• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

2011_july_4-4
ஜூலை

நம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 – 1ஜூன் 1968)

எத்தகு துன்பம் வந்துற்ற போதும் ஏற்றமிகு வாழ்வு வாழ முடியும் என்று துணிந்த நெஞ்சுடனும், மாறா உள்ள உறுதியுடனும் ஓயாது உழைத்து வரலாற்றில் தனிச்சிறப்புடன் குறிப்பிடப்பெற்றவர்தான் ஹெலன் கெல்லர்.

பிறப்பு: 1880 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் நாள் அலபாமா மாநிலத்தில் டஸ்கம்பியாவில் [TUSCUMBIA] பிறந்தார். இவரது தந்தையார் ஆர்தர் – ஹெச் ஹெலன். அவர் உள்ளூர் நாளிதழ் ஒன்றின் பதிப்பாளர் – பருத்தி பயிரிட்டு வந்த நிலக்கிழார் மற்றும் படைத்தளபதியாகப் பணியாற்றிய பன்முகத் திறனாளர். இவரது தாயார் காதரின் ஆடம் கெல்லர், வர்ஜினியாவின் கவர்னர் மரபில் தோன்றியவர். ஹெலனைச் சிறப்புடன் வளர்த்து குடும்பத்திற்குப் பெருமையும் உலகினுக்கு நலமும் கூட்டியவர். ஹெலன் தனது 19ஆம் மாதத்தில் கடுமையான மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக இவர் பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்தார்.

திருப்புமுனை ஏற்படுத்திய ஆசிரியர்:

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல், பார்வை இழந்தோர் நலவாழ்விற்குத் தொண்டறம் புரிந்துவந்தார். இவர் வழிகாட்டலால் ஹெலன் தன் 7ஆம் வயதில் பார்வை இழந்தோர் பயிலும் பெர்கின்ஸ் [PERKINS] பள்ளியில் 1887ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார். இவருடைய ஆசிரியையாக ஆனி சலிவன் (ANNE SULLIVAN) நியமிக்கப்பட்டார். பாஸ்டன் நகரில் உள்ள அதே பெர்கின்ஸ் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றவர்தான் ஆனி சலிவன். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் இழந்த ஹெலனுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க ஆனி எடுத்த முயற்சிகள் வியப்பை ஊட்டுபவை. W – A – T – E – R என்ற வார்த்தையின் பொருளை உணர்த்த வேகமாகத் தண்ணீர் வெளிவரும் குழாய்க்கு அடியில் ஹெலனின் கையை வைத்து குளிர்ந்த நீர் கையைத் தொட்டுச் செல்லும்போது W – A – T – E – R என்று மெதுவாகச் சொல்லியும் பின்னர் அவ்வார்த்தையை கையில் விரல்களால் எழுதிக் காட்டியும் புரிய வைத்தார் ஆனி. இவ்வார்த்தையை முதன்முதலில் பொருளுடன் கற்றுக்கொண்ட ஹெலனின் உள்ளத்தெழுந்த உவகையைச் சொல்ல இயலாது. அன்று இரவு முடிவதற்குள் ஹெலன் 30 வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். இவ்வாறு அவர் படிப்பு துவங்கியது. இரவு முழுவதும் விழிப்புற்றெழுந்து மேலும் மேலும் வார்த்தைகளைக் கற்பதில் ஆர்வம் கொண்டார்.

பிரெய்லி முறை:

8 வயது துவங்கும்போது ஹெலன் பிரெய்லி முறையில் வேகமாகக் கற்கவும் எழுதவும் ஆற்றல் பெற்றார். லூயிஸ் பிரெய்லி விதைத்த விதை ஹெலன் வாயிலாக ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர் ஊன்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இளம் வயதிலேயே பயனுள்ள எண்ணங்களை எழுத்தாக்கினார். இத்திறனை உணர்ந்த அனைவராலும் ஹெலன் அதிசயக் குழந்தை [THE MIRACLE CHILD] என்று அழைக்கப்பட்டார். ஹெலன் தனது 9ஆம் வயதில் ஆசிரியர் சாரா ஃபுல்லர் [SARAH FULLER] என்பவரின் உதவியோடு முதன்முதலாக பேசவும் கற்றுக்கொண்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் பயிற்சி எடுத்து எல்லோருக்கும் புரியும் வகையில் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கோடை விடுமுறையில் இவர் பிரெய்லி முறையில் ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன் போன்ற மொழிகளை எல்லாம் கற்றார். இவர் தம் இருபதாம் வயதில் (1900இல்) ராட் கிளிஃப் [RAD CLIFFE] கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரியில் இவர் படித்த நான்கு ஆண்டுகளும் இவர் ஆசிரியர் ஆனி சலிவன் இவருடைய மொழிபெயர்ப்பாளராய் இருந்து கற்றலை எளிமையாக்கினார். 1904ஆம் ஆண்டு ஹெலன் இளம்கலை (B.A.)பட்டதாரியாக வெளிவந்தார். மாற்றுத் திறனாளிகளில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் இவரே.

படைப்பாளி ஹெலன்:

கற்றலுடன் நின்றுவிட்டால் அது வாழ்வில் முழுமையான வெற்றியை அளிக்காது. கற்றவற்றைப் பிறர் மகிழ்ந்து ஏற்கும்வகையில் நூல்களாக எழுதத் துணிந்தார். இவரது எழுத்துகள் பொதுமக்களால் குறைத்து மதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் துணிவையும், தன்னம்பிக்கையையும் ஊட்டின. ஹெலன் கல்லூரியில் பயிலும்போதே ‘THE LADIES HOME JOURNAL’ என்ற செய்தித்தாளில் என் வாழ்க்கை வரலாறு [The Story of my Life]  என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் இன்று 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. 1908ஆம் ஆண்டில், தான் உணர்ந்த உலகு ‘THE WORLD I LIVE IN’ என்ற நூலை எழுதினார். 1913ஆம் ஆண்டு இருட்டில் இருந்து வெளியேறு ‘OUT OF DARK’ என்ற தலைப்பில் பொதுவுடைமைக் கருத்துகளைத் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இவர் 12 நூல்களை எழுதினார். பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து காரல் மார்க்ஸ் [KARL MARX]  மற்றும் ஏஞ்கெல்ஸ்[ENGELS] ஆகியோர் நூல்களை விரும்பிக் கற்றார். 1917இல் நடைபெற்ற இரஷ்யப் புரட்சியை அங்கீகரித்தார். காணும் திறனும் கேட்கும் திறனும் வெளியுலக அனுபவங்களால் மட்டும் விரிவடைவதில்லை என்பதும், அவை உள்ளத்தெழும் உயரிய சிந்தனை வளத்தால் விரிவடையும் என்பதும் ஹெலன் கெல்லரின் அசையாத நம்பிக்கை.

பாராட்டும் – பட்டமும்:

அற்புதமான உழைப்பாளி [The Miracle Worker] என்று இவரது வாழ்க்கை நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இதன் பின்னர் இவரது வாழ்க்கையை ஆர்தர்பென் (ARTHOR PEN) திரைப்படமாக எடுத்து 2 ஆஸ்கர் (OSCAR) விருதுகளை வென்று இவரது தகுதிக்கு மணிமகுடம் சூட்டினார். இவர் வாழ்நாள் முழுவதும் வீழ்ச்சியுற்ற மக்களெல்லாம் நல்வாழ்வு வாழவும், மாற்றுத் திறனாளிகளும், மகளிரும் சம வாய்ப்பும் – சம உரிமையும் பெறவும் உறுதியுடன் உழைத்தார். இவரது அறிவுத்திறனையும் – தொண்டறத்தையும் பாராட்டி ஹார்வர்டு பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், டெம்பிள் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து – பெர்லின், ஜெர்மனி மற்றும் நம் நாட்டின் டெல்லிப் பல்கலைக்கழகம் ஆகிய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கவுரவ டாக்டர் பட்டம் தந்து இவர்தம் புகழைப் பன்மடங்கு உயர்த்தின. கற்றவர்க்கு எல்லா நாடும் சொந்த நாடு _ எல்லா ஊரும் சொந்த ஊர் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப இவர் வாழ்ந்து காட்டினார்.

உலகப் புகழ்:

இவர்தம் பயன்மிகு செயலாற்றலின் விளைவாக ஜப்பான் நாட்டின் புனிதப் புதையல் ‘JAPAN’S SACRED TREASURE’ என்ற பட்டத்தையும், பிலிப்பைன்ஸ் மக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் தங்க இதயம் THE PHILIPPINES GOLDEN HEART’ என்ற சிறப்பையும், லெபனான் நாட்டினர் நல்லெண்ணத்திற்காக லெபனானின் தங்கப் பதக்கத்தையும் ‘LEBANON’S GOLD MEDAL OF MERIT’ மேலும் தான் பிறந்த நாட்டில் மக்கள் உரிமைக்கான ஜனாதிபதியின் பதக்கத்தையும்  ‘PRESIDENTIAL MEDAL FOR FREEDOM’  பெற்றார்.

1952ஆம் ஆண்டு இவரது முன்னேற்றத்தின் முன்னோடியான லூயிஸ் பிரெய்லியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபொழுது பிரான்சு நாட்டின் பிரசித்தி பெற்ற செவாலியர் விருது பெற்றார்.

பட்டம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்ற பொழுது இவர் பயின்ற ராட் கிளிஃப் [RAD CLIFFE]  கல்லூரி, சாதனை புரிந்த முன்னாள் மாணவி (ALUMNAE  ACHIEVEMENT AWARD) என்ற விருதினை வழங்கிப் பெருமை சேர்த்தது. அத்துடன் அவர் படித்த பள்ளியில் ஹெலன் கெல்லர் பெயரில் தோட்டம் அமைத்து – அவரது உயிருக்குயிரான ஆசிரியர் ஆனி சலிவன் பெயரில் நீர் ஊற்றினையும் அமைத்து ஆசிரியர் – மாணவர் அர்பணிப்புத் தன்மையை நிலைநிறுத்தினர்.

தொண்டறம்:

1921ஆம் ஆண்டு அமெரிக்காவில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை (AMERICAN FOUNDATION FOR THE BLIND) துவங்கப்பட்டு, வீழ்ச்சியுற்ற மக்கள் எழுச்சிபெறவும், அவர்தம் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களுக்காகத் தொடர்ந்து செல்வம் திரட்டவும், அறக்கட்டளையை வலுவூட்டவும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் – ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதினார் – கருத்தாழம் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டார். இவர் பிறர்நலனுக்கென அய்ந்து கண்டங்கள் – 35 நாடுகள் – சுமார் 40,000 மைல் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலக மக்களை ஒரே குடும்பமாக இணைக்க பெரும்முயற்சி எடுத்தார்.

விட்டுச் சென்ற செய்திகள் (LEGACY):

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்ற அவருடைய கருத்துக்கேற்ப உலகில் வாழும் வாய்ப்பிழந்த மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும் நம்பிக்கை மலர்களை மலரச் செய்த மாண்பாளர்.

– சாரதாமணி ஆசான்

30
விடைகள்விடைகள்2nd July 2011
எப்படி? எப்படி?26th July 2011எப்படி? எப்படி?

மற்ற படைப்புகள்

2011_july_4-2
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

காகிதத் தட்டு

Read More
2011_july_2-2
ஜூலை
1st July 2011 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2011_july_typewrite
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

தமிழ் தட்டச்சு

Read More
2011_july_4-4
ஜூலை
3rd July 2011 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள்

Read More
2011_july_silindar
ஜூலை
29th June 2011 by ஆசிரியர்

எப்படி? எப்படி?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p