பெரியார் பிஞ்சு பழகு முகாம்
பிஞ்சுகளின் கூடல்...

பெரியார் பிஞ்சு இதழின் சார்பில் குழந்தைகள் பழகு முகாம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு வெகு சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் எண்ணற்ற பிஞ்சுகள் தங்கள் விருப்பத்தை விண்ணப்பம் மூலம் தெரிவித்தனர். நாம் எதிர்பார்த்ததைவிட மிகுதியான எண்ணிக்கையில் பிஞ்சுகள் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். பிஞ்சுகளை ஏமாற்றும் விதமாக ஆகிவிடக்கூடாது என்பதால், விண்ணப்பத்தில் நாம் குறிப்பிட்டுள் ள அத்தனை தகுதிகளையும் உடைய குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26.09.2010 அன்று காலையில் பயிற்சி முகாம் தொடங்கி 30.09.2010 அன்று நிறைவடையும் வண்ணம் பழகுமுகாம் திட்டமிடப்பட்டிருந்தது. குழந்தைகள் 25.09.10 மாலை முதலே பதிவு செய்துஇணைத்துக் கொள் ளப்பட்டனர். இதுவரை பெற்றோரை விட்டுப் பிரிந்திராத குழந்தைகளும், குழந்தைகளை விட்டுப் பிரிந்திடாத பெற்றோருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு பயிற்சியாக அமைந்தது. எடை, உயரம், குருதி உள் ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. செப்டம்பர் 26-ஆம் தேதி காலையில் பயிற்சிகள் தொடங்கின.

காலை 5.30 மணிக்கு ஜாகிங்-கில் தொடங்கியது பெரியார் பிஞ்சுகளின் நாள் . பிறகு யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற உடல்நலம், தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. சுவையான, ஆரோக்கியமான காலை உணவு குளித்து தயாரானபிறகு வழங்கப்பட்டது. ஆளுமை மேம்பாடு, ஆசிரியர் தாத்தாவின் அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிய உரை, கவிஞர் தாத்தாவின் அவர் தாம் பெரியார் என்னும் உரை போன்றவை காலையில் நடைபெற்றன.

மதிய உணவுக்குப் பின்னர், கணினிப்பயிற்சி, கைத்தொழில், ஓவியம், விளையாட்டு என மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வருமாறு பயிற்சிகள் அமைந்தன. மாலை நேர சிற்றுண்டி, இரவில் கலை நிகழ்ச்சிகள் ... அதைத் தொடர்ந்து சுகாதாரமான உணவு, பின்னர் அன்றைய நிகழ்ச்சிகள் குறித்த குறிப்பு என சுறுசுறுப்புடன் இயங்கும் தேனீக்களாக சுற்றிச் சுற்றித்திரிந்தனர் பிஞ்சுகள் .

அவர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பேடு நிகழ்ச்சி குறித்த பிஞ்சுகளின் பார்வையை வெளிக்கொண்டுவரும் விதமாக வடிவமைக் கப்பட்டிருந்தது. பங்கேற்ற அனைவருக்கும் குறிப்பேட்டுடன், பை, பனியன் ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்ச்சி குறித்த குழந்தைகளின் பார்வை எப்படி இருக்கிறது என்பதனை பங்குபெற்றோரின் கருத்துகளை வைத்து அறிந்து கொள் வோம்.

இந்நிகழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து பிஞ்சுகளுக்கு பார்த்துப்பார்த்து அனைத்தையும் செய்த தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ்,
பேராசிரியர் உ.பர்வீன், நிகழ்ச்சிக்கான இடத்தையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன், உடன் உழைத்த அனைத்துப் பணியாளர்கள் , குழந்தைகளோடு ஒருவராக மாறி அவர்களுடன் பழகிய கவிஞர் கலி.பூங்குன்றன், பழகு முகாமினை நடத்த வாய்ப்பளித்த ஆசிரியர் தாத்தா ஆகியோர் நமது நன்றிக்குரியவர்கள் . சென்று வந்தவர்களுக்கு மகிழ்ச்சியும், செல்லாதவர்களுக்கு ஆர்வமும் தோன்றுகிறதா? ம்ம்... வாருங்கள் ... அடுத்த பழகு முகாமில் சந்திப்போம்.


பிஞ்சுகளைக் கவர்ந்த நாடகங்கள்

ஒவ்வொரு நாள் மாலையும் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் நாள் மாலையில் குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு மாமா எனப்படும் வேலு சரவணனின் நாடகம் நடைபெற்றது. குழந்தைகளை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கவும், தொலைக்காட்சிகளால் தொலைந்துபோன அவர்களின் குழந்தைத் தன்மையை மீட்டுத்தரும் அருமையான வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

இரண்டாம் நாள் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியினை முத்து அவர்கள் நடத்திக்காட்டினார்கள் . மூன்றாம் நாள் தெற்குநத்தம் சித்தார்த்தன் குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. கருத்துடன் நகைச்சுவையையும் சேர்த்து அளித்த வீதி நாடகமாக அமைந்து. மாலை என்றாலே மகிழ்ச்சி என்னும் மனநிலை குழந்தைகளிடம் உருவானது என்றால் மிகையில்லை.


Bookmark and Share