கருப்பு கழுத்துக் கொக்கு
அ |
திகாலையில் சீக்கிரம் எழுந்து அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து நம்மைச் சுற்றி, கேட்கும் ஓசைகளை கவனித்துப் பார்த்தால் வானத்தை விசாரிக்கப் புறப்படும் பறவைகளின் சத்தம் தொடர்ந்து கேட்கும். மேலும் இதுநாள் வரை கேட்டிராத பல இனிய ஓசைகள் வருவதையும் நம்மால் கேட்டுணர முடியும். வீட்டைச் சுற்றி கனிகளைச் சுமந்து நிற்கும் மரக்கிளைகளிலிருந்து தன் இணையை அழைக்கப் பறவைகள் எழுப்பும் இசையையும், வண்டுகளின் ரீங்காரத்தையும், சருகுகளின் சலசலப்பையும் மௌனத்தினால் கேட்க முடியும்.
உலகம் ஓசைகளால் ஆனது. பல நேரங்களில் நம் பேச்சின் ஒலி, புற ஒலிகளை அமுக்கி விடுகிறது. ஒரு காலத்தில் நாம் வாழும் இந்த இடம் கூட அமைதியாக இருந்ததுதான். நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அதிக சத்தத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலகம் இன்றும் இனிய இசையால் நிரம்பியதாகவே இருக்கிறது. நாம் தான் அமைதியாக இல்லாமல் சத்தத்தால் உலகை சந்தைக் கடையாக மாற்றியுள்ளோம். ஆனால் பறவைகள் அந்த நாள் முதல் இந்த நாள் வரை இனிய ஒலிகளைப் பரிசாக வழங்கி பரபரப்பான நகர வாழ்வில் எந்தச் சுவடுமின்றி சீராகப் பறந்து செல்வதை பார்க்கும் பொழுது ‘கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை’ எனத் தோன்றுகிறது.
கிராமப்புறத்தில் எங்கிருந்தோ பறந்து வரும் கொக்குகளின் கூட்டம் தெற்கு நோக்கி வேகமாகப் பறந்து சென்றால் கிராமத்து மக்கள், “கொக்கு போகிற வேகத்தைப் பார்த்தால் கிழக்கே எங்கேயும் தண்ணீர் இல்லை என்று தோன்றுகிறது. எனவே இந்த வருடம் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை” என்று உறுதி செய்கின்றனர். அதே சமயம் தைலான் என்ற பறவை ஊரைச் சுற்றத் துவங்கினால் ‘மழை வரப்போகிறது’ என்றும் பறவைகளின் வருகையை வைத்தே பருவநிலையை கண்டுபிடித்தனர். அதுபோல ‘நேரம் என்ன?’ என்பதை நம் முன்னோர்கள் காலையில் பறவைகள் சத்தமிடுவதை வைத்தே நேரத்தைக் கண்டுபிடித்தார்கள் கரிச்சான் குருவி அதிகாலை 3 மணிக்கும், குயில் காலை 4 மணிக்கும், சேவல் 4.30 மணிக்கும், காகம் காலை 5 மணிக்கும் கெளதாரி காலை 5:30 மணிக்கும், மீன் கொத்தி காலை 6 மணிக்கும் இன்னிசை பாடி உலகை எழுப்பும். பறவைகளிடம் நாம் கற்றுக் கொள்ள இன்னும் ஏராளம் உள்ளது. எந்தப் பறவையும் தன் தேவைக்கு அதிகமாக சேமித்து வைத்துக் கொள்வதில்லை. பறவைகள் வாழ்வை ஒவ்வொரு நாளும் புதியதாகச் சந்திக்கின்றன. ஒவ்வொரு பறவையும் எழுதப்படாத சரித்திரம்.
நீரோடு மனிதர்கள் கொள்ளும் உறவை விடவும், பறவைகள் கொள்ளும் உறவு மிக நுட்பமானது. பறவைகள் நீர் நிலைகளைத் தன்னியல்பில் கண்டுபிடிக்கின்றன. பறவைகளின் அழகை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆகவே தான் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்கென ஒரு பறவையைத் தேர்ந்தெடுத்து அதைத் தேசியப் பறவையாக அறிவித்துள்ளன.
ஒரு பறவை ஒரு நாட்டிற்கு மட்டும்தான் தேசிய பறவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆஃப்கானிஸ்தான், ஜெர்மனி, மெக்சிகோ ஆகிய நாடுகள் கோல்டன் ஈகிள் பறவையைத் தேசியப் பறவையாகவும், ஜிம்பாப்பே, ஜாம்பியா, நமீபியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் ஆஃப்ரிகன் ஃபிஷ் ஈகிள் பறவையும், பெலாரூஸ், லித்துவேனியா ஆகிய நாடுகளில் தேசியப் பறவையாக செங்கால் நாரையும் உள்ளது. இந்தியாவில் தேசியப் பறவையாக மயில் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பறவையை மாநிலப் பறவையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் லடாக் மாநிலப் பறவையாக கருப்புக் கழுத்துக் கொக்கு (BLACK – NECKED CRANE) உள்ளது.
இப்பறவை பவுத்த மரபுகளில் மிகவும் போற்றப்படும் பறவையாக உள்ளது. கலாச்சார ரீதியாக பூட்டானில் பாதுகாக்கப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயர் கிரிஸ் நிக்ரி கோலிஸ் (GRUS NIGRICOLLIS) என்பதாகும். கருப்புக் கழுத்துக் கொக்கு சீனா, பூட்டான், நேபாளம், திபெத் மற்றும் இந்தியாவின் வடக்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றது.
கருப்பான சிறிய தலையும், பிரகாசமான மஞ்சள் நிறக் கண்களும், தலையின் உச்சிப் பகுதியில் குங்குமம் வைத்தாற் போல சிவந்த ரோமமும், குறுகிய நீண்ட கழுத்தும், கழுத்தின் மேற்பகுதியில் கருப்பு வண்ணமும், கீழ்ப் பகுதியில் உடலின் மங்கிய சாம்பல் நிறமும் கொண்டது. உடல் முழுவதும் மங்கிய சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். அடர்த்தியான புதர் போன்ற மென்மையான கருப்பு நிற வால் பகுதியும், சதுப்பு நிலங்களில் நடப்பதற்கு எளிதாக நீண்ட மெல்லிய பழுப்பு நிறக் கால்களும், இரையை எளிதில் பிடிக்க நீண்ட அலகும் உடையது, இந்த கருப்புக் கழுத்துக் கொக்கு!
இப்பறவை 140 செ.மீ நீளம் வரை வளரும் தன்மையுடையது. உடலின் எடை சுமார் 5.5 கிலோ வரை இருக்கும். இதனுடைய இறக்கை விரிந்த நிலையில் 7.8 அடி நீளம் கொண்டது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட போதிலும் ஆண் பறவை சற்றே உயரமானது.
இப்பறவைகள் சிறு குழுக்களாகத் தரையில் உணவு தேடுகின்றன. குழுக்களுக்குப் பெண் பறவைகள் தலைமை தாங்குகின்றன. இவை முதன்மையான உணவாக வெட்டுக்கிளி, மீன், தவளை, பல்லி, மண்புழு, நத்தை போன்ற அசைவ உணவுகளையும், கிழங்கு, ஓட்ஸ், பார்லி, கேரட் போன்ற சைவ உணவுகளையும் விரும்பி உண்ணுகின்றன. கருப்புக் கழுத்துக் கொக்கு நீர் நிலங்களின் ஓரமாக உணவைத் (மண்புழு, நத்தை) தேடிக்கொண்டே நீண்ட தூரம் நடந்து செல்லும். மேலும் இதனால் நீண்ட தூரம் பறக்கவும் முடியும். குறிப்பாக வலசை செல்லும் காலத்தில் நீண்ட தூரம் பறந்து செல்கிறது. ஒரு நாளில் 75% நேரத்தை உணவு தேடுவதற்காகவே செலவிடுகிறது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
– திருக்குறள் – 322
“கிடைத்தவற்றைப் பகுந்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்களில் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் “என்பது போல, கருப்புக் கழுத்துக் கொக்கு தன் தேவைக்கு அதிகமான அளவு உணவு கிடைக்கும் இடங்களைத் தன்னுடைய சக பறவைகளுக்கு தெரியப்படுத்த ஒரு விதமான ‘கர்ர்’ என்ற ஒலியை எழுப்பி அழைக்கிறது. அந்த ஒளியைக் கேட்ட மற்ற பறவைகள் அப்பகுதியை நோக்கி விரைந்து செல்கின்றன.
பருவமடைந்த பறவைகள் தனக்கான இணையைக் கவர்வதற்காகப் பெண் கொக்கின் முன்னால் உடலை வளைத்து, நெளித்து, கழுத்தை உயர்த்தியும் தலையை அசைத்தும் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி பேடைக் கொக்கை சந்தோஷமடையச் செய்கிறது. இந்தச் செயல் பேடை கொக்கிற்குப் பிடித்திருப்பின் தானும் சேர்ந்து நடனமாடி இணை சேர்கின்றது. மே – ஜூன் மாதங்கள் இனப்பெருக்க காலமாகும். இக்காலகட்டத்தில் வடக்கு நோக்கி அல்பைன் புல்வெளிக்குச் செல்லுகின்றன. சில பறவைகள் அருகில் உள்ள சதுப்பு நிலங்களுக்கும் நதி பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கும் சென்று இனப்பெருக்கம் செய்கின்றன.
பொதுவாகக் கூடுகளை ஒரு பெரிய ஆழமற்ற ஈர நிலத்தில் சிறிய குழி தோண்டி அதன் மேல் புல், காய்ந்த களைச் செடி, நாணல் ஆகியவற்றை நிரப்பி மெத்தை போலாக்கி, அதன்மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை இட்டு முப்பதிலிருந்து முப்பத்தி அய்ந்து நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. ஆண், பெண் இருபாலரும் அடைகாக்கின்றன. பெரும்பாலும் இரவு நேரத்தில் பெண் பறவை அடைகாக்கும் போது, ஆண் பறவை எதிரிகளைக் கண்காணித்து வருகிறது. பகல் பொழுதில் ஆண் பறவை அடைகாக்கின்றது. உலகில் எல்லாப் பறவைகளும் தனது கூட்டில் இருந்துதான் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. குஞ்சுகள் பொரிந்து வெளியே வந்ததும் குளிர்ந்த காற்று வீசும் இரவு நேரங்களில் தாய்ப் பறவை குஞ்சுகளை அரவணைத்துத் தன்னுடைய இறகுகளினால் மறைத்து வைக்கிறது. இரண்டு மாதத்திற்குப் பிறகு குஞ்சுகள் நன்றாகப் பறக்க பயிற்சி கொடுக்கப்படுகிறது. குஞ்சுகள் தனியாகப் பறக்கவும், உணவு தேடும் திறனும் கொண்டாலும் குழுக்களோடு தான் பறக்கின்றன. கருப்புக் கொக்கின் ஆயுட்காலம் சுமார் 30 ஆண்டுகள்!
பறவைகளை நாம் சுதந்திரத்தின் அடையாள மாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும், சமாதானத்தின் அடையாளமாகவும், காதலின் அடையாளமாகவும் வைத்து கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் உண்மையில் பறவை கள் சுதந்திரமாகப் பறக்க முடியவில்லை இன்றும் அரிய வகையான பறவையினங்கள் வேட்டையாடப்பட்டு அழிந்து வருகின்றன. மேலும் இயற்கையைப் பாதுகாக்க தவறியதன் விளைவாக நீர்நிலைகள் பற்றி போகத் துவங்கி, பறவைகளின் வாழ்வை பாழ்படுத்துகிறது. இவ்வாறு காலநிலை மாற்றம், காடழிப்பு மற்றும் மனிதச் செயல்பாடுகள் காரணமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பறவையினங்களைப் பாதுகாத்திட நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். இந்த பூமி எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம் அதிலும் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது பூமியின் உயிர் சூழலுக்கு முக்கியமாகும்.
பறவையின் பயணம்!
பாரினை பசுமையாக்கும்!<