரி, சாக்ரடீஸ் கையசைத்தார். அதனால் மேலும் சினம் அடைந்த அவரின் மனைவி, ஒரு குடத்தில் நீரைக் கொண்டுவந்து அவர் மீது கொட்டினார். இளைஞர்கள் மிரண்டனர். ஆனால், சாக்ரடீஸ், இதுவரை இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது! என அமைதியாகச் சொன்னார்.
இறுதி நாட்கள்
பெலபொன்னெசியப்போரில், ஸ்பார்ட்டாவிடம், ஏதன்ஸ் தோற்றது. அங்கு மக்களாட்சி வீழ்ந்து, கொடுங்கோலாட்சி வந்தது. மீண்டும் ஏற்பட்ட மக்களாட்சி கட்டுப்பாடற்றது. அப்பொழுது சாக்ரடீஸ் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன: ஒன்று, கிரேக்க மரபுவழிக் கடவுளரை அவர் மறுக்கிறார் என்பது. இரண்டு, அவர் இளைஞர்களைக் கெடுக்கிறார் என்பது. பெரும்பான்மை வாக்கின் மூலம் அவர் குற்றம் செய்ததாக முடிவு செய்தனர்; மரணதண்டனை விதித்தனர்.
சாக்ரடீசின் இறுதி நாட்களைப் பற்றி, பிளேடோ, மற்றும் ஜெனோஃபன் எழுதிய நூல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனைக்கு மாற்றாக நாடு கடத்தப்படுவதை அவர் ஏற்கவில்லை. தப்பிச்செல்ல - ஏற்பாடு செய்வதாக நண்பர்கள் கூறினர்; ஆனால், அதையும் அவர் விரும்பவில்லை. தண்டனைக்குரிய நாளும் வந்தது. அன்றும் விவாதம் நடந்தது. உடல் மறையும்; ஆனால் உயிர் மறையாது என்ற தம் நம்பிக்கையைத் திரும்பக் கூறினார். அழக்கூடாது என்றார். சிறைக் காவலர், நஞ்சை ஒரு கோப்பையில் கொடுத்தார். அதை வாங்கி அருந்தினார்; அமைதியாக இறந்தார் (கி.மு. 399). உண்மையைத் தேடியதற்கும், தாம் அறிந்த அளவில் வெளிப்படுத்தியதற்கும் உயிர் துறந்த மெய்ஞானி சாக்ரடீஸ். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதைக்கு அழிவில்லை.
கடைசிக்கட்டுரை
நமது பெரியார் பிஞ்சு இதழுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழறிஞர்கள், உலகப் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றி எழுதிவந்த பெரியார் பேருரையாளர் மானமிகு கு.வெ.கி. ஆசான் அவர்கள் 22.10.2010அன்று இயற்கை எய்தினார். இதுவே அவர் எழுதிய கடைசிக்கட்டுரை.