கிலுகிலுப்பை
“ப |
ோகக்கூடாதுன்னா போகக்கூடாது தான்” என்று அம்மா சொல்லி விட்டார். ஆனால் தன்வந்திற்கு கொஞ்சம் சோகமாகப் போய்விட்டது. செல்வியின் தம்பியைப் பார்க்க அந்தத் தெருக் குழந்தைகள் எல்லோரும் போகத் திட்டம் போட்டிருந்ததால் அங்கே போய் வர அனுமதி கேட்டிருந்தான் தன்வந்த். செல்வி அந்தத் தெருவில் வசிப்பவள் அல்ல. அருகே இருக்கும் பகுதியில் வசிக்கின்றாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மழை நாளில் அந்தப் பகுதியில் தண்ணீர் புகுந்துவிட்டது எனப் பல குடும்பங்கள் தன்வந்த் தெருவிற்கு வந்து ஒருவாரம் மொட்டை மாடியில் வசித்தார்கள். பின்னர் செல்வி மட்டும் வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விளையாட வருவாள். தன்வந்தைவிட இரண்டு வயது மூத்தவளாக இருப்பாள்.
செல்வியை அந்தத் தெருவின் வசிக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஒவ்வொரு முறையும் புதிய புதிய விளையாட்டினைச் சொல்லித் தருவாள். தன்வந்தைப் பார்க்கும்போதெல்லாம், ‘தம்பி சாப்பிட்டியா?’ என்றுதான் ஆரம்பிப்பாள். பல விளையாட்டுகளில் தன்வந்திற்கு விட்டுக் கொடுப்பாள். அகிலா வீட்டின் மொட்டை மாடியில் தான் பெரும்பாலான நேரம் விளையாடுவார்கள். மாடியில் பாதி இடம் தகரக் கூரை வேயப்பட்டு இருக்கும். சனி, ஞாயிறுகளில் அந்த நிழலில் விளையாடுவர்கள். விடுமுறை நாள்களில் செல்வி வந்தால்தான் களைகட்டும். அப்படி எல்லோருக்கும் பிடித்தமான செல்விக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கின்றான். அவனைப் பார்க்க பொடிசுகள் எல்லாம் கிளம்பிப் போவதாகத் திட்டம் போட்டார்கள். ஆனால், தன்வந்த் வீட்டில் அவனது அம்மா போய்வர அனுமதி மறுத்துவிட்டார்.
செல்வி தனக்கு தம்பி பிறந்திருக்கின்றான் என எல்லோருக்கும் ஆளுக்கொரு கமர்கட்டைக் கொடுத்தாள். தன்வந்த், அகிலா, நரேஷ், விந்தியா எல்லோருமே அந்த இனிப்பினை முதல்முறையாகச் சுவைக்கின்றார்கள். ‘அட, இப்படி ஓர் இனிப்புப் பண்டம் இருப்பதே தெரியாது’ என்ற அகிலா வியந்துபோனாள். நரேஷின் தாத்தா, தான் சின்ன வயதில் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மீதி நேரத்தில் கமர்கட்டு செய்ய உதவுவோம் எனப் பழைய நினைவுகளைக் கூறினார். செல்வியின் தம்பி பற்றிய விவரணைகளைச் செல்வி கூறக் கேட்டுத்தான் எல்லோருக்கும் அவ்வளவு ஆவல் பிறந்தது. “அவன் கண்ணு அப்படியே மினுக்குது தெரியுமா? அழுதுனே இருப்பான்; அக்கா நான் பக்கத்தில் போனதும் சிரிப்பான். அழுகைய நிறுத்திடுவான். அவனுக்கு அக்கான்னா அவ்ளோ இஷ்டம்” என்றாள். தம்பி பாப்பா பிறந்து பத்துநாள் கூட நிறைவேறவில்லை.
தெருவிலேயே மூத்தவன் நரேஷ் தான். அவன் ஒருவழியாகச் செல்வியின் வீட்டுக்குச் செல்ல தன்வந்தின் வீட்டில் அனுமதி வாங்கிவிட்டான். தன்வந்திற்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவனுக்குக் கைகால் ஓடவில்லை. வெள்ளிக்கிழமை மாலை எல்லோரும் கோவிலுக்குப் போய்விட்டு அப்படியே செல்வியின் வீட்டுக்குப் போகலாம் எனத் திட்டம். எல்லோரும் அவர்கள் செல்லும் டியூசன்களுக்கு விடுப்பு எடுத்துக்கொள்வதெனத் தீர்மானம். வியாழன் மாலை எல்லோரும் கூடிய போதுதான் குழந்தைக்கு ஏதாச்சும் பரிசு கொடுக்கணும் என்று முடிவானது.
“ஆமா அத்தைக்குக் குழந்தை பொறந்தப்ப கூட ‘கிப்ட்’ கொடுத்தோம்”.
ஆனால், குழந்தைகள் சேர்ந்து என்ன பரிசு கொடுப்பது? வீட்டில் காசும் கேட்க முடியாது. அவரவர் சேமிப்பு எவ்வளவு இருக்கின்றது எனப் பார்த்தார்கள். காசு சேர்த்தாலும் என்ன வாங்குவது, எங்கு வாங்குவது என்று குழப்பம் வேறு. அகிலா தன் வீட்டில் பயன்படுத்திய ஒரு பெட்ஷீட்டினை கொடுக்கப்போவதாக முடிவெடுத்தாள். நரேஷ் தன் வீட்டில் எதுவும் தரமாட்டார்கள் என ஒதுங்கிக்கொண்டான். ஆனால், அவன் தான் எல்லோரையும் செல்வியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பெரியவன். தன்வந்திற்கு ஏதாச்சும் கொடுக்கவேண்டும் என இரவெல்லாம் யோசனை.
வழக்கத்தை விட அதிகாலையிலேயே எழுந்து தான் சின்ன வயதில் பயன்படுத்திய கிலுகிலுப்பையைத் தேடிக் கண்டுபிடித்தான். கொஞ்சம் அழுக்காக இருந்ததால் பள்ளிக்குக் கிளம்பும் முன்னர் நன்றாகக் கழுவிவிட்டு வெயில் வரும் இடத்தில் காய வைத்துவிட்டுச் சென்றான். பள்ளியிலும் அந்தக் குழந்தையைப் பார்க்கும் நினைவு தான். குழந்தைக்கு ஒரு செல்லப்பெயர் வைக்க வேண்டுமே என்றும் யோசனை நிலவியது. தன் நண்பர்களுடன் மதியம் உணவருந்தும் போதும் அவ்வளவு மகிழ்ச்சியாகத் தான் இன்று மாலை தன்னுடைய நண்பன் வீட்டுக்குச் செல்லப்போவதாகப் பெருமைப்பட்டுக்கொண்டான்.
திட்டமிட்டபடியே மாலை எல்லோரும் கிளம்பினார்கள். மொத்தம் அய்ந்து பேர்கள். மூன்று சைக்கிள்கள். நரேஷின் சைக்கிளில் தன்வந்த் அமர்ந்துகொண்டான். செல்வி வீட்டுக்குப் போய்விட்டு போகலாம் என்று மட்டும் திட்டத்தில் மாற்றம். நரேஷிற்கு ஏற்கனவே இடம் தெரியும் என்பதால் சீக்கிரமே சென்றார்கள். செல்விக்கு அவர்கள் வந்ததை நம்பவே முடியவில்லை. “எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்கன்னு நெனச்சே பார்க்கல”ன்னு எல்லோரையும் மகிழ்ச்சி பொங்க உள்ளே அழைத்தாள். மிகச்சிறிய வீடு தான். வந்தவர்களுக்குப் பாய் ஒன்றினைப் போட்டாள். செல்வியின் அம்மா குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தார். “செல்வி எல்லாருக்கும் தண்ணி கொடும்மா” என்று திரும்பி இருந்தபடியே கட்டளையிட்டார்.
தண்ணீர் கொடுத்தாள் செல்வி. எல்லோரும் வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். செல்வி ஒவ்வொன்றாக விளக்கினாள். ‘இது அந்த மாடி வீட்ல கொடுத்தாங்க,’ ‘அந்த நடைவண்டி சிவா அப்பார்ட்மெண்ட்ஸ்ல கடைசி வீட்ல கொடுத்தாங்க,’ இப்படியாகச் சொல்லிக்கொண்டே சென்றாள். செல்வியின் அம்மா குழந்தையை அவர்கள் முன்னால் கிடத்தினார். செல்வி சொன்னது போலவே குழந்தை இருந்தது. அகிலா “இந்த மெத்தைல போடுங்க” என தன் வீட்டில் இருந்து எடுத்து வந்த பயன்படுத்திய மெத்து மெத்து போர்வையினை நீட்டினாள். செல்வி அதனைத் தொட்டுப் பார்த்து “என் தம்பிக்கா?” என மகிழ்ந்தாள்.
தன்வந்த் தன் பையில் கிலுகிலுப்பை வைத்திருந்தான். ஆனால் வெளியே எடுக்க வில்லை. பையில் ஒரு டிபன் பாக்ஸும் இருந்தது. அதனைத் திறந்து அதில் இருந்த ஆப்பிள் துண்டினை எடுத்து செல்வியின் அம்மாவிடம் நீட்டினான் “ஆண்டி, இந்த ஆப்பிளைச் சாப்பிடுங்க. நீங்க சாப்பிட்றது தான் பாப்பாக்கு சத்தாகப் போகும்னு எனக்கு தெரியும். அத்தைக்கு அப்படித்தான் சொல்லுவாங்க!”. ஆப்பிள் துண்டுகளை அவன் அம்மா காலையில் வெட்டி இருந்தார். அவனுடைய ஸ்நாக்ஸ் அது. தன்வந்திற்கு என்ன கொடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனால், பழங்கள் கொடுத்தால் குழந்தைக்கு நல்லது என எங்கோ கேட்டதால் ஆப்பிள் துண்டுகளை செல்வியின் அம்மாவிடம் நீட்டினான். அது உலர்ந்து விட்டிருந்தாலும் செல்வியின் அம்மா லேசான கண்ணீருடன் சுவைத்து “ரொம்ப டேஸ்டா இருக்கு தம்பி” என்றார். சிறிது நேரம் தம்பி பாப்பாவுடன் விளையாடிவிட்டு எல்லோரும் கிளம்பினார்கள்.
வரும் வழியில் தன் பையில் இருந்த கிலுகிலுப்பையை எடுத்து ஆட்டிக்கொண்டே வந்தான். பக்கத்து வண்டியில் இருந்த அகிலா “டேய், பாப்பாவுக்குத் தானே எடுத்து வந்தே? ஏன் கொடுக்கல?” என்றாள்.
கொஞ்சம் யோசித்துவிட்டு “அவங்க வீட்ல எல்லாமே வேற யாராச்சும் பயன்படுத்திய பொருளாவே இருக்கு, கிலுகிலுப்பையை அம்மாகிட்ட கேட்டு புதுசாவே வாங்கித்தரப் போறேன்”
கிலுகிலு… கிலுகிலு….<