விளையும் பயிர்
நிக்கோலா டெஸ்லா

இளம் வயதிலேயே அளவற்ற நினை-வாற்றலும் புரிந்து படிக்கும் திறமையும் பெற்று ஆசிரியரையே அதிசயத்தில் ஆழ்த்திவிடு-பவராகத் திகழ்ந்தவரே நிக்கோலா டெஸ்லா. இருதிசை மின்னோட்டத்தைக் கண்டுபிடித்து மின்சாரத்துறையில் பல புரட்சிகளைச் செய்தவர். யூகோஸ்லேவிய நாட்டு விஞ்ஞானி.

ஒருநாள், காஸ்பிக் நகரத்திற்கு வெளியே உள்ள ஆற்றங்கரை ஒன்றில் மக்கள் கூடியிருந்தனர். நகர சபையிலிருந்து புதியதாக தீயணைக்கும் இயந்திரத்தை வாங்கியிருந்தனர். அதனைக் கொண்டாடவே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தில் 7 வயதுச் சிறுவனாக நிக்கோலா டெஸ்லாவும் அவரது தாயாருடன் நின்று கொண்டிருந்தார்.

நகரசபைத் தலைவர் தீயணைக்கும் இயந்திரம் வேலை செய்யும் முறையினை விளக்கமாக மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இயந்திரத்திலுள்ள கைப்பிடியைச் சுற்றினால்போதும், ஆற்றிலே விடப்பட்டுள்ள நீண்ட குழாயின் மூலமாகத் தண்ணீர் இழுக்கப்பட்டு இங்கேயுள்ள தொட்டியில் வந்து நிரம்பும். பின்னர், பம்ப்பின் அழுத்தத்தால் அங்கிருந்து வெளியேறி, குறிப்பிட்ட இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மீது பீறிட்டுப் பாயும் என்றார்.

மக்கள் கைப்பிடியை இயக்கிப் பார்க்கும் ஆவலில் இருந்தனர். நகரசபைத் தலைவரின் அனுமதியுடன் கைப்பிடியைச் சுற்றினர். தொட்டிக்குத் தண்ணீர் வரவில்லை. மக்களோ, விடாப்பிடியாக தங்கள் பலம் முழுவதையும் கைப்பிடியைச் சுற்றுவதிலேயே காட்டிக் கொண்டிருந்தனர். தண்ணீர் வரவுமில்லை; பீய்ச்சி அடிக்கவுமில்லை.

தொட்டிக்கு ஏன் தண்ணீர் வரவில்லை என்று தீவிரமாகச் சிந்தித்தார் டெஸ்லா. மின்னல் வேகத்தில் ஆற்றை நோக்கி ஓடினார். பின்னாலேயே பதறியடித்துக் கொண்டு அவரது தாயாரும் ஓடினார். தண்ணீரினுள் விடப்-பட்டிருந்த உறிஞ்சு குழாயினை (hose) உற்றுக் கவனித்தார் டெஸ்லா.

தீயணைக்கும் இயந்திரம் இயக்கப்பட்டதால், அந்த நீண்ட குழாயின் உள்ளேயிருந்த காற்று உறிஞ்சப்பட்டு, அதனால் தண்ணீருக்குள் விடப்பட்டிருந்த குழாயின் ஒரு பகுதி மடங்கிக் கிடந்தது. இதனால்தான் தண்ணீர் வரவில்லை என்பதை உணர்ந்தார்.

ஆற்றினுள் சென்று, மடங்கிக் கிடந்த குழாயின் நுனியைப் பிரித்து தண்ணீரில் அழுத்தினார். அப்போது குழாயின் வழியே தண்ணீர் தீயணைக்கும் இயந்திரத்தில் இருந்த தொட்டியினுள் சென்றது. நகரசபைத் தலைவர் விளக்கியதுபோல் வானத்தை நோக்கிப் பீறிட்டு அடித்தது.

மக்கள் அனைவரும் வியந்து பார்த்து மகிழ்ந்தனர். தீயணைப்புப் படைவீரர்கள் இந்தச் சிறுவயதிலேயே இவ்வளவு அபாரமான சிந்தனைத் திறனா என நினைத்துப் பாராட்டினர். டெஸ்லாவைத் தூக்கிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினர். டெஸ்லாவின் தாயார் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து நின்றார்.

Bookmark and Share