இயற்கை காட்டும் ஒற்றுமை !
பச்சை யான மரங்களெல்லாம்
பக்கம் பக்கம் தோள்கொடுத்தே
இச்சை யோடே இணைகிறதே;
இன்பம் நமக்குத் தருகிறதே!
அழகாய்ப் படரும் கொடிகளெல்லாம்
அங்கும் இங்கும் கைநீட்டி
அழகாய் அணைத்துக் கொள்கிறதே;
ஆனந் தத்தைத் தருகிறதே!
சிறிய சிறிய செடிகளெல்லாம்
சேர்ந்து சிரித்துக் குலுங்கிடுதே;
செறியவாய்ப் பூக்கள் மணம்பரப்பிச்
சிந்தை தன்னை மயக்கிடுதே!
புல்லின் மீது பனித்துளிதான்
புன்சி ரிப்பால் கண்சிமிட்டிச்
சில்லென் றிங்கே நம்மைத்தான்
சிலிர்க்கும் படியாய்ச் செய்கிறதே!
ஆடு மாடு நாய்பூனை
அனைத்து விலங்கும் ஒன்றாக
அன்போ(டு) அணைத்தே உறவாடி
ஆனந் தத்தைத் தருகிறதே!
இயற்கை தந்த பாடத்திலே
எல்லாம் அன்பின் அடையாளம்;
உயர்வாம் இதனை நாமுணர்வோம்;
ஒற்று மையாக வாழ்ந்திடுவோம்!
– கே.பி.பத்மநாபன்,
கோவை