எது அன்னதானம்
மகள் : அப்பா இன்று நீங்கள்ஏன்
அளவு கடந்த மகிழ்ச்சியில்,
துள்ளித் துள்ளிக் குதிக்கிறீர்?
சொல்லுங் கள்ஏன்? சொல்லுங்கள்!
தந்தை: அன்பு மகளே நேற்றுநான்
அளித்த அன்ன தானம்தான்
வெற்றி வெற்றி பெரும்வெற்றி
அதனால் இப்படி மகிழ்கிறேன்!
மகள் : அன்ன தானம் யாருக்காம்
அதனைக் கொஞ்சம் சொல்லுங்கள்
எத்தனை பேர்அதில் பயன்பெற்றார்
எடுத்துக் கொஞ்சம் கூறுங்கள்!
தந்தை: ஆயிரம் பேர்கள் தெரியுமா?
அத்தனை பேரும் செல்வந்தர்
வகைவகை யான உணவெல்லாம் வழங்கிய என்னைப் புகழ்ந்தார்கள்!
மகள் : நானும் அன்ன தானத்தை
நாள்தவ றாமல் செய்கின்றேன்
எப்படி என்று கேட்பீர்கள்
எடுத்துச் சொல்வேன் கேளுங்கள்!
பள்ளியில் உணவு வேளையிலே பசியைப் போக்க நம்வீட்டில்
நிறைய உணவு தந்தென்னை
நீங்கள் அனுப்பி வைப்பீர்கள்!
அங்கே சிலபேர் உணவின்றி
அழுவர்! அவர்கள் பசிதீர
என்றன் உணவில் ஒருபகுதி
எடுத்து வழங்கி மகிழ்ந்திடுவேன்!
ஒருசில நாளில் முழுஉணவும்
உவந்தே அவர்க்குத் தந்திடுவேன் அவர்கள் உண்டு களிப்பதையே அன்பாய்ப் பார்த்து மகிழ்வேனே!
மிகவும் சிறிய இச்செயலும் மேன்மை மிக்கது இல்லையா?
அப்பா இதுவும் மிகநல்ல
அன்ன தானம் ஆகாதா?
தந்தை: ஆமாம் மகளே நீசெய்யும்
அச்செயல் மிகமிகப் பெரிதான
அன்ன தானமாம் ஒப்புகிறேன்
அன்பு மகளே வாழ்த்துகிறேன்!
பசியைப் போக்கும் செயல்தானே
பயன்மிக அன்ன தானம்ஆம்! பகுத்தறிவுள்ள என் மகளே,
பாவிஎன் கண்ணைத் திறந்தாயே!<