குழந்தைகளின் சாட்சி
க |
ம்பீரமாக நீதிமன்றத்தின் கூண்டில் நின்றபடி நீதிபதியைப் பார்த்து “இதுதான் நடந்தது…
காவல்துறை கைது செய்து அழைத்து வந்திருக்கிற நான் குழந்தைகளைக் கடத்தவில்லை. கடத்தி விற்பனை செய்ய இருந்த குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறேன்.
காட்டுக்குள் இருந்தாலும் காட்டு மரங்களை வெட்டி வெளிநாட்டுக்குக் கடத்தும் வேலையை நான் செய்யவில்லை. வெட்டிக் கடத்தும் சில பொல்லாத மனிதர்களிடமிருந்து வனத்தைப் பாதுகாத்திருக்கிறேன்.
ஏற்கனவே… மரங்களை வெட்டிக் கடத்தும் வேலையைச் செய்து வந்த குல்மால் குருஜியின் கூட்டம் வனத்துக்குள் புகுந்து, தங்கள் வசதிக்கு ஏற்றபடி மரங்களை வெட்டி அழிக்கத் தடையாக நான் இருந்ததால், தற்செயலாக குழந்தைகள் தப்பித்து வந்து என்னிடம் இருப்பது தெரிந்த குல்மால் குருஜி என்னைக் குற்றவாளியாக்கத் திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்.” என்று சொல்லி முடித்தார் காட்டுவாசி.
“நீங்கள் கடத்தி வைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட குழந்தைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டார் நீதிபதி. உயர் காவல் துறை அதிகாரி நீதிபதி முன் வந்து நின்று சல்யூட் அடித்துவிட்டு “குழந்தைகள் இருவரும் காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்ததால் அந்தந்த காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகள் இருவரையும் இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள்.” என்றார்.
“சரி குழந்தை அமுதாவை கூப்பிடுங்கு!” என்று நீதிபதி சொன்னதும் “அமுதா! அமுதா! அமுதா!” என்று உரக்கக் கூப்பிட்டார் டபேதார்.
அமுதா தன் அப்பாவோடு வந்து நின்றாள். “அம்மா அமுதா, உன்னை காட்டுவாசி எப்படி கடத்தினாரு?” என்று நீதிபதி கேட்கும் போதே “அய்யய்யோ! காட்டுவாசி என்னைக் கடத்தலே… மாசியும் மலையாண்டியும் தான் என்னைக் கடத்துனாங்க. அதுவும் அப்பா… என்னை அந்தக் கிளாசுக்குப் போ… இந்தக் கிளாசுக்குப் போன்னு கட்டாயப்படுத்துனதுனாலே கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு பீச்சுக்கு வந்தேன். அங்கே தான் என்னை ஏமாத்தி கார்ல கடத்துனாங்க. காட்டுவாசி சொன்ன மாதிரி நானும் மாணிக்கமும் அந்த மாசி, மலையாண்டிக் கிட்டேயிருந்து தப்பிச்சு காட்டுக்குள்ள போனப்ப எங்களைக் காப்பாற்றி பசிக்கு, பழமெல்லாம் குடுத்து… எந்தக் காரணத்துக்காகவும் அம்மா அப்பா கிட்டே கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டு வரக்கூடாதுன்னு புத்திமதி சொன்னாரு காட்டுவாசி. அவரு மட்டும் இல்லேன்னா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னு நினைச்சாலே பயமா இருக்கு.” என்றாள் அமுதா.
“கவலைப்படாதே! அமுதா… இப்பதான் அம்மா, அப்பா கிட்டே பத்திரமா வந்துட்டியே… இது யாரு?”
“நான் அமுதவோட அப்பா. என் பேரு ஆனந்தன். என் ஆசைப்படி குழந்தை நிறைய கத்துக்கணும்னு கீ போர்டு வாசிக்க… பாட்டு கிளாசு, டியூஷன்னு ஒவ்வொரு நாளும் அனுப்பி குழந்தையைச் சிரமப்படுத்திட்டேன். ரெண்டு நாளு குழந்தை காணாமல் தேடும் போதுதான் என் விருப்பத்துக்காகக் குழந்தையை எவ்வளவு சிரமப்படுத்தி இருக்கேன்னு உணர்ந்தேன்.
குழந்தைகளை பத்திரமாகப் பாதுகாப்பா காப்பாத்தித் தந்த காட்டுவாசிக்கும், காவல்துறைக்கும் ரொம்ப நன்றி.
இது மாதிரி வளரிளம் பருவக் குழந்தைகளைத் தங்களோட சுயநலத்துக்காக கடத்தி விக்கிற குல்மால் குருஜி கூட்டத்துக்கு சரியான தண்டனை தரணும்னும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
அதோட… இனி குழந்தையா இருந்தாலும் என் மகள் அமுதவோட விருப்பத்தைக் கேட்டு அவளுக்குப் புடிச்ச விளையாட்டை அவளுக்குக் கத்துத் தருவேன்” என்றார் அப்பா ஆனந்தன்.
“சரி… நீங்க போலாம்.” என்றார் நீதிபதி. எதிரில் நின்ற காட்டுவாசியைப் பார்த்து கண்களாலேயே நன்றி சொன்னாள் அமுதா. சிரித்தபடி அமுதாவையே பார்த்தார் காட்டுவாசி.
“அடுத்து… மாணிக்கத்தைக் கூப்பிடுங்க” என்றார் நீதிபதி.
டபேதார் “மாணிக்கம்… மாணிக்கம்… மாணிக்கம்…” என உரக்கக் கூப்பிட்டார்.
மாணிக்கம் தன் அம்மா வள்ளியுடன் வந்து நின்றான்.
“தம்பி! நீங்க எப்படி இவங்ககிட்டே மாட்டினீங்க?” நீதிபதி.
“நானும் அமுதா மாதிரி ‘அம்மா… என்னை படி… படிங்கிறாங்க… குடும்ப கஷ்டத்துக்கு வேலைக்குப் போக விட மாட்டுறாங்கலே’ன்னு கோவிச்சுக்கிட்டு பீச்சுக்கு வந்தேன்.
அங்கே இருந்த மலையாண்டி எனக்கு உடனே வேலை வாங்கித் தர்றேன்னு ஏமாத்தி கார்ல கடத்தினாரு.
காட்டுவாசி மட்டும் இல்லேன்னா என்னையும் அமுதாவையும் ஏதாவது செஞ்சிருப்பாங்க!
மாசியும், மலையாண்டியும் துப்பாக்கி எல்லாம் கொண்டுவந்து காட்டுவாசியை மிரட்டி எங்களைக் கடத்த முயற்சி செய்தாங்க! நல்லவேளை… காட்டுவாசிதான் எங்களைக் காப்பாத்துனாரு. அவரைத் தண்டிக்காதீங்க! அவரு ரொம்ப நல்லவரு. எங்களைப் பத்திரமா பாத்துக்கிட்டாரு… அவரை விட்டுடுங்க.” என பரிதாபமாகக் கேட்டான் மாணிக்கம்.
“ஆமாங்க! பிள்ளைகளைக் காப்பாத்தி மறுபடியும் எங்ககிட்ட கொண்டுவந்து சேத்த காட்டுவாசிக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.” என்றார் அம்மா வள்ளி.
“நீங்க! யாரு?” நீதிபதி கேட்டு முடிப்பதற்குள் “என் பேரு வள்ளி. மாணிக்கத்தோட அம்மா. வீட்டுக்காரரு இறந்துட்டாரு. நாலு வீட்டுல வீட்டு வேலை செய்து என் பிள்ளையைப் படிக்க வைக்கிறேன். அவன் நல்லா படிச்சு உங்களை மாதிரி பெரிய ஆளா வரணும்கிறதுதான் என்னோட ஆசை.” என்றார் வள்ளி. உடனே மாணிக்கம் ஆமாங்க! அதை புரிஞ்சுக்காம நான் தான் அவசரப்பட்டு வீட்டை விட்டு வந்து அம்மாவுக்கு சிரமம் குடுத்திட்டேன். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். அம்மாவோட ஆசையை நிறைவேற்றுவேன்”
“சரி… நீங்க போகலாம்.” என்றார் நீதிபதி. அங்கிருந்து வள்ளியும் மாணிக்கமும் அமர்ந்திருந்த இடத்திற்கு செல்ல, திரும்பும் போது பிடித்திருந்த அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிச் சென்ற மாணிக்கம் காட்டுவாசியை கட்டிப் பிடித்துக் கொண்டான். நீதிமன்றத்திலிருந்த அத்தனைப் பேரின் கண்களும் அந்த காட்சியையே பார்த்தன.
(தொடரும்)