வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
சிகரம்
அப்பா அப்பா ... எல்லோரும் கூட்டமாப் போறாங்களே எங்கே! மதியொளி கேட்டாள்.
கூட்டத்தைத் திரும்பிப் பார்த்த அவள் தந்தை வளவன், ஏ...தம்பி, இங்கவா... என்று கூட்டத்தில் சென்ற ஒருவனை அழைத்து, எங்கப்பா எல்லோரும் கூட்டமாப் போறீங்க? என்று கேட்க,

வாய்க்கால் கரையில் ஒரு வேப்பமரத்தில் பால் வடியுதாம்.... வாயில் வைத்தால் தித்திக்கிதாம்.... என்று சொல்லிக் கொண்டே ஓடி கூட்டத்தில் மீண்டும் சேர்ந்தான்.
வேப்ப மரத்தில் பால் வடியுமா? என்று மதியொளி வளவனிடம் கேட்கும்போது, அவ்வழியே கிண்ணத்துடன் வந்த சின்னசாமி,
இங்கபாருப்பா ஆத்தா மகிமையை! கசக்கிற வேப்பமரத்தில் வடியிறபால் எப்படித் தித்திக்குதுபாரு! என்று வளவனிடம் கிண்ணத்தில் உள்ள வேப்பமரத்தில் வடிந்த-பாலை எடுத்துவந்து காட்டினார்.
அதற்குள் அப்பாலை விரலால் தொட்டு, தன் வாயில்வைத்த மதியொளி, ஆமாம்ப்பா... தித்திக்குதுப்பா! என்று மகிழ்வும் வியப்பும் பொங்கக் கூறியபடியே,
இது மாரியாத்தாள் மகிமையாப்பா? என்று இரண்டாவது கேள்வியையும் கேட்டாள்.
இல்லம்மா! என்று வளவன் கூற, கோபம் பொங்க, நீ வேணும்னா வாயில் ஊற்றிப்பாரு! என்று கிண்ணத்தை நீட்டினார் சின்னசாமி.
மாரியாத்தாள் மகிமையில்லாமல் கசப்பான தன்மைகொண்ட வேப்பமரத்தில் எப்படி இனிப்பான பால் வடியும்? என்றாள் மதியொளி.
நீயே கேளும்மா! என்றார்.
நான் சொல்லப் போறத இருவரும் கேளுங்க என்று வளவன் கூற, சின்னசாமி திண்ணையில் அமர்ந்தார்.
வேப்பமரத்தில் பழுக்கும் வேப்பம்பழம் கசக்குதா? தித்திக்குதா? வளவன் கேட்ட கேள்வி சின்னசாமியின் சிற்தனையைத் தூண்டியது.
வேப்பம்பழம் தித்திக்கும் என்றாள் மதியொளி.
வேப்பமரத்தில எல்லாமும் கசக்கும் என்பது சரியல்ல என்பது இப்போது புரிகிறதா? வேப்பமரத்துப் பழம் தித்திப்பது போலத்தான் வேப்பம்பாலும் தித்திக்கிறது.
எல்லா வேப்ப மரத்திலும் பால் வடியுமா? இந்த மரத்தில் மட்டும் எப்படி வடியுது? சின்னசாமி மடக்கினார்.
பால் வடியும் மரத்திற்கு அருகில் தண்ணீர் நிற்கிறதா? வளவன் கேட்டார்.
ஆம். வாய்க்கால் கரையில்தான் மரம் உள்ளது
உங்களுக்கு வயது அறுபது இருக்கும். இதற்கு முன் இதுபோல வேப்பமரத்தில் பால் வடியுறதப் பார்த்திருக்-கீங்களா?
நான்கைந்து இடத்தில் பார்த்திருக்கேன்.
தண்ணீர் இல்லாத இடத்தில் உள்ள எந்த வேப்பமரத்திலாவது பால் வடிந்ததா?
சின்னசாமி சற்று யோசித்துவிட்டு,
இல்ல இல்ல. எல்லாம் தண்ணீருக்கு அருகில் இருந்த மரங்களில்தான் பால்வடிந்தது என்றார்.
வேப்பமரத்தில் பால் வடியறதுக்கும், தண்ணீர் அருகில் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் மதியொளி குறுக்கிட்டுக் கேட்டாள்.
வேப்பமரத்தின் அடிமரம், கிளை இவற்றுள் மாவுச்சத்து (ஸ்டார்ச்சு) நிரம்பியிருக்கிறது. வேப்பமரத்தின் இலைகள் இந்த மாவுச்சத்தைச் சர்க்கரையாக மாற்றும். அதன் விளைவுதான் வேப்பம் பழம் இனிப்பாக இருக்கிறது.
வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருந்தால், மரத்தினுள் செல்லும் தண்ணீரின் அளவு அதிகமாகி, அதன்காரணமாய் வேப்ப-மரப்-பட்டைக்கு அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு வெடிக்க, மரத்திலுள்ள மாவுச்சத்து அதிகத் தண்ணீர் மரத்துக்குள் வந்ததால், அதில்கலந்து பால்போல் மாறி, அந்த வெடிப்பின்-வழியே கசிந்து சொட்டும். இதைத்தான் வேப்பமரத்தில் பால்வடிவதாக நாம் எண்ணுகி-றோம், காரணம் புரியாததால் மாரியாத்தாள் மகிமை என்று நம்புகிறோம்.
மரத்துக்கு அருகிலுள்ள தண்ணீரின் அளவு குறைந்தபின், மரத்துக்குள் செல்லும் நீரின் அளவும் குறைய, பால்வடிவது நின்று போகும்.
பால்வடிகின்ற மரங்கள் எல்லாம் தண்ணீருக்குப் பக்கத்தில் இருப்பதும், வறண்ட பகுதியில் உள்ள மரத்தில் பால் வடிவதில்லை யென்பதும் இந்த உண்மையை உறுதியாக்கும் வளவன் தெளிவாக்கினார்.
சின்னசாமி கிண்ணத்தைக் கவிழ்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். எண்ணம் மாறியதை அது உணர்த்தியது. என்ன தாத்தா அப்பா சொல்வது சரிதானே! மதியொளி கேட்டாள். சின்னசாமி சிரித்தபடி தலையசைத்தார்.
|