நியூட்டோனியா நான் நியூட்டோனியா
“யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில, திருட்டுத்தனமா சமையலறைக்குள்ளே போய், சர்க்கரை, வெல்லம் சாப்பிடறதோட நிறுத்தாம, கண்ணாடிக் குடுவையில இருக்கும் தக்காளிச் சாஸை, குட்டிக் கிண்ணத்தில் ஊற்றி சாப்பிடுவேன்” என்று என் நண்பர் சொல்லுவார். “இதுல அம்மா வருவதற்குள்ள, அந்த கண்ணாடி குடுவையில் இருந்து தக்காளிச் சாஸை ஊற்றுவது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா? சட்டென்று ஊற்றவும் முடியாது. நாலு அஞ்சு தடவை குலுக்கிட்டே இருந்தா, தண்ணீர் மாதிரி ஆகி அதிகமா வந்துடும்.. ஒரு வழியா சரியான அளவு ஊத்துறவதுக்குள்ள என் தங்கை வந்து பார்த்துட்டு, அம்மாகிட்ட சொல்லிடுவா” என்று சொல்லிகிட்டே அவரின் தங்கையை முறைத்துப் பார்ப்பார், என் நண்பர். அவரும் ஒழுங்கு காட்டி ஓடிவிடுவார். சரி, அது இருக்கட்டும், நாம அறிவியலுக்கு வருவோம். வழக்கம் போல ஒரு கேள்வி இருக்கும் அல்லவா. அது என்ன? தக்காளி சாஸ், ஏன் கண்ணாடிக் குடுவையில் இருக்கும் போது கெட்டியாகவும், நாலு அஞ்சு தடவை குலுக்கினால், தண்ணீர் போல் இளகிய மாதிரியும் ஆகிடுது?
முதலில் நாம பாகுநிலை பற்றிப் பார்ப்போம். தேனை, ஒரு குடுவையில் இருந்து இன்னொரு குடுவைக்கு மாற்றி வைக்குறோம் என்று வைத்துகொள்ளலாம். தேன் ரொம்ப வேகமா மற்றொரு குடுவைக்குள்ள போகாது. அது ரொம்ப மெதுவாகத்தான் பாயும். அதுவே தண்ணீரை எடுத்துகொண்டால், ரொம்ப வேகமாப் பாயும் அல்லவா?
ஒரு திரவம், ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எந்த வேகத்துல பாயுது என்பதையே பாகு நிலை என்று சொல்கிறோம். வீட்டில் வெல்லம், சர்க்கரை எல்லாம் காய்ச்சி, திடநிலையிலிருந்து திரவ நிலைக்குக் கொண்டுவருவதை பாகு காய்ச்சுதல் என்று சொல்வாங்க இல்லியா? அந்த பாகு நிலையைத் தான் சொல்றேன். ஒரே உயரத்துல இருந்து தண்ணீரையும் தேனையும் ஊற்றினால், தேன் மெதுவாகத்தான் தரையில் வந்து விழும், இதுக்குக் காரணம் தேனின் பாகுநிலை, தண்ணீரை விட அதிகம்.
ஆப்பிள் மரத்துக்கு அடியில உட்கார்ந்ததால, புவி ஈர்ப்பு விசை பற்றி உலகுக்குச் சொன்ன நம்ம அய்சக் நியூட்டன், திரவங்கள் பற்றியும் சொல்லி இருக்கார். ஒரு திரவத்தின் மேல எவ்வளவு விசை கொடுத்தாலும், அதன் பாகுநிலை மாறாமல் இருந்தால், அந்தத் திரவத்தை எல்லாம் Newtonian liquid என்று சொன்னார் நம்ம நியூட்டன். ஆனால், திரவத்தின் மேல கொடுக்கப்படும் விசைக்கு ஏற்ப அந்தத் திரவத்தின் பாகுநிலை மாறினால், அதை non-Newtonian liquid என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்போ, நம்ம தக்காளி சாஸ்?? கண்டிப்பா non-newtonian liquid தான்.
தக்காளி சாஸ் குடுவையை, நாலு அஞ்சு தடவை குலுக்கும்போது, அந்தத் திரவத்தின் மேல நாம விசையைக் கொடுக்குறோம். அப்போ, எவ்வளவு விசை குடுக்குறோமோ, அதுக்கு ஏற்ப அந்தத் தக்காளி சாஸின் பாகுநிலை குறைந்து, தண்ணீர் போலப் பாய ஆரம்பித்துவிடும். இதுவே, முட்டையை ரொம்ப நேரம் அடித்துக்கொண்டே இருந்தால், அதோட பாகுநிலை அதிகமாகி, அதன் பாயும் தன்மை குறைந்து விடும். அப்போ, முட்டையும் non -Newtonian liquid தான்.
எதனால இப்படி ஆகுது என்பது குறித்து ஆராய்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு! நீங்களும் வளர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு எதனால பாகுநிலை விசைக்கு ஏற்ப மாறுது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. ஆனால், இப்போ, உங்களைச் சுற்றி எந்தத் எந்த திரவங்கள் எல்லாம் non Newtonian liquids என்று கண்டுபிடிங்க…. பார்க்கலாம்!