கவனச் சிதறலைக் கட்டுப்படுத்துங்கள்
| ந |
ம் கண்களால் எத்தனையோ காட்சிகளை எத்தனையோ பொருட்களை, எத்தனையோ மனிதர்களைப் பார்க்கிறோம். கண் திறந்திருக்கும் போதெல்லாம் எதையாவது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அத்தனையும் நம் நினைவில் பதிவதில்லை. நாம் எவற்றில் அதிகக் கவனம் செலுத்துகிறோமோ அவை மட்டுமே நம் நினைவில் நிற்கின்றன. எனவே, நினைவில் நிற்பதற்கு, ஒன்றின் மீது நாம் எவ்வளவு கூர்ந்து கவனம் செலுத்துகிறோம் என்பதே காரணம். கவனம் செலுத்தப்படாத எதுவும் நினைவில் நிற்காது.
நேரச்சிக்கனம்
படிக்கும்போது நம் கவனம் முழுவதும், சிதறாமல், நாம் படிக்கும் கருத்தில் செலுத்தப்பட்டால், அது நம் மூளையில் ஆழப் பதிந்து நினைவில் நிற்கும். அப்படிக் கவனம் சிதறாமல் படிக்கும்போது குறைந்த நேரத்தில் நிறைய படிக்கவும், நினைவில் கொள்ளவும் முடியும்.
மாறாக, படிக்கும்போது நம் கவனத்தைப் பலவற்றிலும் செலுத்திக் கொண்டிருப்போமே யானால், படிக்கின்ற கருத்துகள் நினைவில் பதியாது; மிகக் குறைவான அளவே படிக்க முடியும். சிலர் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டே பலவற்றிலும் கவனம் செலுத்துவர். இடையிடையே புத்தகத்தைப் படிப்பர். அப்படிச் செய்யும்போது இரண்டு மணி நேரம் கடந்தாலும், இரண்டு பக்கங்களைக் கூட படித்திருக்கமாட்டார்கள். அதே நேரத்தில் புத்தகத்தில் கவனச்சிதறலின்றி படித்தால், பத்து பக்கங்களுக்கு மேல் படித்து நினைவில் நிறுத்தியிருக்க முடியும். எனவே, கவனச் சிதறலைக் கட்டுப்படுத்தி, நம் செயலில் கவனம் செலுத்துவது கட்டாயம் ஆகும்.
உண்ணும் போதும், பருகும் போதும்
படிக்கும்போது மட்டும் என்றில்லாமல் எல்லாச் செயல்களையும் கவனச் சிதைவின்றிச் செய்யவேண்டியது கட்டாயமாகும். உணவு உண்ணும் போதும், நீர் பருகும்போதும் கவனம் சிதறல் கூடாது. பேசிக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, படித்துக்கொண்டோ உண்பது கூடாது.
உண்ணுகின்ற உணவை, மெதுவாக, நன்கு சுவைத்து நன்றாக மென்று உண்பதிலே கவனம் செலுத்தி உண்ணவேண்டும். சாறு, நீர் போன்றவற்றைப் பருகும்போது வேறு எதையோ நினைத்துக்கொண்டு, அவசர அவசரமாக, பதற்றத்துடன் பருகக் கூடாது. சில நேரங்களில் அது மூச்சடைப்புக்குக் காரணமாகிவிடும், பல நேரங்களில் ‘பொறை ஏறி’ பாதிப்பை உண்டாக்கும்.
அப்படி ‘பொறை ஏறும்’ போது நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுவர். அது தப்பு. நம்மை யாராவது நினைப்பதால் நமக்கு பொறை ஏறாது. மாறாக நாம் எதையாவது நினைத்துக்கொண்டு பருகுவதால் பொறை ஏறுகிறது என்ற உண்மையைப் பிஞ்சுகள் கருத்தில் கொள்ளவேண்டும்.
பார்க்கும்போதும், கேட்கும்போதும்
படிக்கும்போது மட்டுமல்ல, பார்க்கும்போதும், கேட்கும்போதும் கவனச் சிதைவின்றி கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். ஆசிரியர் பாடக்கருத்துகளைக் கூறும்போதும், கரும்பலகையில் எழுதி விளக்கும் போதும், மாணவர்கள் கவனம் முழுவதும் ஆசிரியர் கூறுவதிலேயே இருக்கவேண்டும். மாறாக அருகிலுள்ள மாணவர்களிடம் பேசுவது, வேறு செயல்களைச் செய்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர் நடத்தும்போது கருத்தூன்றிக் கவனித்தாலே பாடக்கருத்துகள் எளிதில் விளங்குவதோடு நினைவிலும் நிற்கும். வீட்டுக்குச் சென்றவுடன் ஆசிரியர் நடத்திய பாடத்தைப் படித்தால் மனதில் ஆழப் பதியும், தேர்வு நேரத்தில் மறக்காமல் இருக்கும்.
தூங்கும்போது
தூங்கச் சென்றபின் உறங்குவதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். மாறாக படிப்பு சார்ந்தோ, வேறு பிரச்சினைகள் சார்ந்தோ நினைத்துக்கொண்டிருந்தால் தூக்கம் கெட்டு உடல்நலம் பாதிக்கும். இரவில் நன்றாகத் தூங்கவில்லையென்றால், மறுநாள் பள்ளியில் பாடத்தைச் சரியாகக் கவனிக்க முடியாது. தூக்கக் கலக்கத்தில் இருக்கவேண்டிவரும்.
விளையாடும்போது…
விளையாட்டுதானே என்று நினைக்காமல், விளையாடும்போது கூட கவனத்துடன் விளையாட வேண்டும். கவனம் முழுக்க விளையாட்டில் மட்டுமே இருக்கவேண்டும். விளையாட்டு என்பது உடற்பயிற்சி மட்டும் அன்று; உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிப்பது. எனவே, விளையாடும்போது ஆர்வத்துடன், அதில் முழு ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். விளையாடும் போது, வீட்டுப் பிரச்சினைகளை நினைத்தல், நண்பர்களுடன் நடந்த கருத்து மோதல், சண்டை போன்றவற்றை நினைத்தல், படிக்கவேண்டியது நிறைய இருக்கிறதே என்று நினைத்தல் கூடாது. அது விளையாட்டால் கிடைக்கும் மகிழ்ச்சியை, புத்துணர்ச்சியைப் பாதிக்கும்.
தொலைக்காட்சி பார்க்கும்போது
திரைப்படம் அல்லது தொலைக்காட்சி பார்க்கும்போது, அதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அதன் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும் மாறாக, காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வேறு பிரச்சினைகளைப் பேசுதல், சண்டை போட்டுக் கொள்ளுதல், சாப்பிடுதல் கூடாது.
கவனச்சிதறலும் விபத்தும்
இன்று நடைபெறும் பல்வேறு விபத்துகளுக்குக் கவனச் சிதறல்களே காரணம் என்பது ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. சாலையைக் கடக்கும்போதும், சாலை ஓரத்தில் நடக்கும்போதும் செல்பேசியில் பேசிக்கொண்டே செல்வது கூடாது. அப்படிச் செய்தால் விபத்து நடக்க அதிக அளவு வாய்ப்புண்டு. சாலையில் செல்லும்போது நம் கவனம் முழுவதும் சாலையிலும், சாலையில் வருவோர் மீதும், வாகனங்கள் மீதும் இருக்கவேண்டும். சாலையில் செல்லும்போது, கட்டாயம் பேச வேண்டியநிலை வந்தால், ஓரிடத்தில், பாதுகாப்பாக நின்றுகொண்டு பேசிவிட்டு, பின் செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டிச் செல்வோர், தங்கள் கவனத்தை முழுமையாக ஓட்டுவதில் செலுத்த வேண்டும். மாறாக, செல்போன் பேசுதல், பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுதல் கூடாது. அவ்வாறு தப்பு செய்யும்போது, தப்பு செய்கின்றவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. தப்பு செய்யாதவர்களும், சரியாக நடந்துகொள்கிறவர்களும் பாதிக்கப்படுவது ஏற்க முடியாத பாதிப்பாகும்.
இவற்றிலும் கவனம் தேவை
மருந்துகள் சாப்பிடும் போதும், அடுத்தவர்க்குக் கொடுக்கும்போது மிகக் கவனமாகக் கொடுக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசிக்கொண்டோ, வேறு ஒன்றில் கவனம் செலுத்திக்கொண்டோ செய்தல் கூடாது, அப்படிச் செய்தால் மருந்துகளை மாற்றிக்கொடுத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
பள்ளிக்குச் செல்லும் முன் புத்தகங்கள், எழுது பொருள்கள், உணவு, தண்ணீர் போன்றவை முறையாக, சரியாகவுள்ளனவா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மாற்றி எடுத்துச் செல்வதோ? தேவையானதை எடுக்காமல் செல்வதோ கவனச்சிதறலால் வரும் விளைவுகள்தான் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தெருவில் நடந்துசெல்லும்போது தெருநாய்கள் பின்னால் வருகிறதா? என்றும், வழியில் கல், முள், கண்ணாடி ஓடு கிடக்கிறதா? என்றும், பள்ளம், மேடு இருக்கிறதா, மின்சாரக் கம்பி கிடக்கின்றதா என்று கவனத்துடன் பார்த்து செல்ல வேண்டும். இருந்தால் எச்சரிக்கையுடன் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்.<
