அறிவுப் பசிக்கு விருந்து
அண்ணா நூற்றாண்டு நூலகம்

விடுமுறை நாள்களில் சென்னைவாசிகளின் சென்னைக்கு வந்து செல்வோரின் பயனுள்ள பொழுதுபோக்காக அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்துள்ளதே கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். சிறுவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

கலைஞரின் பொற்கால ஆட்சியில் எத்தனையோ சாதனைகள் சரித்திரங்களாக - பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவைகளாக இருந்தாலும் முதலிடத்தைப் பெறுவது 4 லட்சம் நூல்களை அகத்தே கொண்டுள்ள தென் ஆசியாவிலேயே பெரியதாகத் திகழும் இந்நூலகமே! சிங்கப்பூர் தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 12 லட்சம் நூல்கள் இடம்பெறும் என்ற செய்தி அறிவுப்பசியை மேலும் தூண்டுவதாக உள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு பிரமாண்டமாய் காண்போர் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து 8 மாடிகளுடன் காட்சியளிக்கிறது.

சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 31,100 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. பெரிய முகப்புக் கூடம், வரவேற்பறை, பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி நூலகம், 2 படிக்கும் அரங்குகள், இன்டர்நெட் மய்யம், திரைஅரங்கு, கருத்தரங்க அறைகள், கண்காட்சி அறைகள் என்ற பன்முகத் தோற்றத்துடன் பாங்காய் காட்சியளிப்பதே தரைத்தளம்.

குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிக்கும் வகையில் செயற்கை மரத்துடன் திகழ்ந்து, கணினி விளையாட்டுகள், இணைய-தளம் (ஆன்லைன்) மூலம் பாடங்களைக் கற்கும் வசதியுடன் அனைத்து மாநில பாடநூல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதே முதல் தளம்.

தமிழ் நூல்கள் ஆட்சி செய்யும் இடமே இரண்டாம் தளம். மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்களும், நான்காம் தளத்தில் மருத்துவ நூல்களும் நிருவாகம் தொடர்பான நூல்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு துறையினைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளதால் உலகிலுள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களைச் சேகரிக்க முடியும். பழைமையான ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்-களுக்கு யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. மொத்தத்தில் அறிவுப் புரட்சிக்கு வித்திடும்வகையில் அமைக்கப்-பட்டுள்ளது. பெரியார் பிஞ்சு இதழுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றபோது நூலக இயக்-குநர் முனைவர் க.அறிவொளி, துணை நூலக இயக்குநர் திரு. வெ. மாதேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நூலகத்தை வலம்வர வேண்டிய உதவிகளைச் செய்தனர்.

மலர்களைப் பார்த்து பட்டாம்பூச்சிக் கூட்டம் மகிழ்ச்சியுடன் ரீங்காரமிட்டுப் பறந்து செல்வதைப் போல, குழந்தைகள் குதூகலத்துடன் உள்ளே நுழைந்து புத்தகங்களை ஆராய்-கின்றனர். உள்ளே சென்றதும், நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்ற எண்ணத்துடன் குழந்தைகளுடன் உரையாடி-னோம்.

ராம்பிரீத்தி, இரண்டாம் வகுப்பு,
செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி,

பெசண்ட் நகர், சென்னை. எங்க வீடு அடையார்ல இருக்கு. கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். இங்கதான் முதல்ல வந்திருக்கேன். ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய புத்தகங்கள் இருக்கு. ஆசையா எல்லாத்தையும் பார்த்தேன். பிடித்திருந்ததை எடுத்துப் படித்தேன் என்றார் இந்தப் பிஞ்சு.

இவரை அழைத்து வந்திருந்த இவரது தாய் ராதாவிடம் பேசினோம்:

இதுவரை வேறு நூலகங்களுக்குச் சென்றதில்லை. நிறைய குழந்தைகளைப் பார்க்கிறதால நாமும் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். இந்த சூழ்நிலை வரணும்ங்கிற ஆர்வத்தை உண்டாக்குகிறது. படிபடினு வீட்ல சொன்னாலும் படிக்க மாட்டாங்க. ஆனால், இங்கு மற்ற குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகவே படிக்கிறாங்க. குழந்தைகளை முதலில் தனியாக விடச் சொல்கிறார்கள் கொஞ்சம் பழகுவதற்கு- உடனிருந்து பெற்றோர் வழிகாட்டுவதற்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்..

ஜே.ஆகாஷ் பால்
செயிண்ட் மைக்கேல்ஸ் அகாடெமி
காந்திநகர், அடையார்.

தரமணியிலிருந்து வருகிறேன். அறிவியல் புத்தகங்கள் குறிப்பாக வேதியியல் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். பள்ளியில் நூலகம் இருக்கு. அங்கு இல்லாத புத்தகங்கள் இங்க இருக்கிறதைப் பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்தது. தரமான புத்தகங்களாக உள்ளன. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு விடுமுறையில் வரணும்னு நினைக்கிறேன்.

அம்மா விட்டுட்டு வேலைக்குப் போயிட்டாங்க. மதியம் வந்து கூட்டிட்டுப் போவாங்க. வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க முடியலையே என்ற வருத்தம் உள்ளது.

சாம் சுந்தர், இரண்டாம் வகுப்பு,
கே.வி. அய்.அய்.டி, அடையார்.

மேடவாக்கத்திலிருந்து வருகிறோம். டோரா, கிரிக்கெட்பற்றிய புத்தகங்கள் படித்தேன். மிக்கி மவுஸ் படித்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. நான்தான் போக வேண்டும் என்று அடம்பிடித்தேன். அப்பா அம்மா அழைத்து வந்தார்கள்.

செல்வ சுந்தர்,
ஆறாம் வகுப்பு,
கே.வி. அய்.அய்.டி, அடையார்.

பொதுஅறிவு, மிருகங்கள் பற்றிப் படிக்க ரொம்பப் பிடிக்கும். படித்தேன். ரொம்ப ஆசையா இருக்கு. எதிர்பார்த்ததைவிட நிறைய புத்தகங்கள் உள்ளன என்றனர் இந்த சகோதரப் பிஞ்சுகள்.

இவர்களது பெற்றோர் நம்மிடம் பேசும்போது,

ரொம்ப நன்றாக உள்ளது. இப்படி வைத்தால் தான் குழந்தைகளுக்குப் பழகும்தன்மை (கிவீபீமீ) ஏற்படும். அடிக்கடி குழந்தைகளை அழைத்து வரத் தோன்றுகிறது. ஒருதடவை-யாவது குழந்தைகள் அருகில் அமர்ந்து அவர்களது பயத்தைப் போக்கி வழிகாட்ட (நிவீபீமீ) அனுமதி கொடுத்தா நல்லா இருக்கும் என்றனர்.

ராம்பிரவீன், முதலாம் வகுப்பு
செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி,
பெசண்ட் நகர், சென்னை.

தரமணியிலிருந்து வருகிறேன். கதை படிக்க ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து (Transport), கார்பற்றிய புத்தகங்கள் படித்தேன். ரொம்ப ஆர்வமா இருந்தது. இங்கயே இருக்கணும் போல இருக்கு என்று உற்சாகமாக இந்தப் பிஞ்சு பேசினார்.

இவரது தந்தை ராஜேஷிடம் பேசியபோது,

வரும்போது எப்படி இருக்குமோ என்று யோசித்தேன். ரொம்ப உபயோகமாக இருக்கிறது. வீடு பக்கம் என்பதால் அடிக்கடி வரலாம். புத்தகங்கள் தரமானவைகளாக உள்ளன.

குழந்தைகளுக்கான கருத்தரங்கு மாதம் ஒரு நாள் குறிப்பிட்ட தலைப்பில் நடைபெற்றால் நன்றாக இருக்கும். குறிப்பிட்ட துறை வல்லுநர்களை ஆலோசனை வழங்கச் செய்யலாம் என்றார் ராம்பிரவீனின் அப்பா.

அக்ஷிதா நரசிம்மன்,
ஈரோ கிட்ஸ், எல்.கே.ஜி, கோட்டூர்புரம்.

டயனோசர்ஸ் கதை ரொம்பப் பிடிக்கும். மிக்கிமவுஸ் படித்தேன். டயனோசர் கதை படிக்க புத்தகம் கிடைக்கலை. அப்பா தேடிப் பார்த்தார். குழந்தைகளோட ரொம்ப ஜாலியா இருக்கு. இங்க ஒரு புது தோழி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் பேசினார் இந்தப் பிஞ்சு.

இவரது தந்தை நரசிம்மனிடம் பேசியபோது,

தரமான புத்தகங்களாக உள்ளன. எனவே, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்ல பயனாக இருக்கும். நேற்று வந்து டயனோசர்ஸ் புத்தகம் பார்த்தேன். அதான் குழந்தையை இன்று அழைத்து வந்தேன். ஆனால் இன்று கிடைக்க-வில்லை. புத்தகங்களை அடுக்கிவைக்கும் முறையிலும், எடுத்துவைக்கும் முறையிலும் சரியான வழிமுறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றார்.

திவ்யலட்சுமி,
அய்ந்தாம் வகுப்பு,
செயிண்ட் மைக்கேல்ஸ் அகாடமி,அடையார்.

கோட்டூர்புரத்திலிருந்து வருகிறேன். டாமன்செரி புத்தகங்கள் படித்தேன். ரொம்ப நல்லா இருந்தது. தொடர்ந்து வர ஆசை. ஒவ்வொரு விடுமுறையும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். கணினியில் விளையாடும் வசதி இருப்பதால் அடிக்கடி வருவேன் என்றார் இந்தப் பிஞ்சு. இவரது தாயாரிடம் பேசியபோது,

முதல்முறையாக குழந்தையை நூலகம் அழைத்து வருகிறேன். வீட்டிலிருந்து தொலைக்காட்சியைப் பார்த்து வீணாக விடுமுறையைப் போக்குவதற்குப் பதில், பயனுள்ள முறையில் விடுமுறை இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன். அடிக்கடி அழைத்து வந்து படிக்கும் பழக்கத்தை குழந்தைக்கு உண்டாக்க வேண்டும். அருகில் இருப்பதால் அடிக்கடி வரும் வாய்ப்பு உள்ளது என்று பூரித்தார்.

எம்.விக்னேஷ்,
குமாரராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி,
காந்திநகர், அடையார்.

வீடு அருகில் இருப்பதால் தினமும் ஒரு மணி நேரம் வந்து செல்கிறேன், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புற நகைச்சுவைகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். பாடம் தொடர்பானவற்றை வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். எனவே, பொது அறிவு போன்ற பிற நூல்களைத் தேடிப் படிக்கிறேன். அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களும் இருப்பதால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் தினமும் வருகிறேன் என்றார் இந்தப் பிஞ்சு. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்து விட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

சந்திப்பு : செல்வலெட்சுமி
படங்கள் : உடுமலை வடிவேல்

Bookmark and Share