உலகப்புகழ் பெற்ற மனிதர்கள்
அறப்பணியாளர் பச்சையப்பர்
கு.வெ.கி.ஆசான்
இந்நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியில், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தில், பச்சையப்பர் அறக்கட்டளை நிறுவனங்களின் மேலான பங்களிப்பு போற்றுதலுக்கு உரியதாகும்.
இளமை
காஞ்சிபுரம் பாலாறு பாய்வதால் வளம்பெற்ற ஊர். பவுத்த, சமணத் துறவியர் அறம் வளர்த்த இடம்; சைவ, வைணவ சமயங்கள் போட்டியிட்ட நகரம்; பல்லவ அரசர்களின் தலைநகர்; நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர்; அறிஞர் அண்ணாவைத் தமிழ் உலகிற்குத் தந்த பெருமைக்கு உரிய நகரம்; இக் காரணங்களால் அதற்கு மேலும் சிறப்புகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. பச்சையப்பரின் பெற்றோராகிய விசுவநாத முதலியாரும் பூச்சியம்மாளும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு முதலில் இரண்டு பெண் மக்கள். மூத்தவர், சுப்பம்மாள். அடுத்தவர், அச்சம்மாள், மூன்றாவது குழந்தை கருவில் இருந்தபொழுது, தந்தை இறந்தார். அவருடைய நண்பர் ரெட்டிராயர், சென்னைக்கு வடமேற்கில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்தவர். அவருடைய ஆதரவில் வாழ, பூச்சியம்மாள், அங்குக் குழந்தைகளுடன் குடியேறினார்; கருவில் இருந்த ஆண் குழந்தை அங்கு பிறந்தது; 1754 இல் பிறந்த அக் குழந்தை பிற்காலத்தில் பச்சையப்பர் எனப் புகழ்பெற்றது.
சென்னையில் நிலையான ஆதரவு
தெலுங்கு மொழியைக் கற்கும் வகையில் பச்சையப்பனின் கல்வி பெரியபாளையத்தில் தொடங்கிற்று. ஆனால் அது நீடிக்க வில்லை. ஆதரவு கொடுத்து வந்த ரெட்டி ராயர் திடீரென இறந்தார். ஆகையால் குழந்தைகளுடன் ஆதரவு தேடித் தாய் சென்னையைச் சேர்ந்தார். தனக்கு இருந்த குடும்பச் செல்வத்தைத் திரட்டி-வைத்திருந்தார். ஆனால் அதைக்கொண்டே எத்தனை நாள் காலம்தள்ள முடியும் என ஏங்கினார். இந்நிலையில் நெய்தவாயல் பவுனி நாராயணப் பிள்ளை என்பவர் அளித்த ஆதரவு, பூச்சியம்மாள் குடும்பத்திற்கு நிலையானதும் கிடைத்ததற்கு அரியதும் ஆன துணை ஆயிற்று. நெய்தவாயல் அவருடைய சொந்த ஊர்; பவுனி என்பவர் அவரைப் பணிக்கு அமர்த்தியிருந்த ஆங்கிலேயர். இந்த இரண்டையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தார், நாராயணப் பிள்ளை. பச்சையப்பர் அறிவுடனும் திறமையுடனும் வளரவும், புத்திக் கூர்மையுடன் வேலையும் வாணிகமும் செய்து பெரும்பொருள் சேர்க்கவும், இவ்வாறு நாற்பதே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பின்பு அவருடைய பெருஞ்செல்வத்தை நிலை நிறுத்தவும் காரணமாக நாராயணப் பிள்ளை இருந்தார்.
அமைதி இல்லாத காலம்
பச்சையப்பர் வாழ்ந்தது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. அய்தராபாத் நைஜாம், ஆர்க்காட்டு நவாப், தஞ்சாவூர் மராத்திய மன்னர், பாளையக்காரர்கள், குறு நில மன்னர்கள், மைசூரின் அய்தர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர், ஃபிரான்சுக்காரர்கள் முதலியவர்களிடையே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அதன் காரணமாக அமைதி இல்லை; மக்கள் துன்பப்பட்டார்கள். மெல்ல மெல்ல, மற்றவர்களின் அதிகாரம் மறைந்தது அல்லது தணிந்தது; ஆங்கிலேயர் அதிகாரம் ஓங்கியது; நிலைபெற்றது.
துவிபாஷி
நாராயணப் பிள்ளை ஆங்கிலேயரிடம் துவிபாஷியராய், அதாவது தமிழ் _ ஆங்கிலம் இரண்டு மொழி தெரிந்த மொழிபெயர்ப்-பாளராய்ப் பணியாற்றினார். அவருடைய வழிகாட்டலில், பச்சையப்பர் வாணிகமும், மொழிபெயர்ப்புத் தொழிலும், பல்வேறு வகைப்-பட்ட அதிகாரிகள், செல்வர்கள், ஆட்சியாளர்-கள் முதலியவர்களிடம் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளும் திறனும் கற்றுக்கொண்டார்.
செல்வம் சேர்த்தார்:
இதற்கு இடையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கீழ் வேலைபார்க்க விரும்பி, அவருடன் சென்னைக்கு வடக்கில் இருந்த பாலவாயல் சத்திரம் எனும் ஊருக்குப் பச்சையப்பர் வீட்டுக்குத் தெரியாமல் சென்றுவிட்டார். ஆனால் அவரை நாராயணப்-பிள்ளை திரும்ப அழைத்துவந்து, நிக்கலஸ் என்பாருக்கு மொழிபெயர்ப்பாளராய் (துவிபாஷியாய்) அமர்த்தினார். அத்துடன் பலவகை வாணிகமும் செய்து பச்சையப்பர் பொருள் சேர்த்தார். அவருடைய தமக்கை-யருக்குத் திருமணங்கள் நடந்தன.
ஆங்கிலேயருக்கு உரிய நிலங்கள் பூவிருந்த வல்லி, திருப்பாச்சூர் ஆகிய இடங்களில் இருந்தன. அவைகளை உழுதவர்கள் தரவேண்டிய குத்தகையை ரொக்கமாக முன்கூட்டியே பச்சையப்பர் தந்துவிடுவார். பின்பு குத்தகை நெல்லை வசூலித்து, வியாபாரம் செய்து நல்ல லாபம் பெறுவார்.
இவ் வகையிலான சம்பாதனை மட்டுமன்றி, குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள் முதலியவர்களுக்குக் கடன் கொடுத்து, வட்டியை ஊதியமாகப் பெற்றார். தஞ்சையை ஆண்ட மன்னருக்கு அவ் வகையில் ஒரு லட்சம் வராகன் கடன் கொடுத்தார்!
ஆர்க்காட்டு நவாப்பாகிய வாலாஜாவின் அவையில் ஆங்கிலேயரின் பிரதிநிதியாக, ஜோசஃப் சலிவன் இருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து, தமது செல்வாக்கையும் செல்வத்தையும் பச்சையப்பர் வளர்த்துக்-கொண்டார்.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, கோமளேஸ்வரன்பேட்டை முதலிய இடங்-களிலும், தஞ்சாவூரிலும் குடியிருந்து கொண்டு தம் தொழிலைப் பச்சையப்பர் நடத்தினார். மூத்த தமக்கையின் மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் மற்றொருவரையும் மணந்தார். இரண்டு மனைவியருக்கும் இடையில் ஓயாத சண்டை. ஆகையால் பச்சையப்பருக்கு மன நிம்மதி போயிற்று. உடல் நலம் கெட்டது. 1794 மார்ச் 31 இல் தஞ்சை அருகில் திருவையாறு எனும் ஊரில் இறந்தார்.
அறக்கட்டளை
இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு தம் சொத்துக்கள் குறித்து, இ-றுதி விருப்ப ஆவணம் (உயில்) எழுதிவைத்திருந்தார். அதைக் குறித்து நாராயணப் பிள்ளைக்கும் மடல் எழுதியிருந்தார்.
பச்சையப்பரின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த ஒரே பெண், திருமணத்திற்கு முன்பே மறைந்தார். அவருடைய மூத்த தமக்கைக்கும் மூத்த மனைவிக்கும் எழுதிவைத்த சொத்துப் போக, மீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை; உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி வழக்குப் போட்டனர்; தோற்றனர்.
இந் நிலையில், ஆங்கில அரசு வழக்-குறைஞராக வந்த ஜார்ஜ் நார்டன், பச்சையப்-பரின் அறக்கட்டளைச் சொத்துகளை ஒன்று சேர்த்தார்; வகைப்படுத்தினார். பச்சையப்பர் சொத்தில் 1841 இல் வட்டியுடன் எட்டு லட்சரூபாய் திரண்டது. அதில் கோயில் முதலிய அறக்காரியங்களுக்கு நாலரை லட்சம் போக, மீதியைக் கல்விக்குச் செலவு செய்ய முடிவு ஆயிற்று.
சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, கல்லூரியாக 1880 இல் உயர்ந்தது. பழம்பெரும் கல்லூரியான பச்சையப்பர் கல்லூரி, கணக்கற்றவர்-களின் கல்வித்தாகத்தைத் தீர்த்தது. இன்று பச்சையப்பர் அறக்கட்டளையுடன் பிறவும் சேர்ந்து, கல்வி அறம் வளரச் செய்கின்றன.
|