சின்னக்கதை
திரும்பத் திரும்ப...
செழியன் தன் நண்பர்களுடன் சந்தைக்குச் சென்றான். நண்பர்கள், வீட்டிற்குத் தேவையான பொருள்களைப் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருந்தனர். செழியனோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டியினை வாங்கவே வந்தான். வந்த சில நிமிடங்களில் தனக்குப் பிடித்தமான ஆட்டுக்குட்டியினைத் தேர்வு செய்து வாங்கிவிட்டான்.
நண்பர்களிடம் சென்று, நீங்கள் வாங்க வேண்டிய பொருள்களை வாங்கிவிட்டு மெதுவாக வாருங்கள். நான் ஊருக்குச் செல்கிறேன் என்று கூறி விடைபெற்றான். பேருந்து வசதியில்லாத சிறு கிராமம் என்பதால், பிரியமுடன் வாங்கிய ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். தனியாக செழியன் வருவதைப் பார்த்தனர் நான்கு திருடர்கள். தங்களுக்குள் கலந்து ஆலோசித்துத் திட்டம் தீட்டினர். அவர்களது திட்டப்படி, முதல் திருடன் செழியனின் முன்வந்து, தம்பி! நீ ஆசையாக வளர்க்கும் நாய்க்குட்டியா இது? என்னதான் ஆசையாக வளர்த்தாலும் ஏன் சுமந்து செல்ல வேண்டும்? உன்னுடன் அழகாக நடந்து வராதா? என்று கேட்டான்.

இதனைக் கேட்ட செழியன் நான் சுமந்து வருவது ஆட்டுக்குட்டி. இப்போது-தான் சந்தையிலிருந்து வாங்கி வருகிறேன் என்றான்.
உடனே திருடன், நாயைக் கொடுத்து, ஆட்டுக்குட்டி என்று பணத்தை வாங்கி-விட்டார்களா? இப்படி ஏமாந்திருக்கிறாயே என்று பரிதாபப்பட்டு ஒதுங்கிக் கொண்டான்.
அடுத்த சில நிமிடத்தில் இரண்டாவது திருடன் செழியன் அருகில் வந்து, என்ன வெயில் என்ன வெயில், எப்படி தம்பி இந்த நாய்க் குட்டியையும் சுமந்து கொண்டு உன்னால் நடக்க-முடிகிறது என்று பேச்சுக் கொடுத்தான். அதற்குச் செழியன், அய்யா என்னிடம் ஆட்டுக்-குட்டியல்லவா இருக்கிறது. தாங்கள் ஏன் நாய்க்குட்டி என்று பொய் சொல்கிறீர்கள் என்றான்.
உஷாராகிய திருடன், உன்னிடம் அழகான நாய்க்குட்டிதான் உள்ளது. இது தெரியாமல், பாவம் நீ எவ்வளவு தூரம் சுமந்து வந்தாயோ என்று கூறி, அருகில் பிரிந்து சென்ற சிறிய பாதையில் பிரிந்து செல்வதுபோல் சென்றுவிட்டான்.
குழப்பத்துடன் நடந்து கொண்டிருந்தான் செழியன். அப்போது அவனுக்குப் பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்து, வந்தவரிடம் அண்ணே, என்னிடம் என்ன இருக்கிறது? கொஞ்சம் நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் என்றான்.
உடனே மூன்றாம் திருடன், உன்னிடம் நாய்க்குட்டி உள்ளது என்றான். அப்போது, அந்த ஆடு, பே.. பே... என்று கத்தியது. மகிழ்ச்சியடைந்த செழியன், அண்ணே என் னிடம் இருப்பது நாய் என்றீர்கள். ஆனால், ஆடல்லவா கத்துகிறது என்றான்.
திருடனோ, ஏனப்பா லொள்... லொள் என்று நாயல்லவா குரைத்தது. ஆடு கத்துகிறது என்-கிறாயே! ஆடு கத்து-வதற்கும் நாய் குரைப்-பதற்கும் வித்தியாசம் தெரியாத ஆளா இருக்கியே! உனக்குக் கண்பார்வையில்தான் ஏதோ கோளாறு இருப்பதாக நினைத்தேன். ஆனால், காதும் சரியாகக் கேட்காதா என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
மிகுந்த குழப்பத்தில் நடந்தான் செழியன். அப்போது நான்காம் திருடன் வேகமாக நடந்து அருகில் வந்தான்.
தம்பி, நீ வீட்டில் ஆசை ஆசையா வளர்க்கும் நாயோ இது? என்ன பெயர் வைத்திருக்கிறாய் என்றான். செழியனுக்கு, தான் சுமந்து வருவது நாயோ என்ற சந்தேகம் முழு அளவில் ஏற்பட்டது. உடனே, தன்னிடம் இருந்த ஆட்டுக்குட்டியைக் கீழே விட்டுவிட்டு, சந்தையில் தன்னை ஏமாற்றி-விட்டார்களே என்ற வெறுப்பில் விரைந்து வீட்டை நோக்கி நடந்தான்.
நான்கு திருடர்களும் ஒன்று சேர்ந்து, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் .
திரும்பத் திரும்ப நாய் என்று சொல்லிக் குழப்பமடைய வைத்தனர். குழப்பமடைந்தபோது சிந்தித்து _ பகுத்தறிந்து பார்க்காமல், பொய்யான கருத்தினை உண்மை என நம்பி ஏமாந்தான் செழியன். செழியனின் மனதில், பொய்யைச் சொல்லி உண்மை என நம்ப வைத்தனர் திருடர்கள்.
இதே போல்தான், மதக் கருத்துகளும், கடவுள் பற்றிய நம்பிக்கைகளும், புராண இதிகாசங்களும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்தன. சிந்தித்துப் பார்க்காத மக்களும், உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிந்தும் _ அனைத்துமே கட்டுக்கதை என்று தெரிந்தும் அவற்றை ஏற்றுக் கொள்ளும்படியாகிவிட்டது.
|