மூவரும் கைது
ந |
ீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட காட்டுவாசி, அவர் கடத்தியதாகச் சொல்லப்பட்ட சிறுமி அமுதா, அவளுடைய அப்பா ஆனந்தன், சிறுவன் மாணிக்கம், அவருடைய அம்மா வள்ளி எல்லோரும் சொன்ன செய்திகளைக் கவனமாகக் கேட்ட நீதிபதி பேசத் தொடங்கினார்.
“காட்டுவாசி, சிறுமி அமுதா, அவளின் அப்பா ஆனந்தன், சிறுவன் மாணிக்கம், அவன் அம்மா வள்ளி, எல்லோரும் சொன்னதைக் கேட்கும்போது இந்த வழக்கு எந்த நோக்கத்துக்காக இந்த நீதிமன்றத்துக்கு வந்ததோ அதிலிருந்து மாறி வேறு திசை நோக்கிச் செல்வதாகவே நான் கருதுகிறேன்.
இதோ இங்கே கைது செய்து அழைத்து வரப்பட்டிருக்கிற காட்டுவாசி சொன்னதைக் கேட்டால் அவருக்கும் இந்தக் குழந்தைகள் இருவருக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்றே தெரிகிறது. குழந்தைக் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவர் சொன்ன மற்ற தகவல்களைப் பார்த்தால் வழக்கில் இவரைச் சிக்க வைத்தவர்களே சிக்கலானவர்களாகத் தெரிகிறார்கள். ஆகவே, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து மலையாண்டி, மாசி இருவரையும் உடனே இந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிடுகிறேன்” என்று நீதிபதி சொல்லி முடிப்பதற்குள் நீதிமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒரு பரபரப்பு நிலவியது.
நீதிமன்ற வளாகத்தின் வெளியே நின்று கொண்டு வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்த மலையாண்டியையும், மாசியையும் சுற்றி வளைத்தனர் காவல்துறையினர்.
அதேபோல் நீதிமன்றத்தின் உள்ளே உட்கார்ந்திருந்த குல்மால் குருஜி அந்த இடத்தில் இருந்து மெல்ல நகர்ந்து வெளியே செல்ல எழுந்தபோது அவரையும் காவல்துறை மடக்கிப் பிடித்தது.
பார்வையாளர் மாடத்திலிருந்த பலரும்… “அடப்பாவிகளா… இவனுங்க எல்லாரும் சேர்ந்து எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்துட்டு, இந்த அப்பாவி காட்டுவாசியைச் சிக்கவச்சிருக்காங்க” என ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர். சற்று நேரத்தில் அமைதியானது நீதிமன்றம். உயர்காவல் அதிகாரி ஒருவர், நீதிபதி முன்வந்து வணக்கம் செலுத்தினார். பின்னர் குல்மால் குருஜி, மலையாண்டி, மாசி மூவரையும் கைது செய்துவிட்டதாகவும் மூவரையும் விசாரிக்க கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார். சிறிது நேரத்தில் நீதிபதி “கைது செய்யப்பட்டுள்ள குல்மால் குருஜி, மலையாண்டி, மாசி மூவரையும் தீர விசாரித்து நாளை காவல்துறை தகவல் தெரிவித்த பின் இந்த வழக்கு தொடர்ந்து நடக்கும். அதுவரை காட்டு வாசியைக் காவல்துறை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் நாளையும் நீதிமன்றம் வரவேண்டும்” எனவும் தெரிவித்தார். சின்ன சலசலப்போடு நீதிமன்றம் கலைந்தது.
வீட்டில் உணவு மேசையில் அமுதா, அப்பா ஆனந்தன், பாட்டி, மூவரும் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்தனர். அம்மா வழக்கம் போல மூவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டே பேச்சில் கலந்துகொண்டார்.
“காட்டுவாசி மாதிரி ஒரு நல்ல ஆளு காட்டுக்குள்ள இருந்ததனாலே அமுதா தப்பிச்சுது. இல்லேன்னா அமுதா கதி அதோகதி ஆயிருக்கும்…” என மூச்சிரைக்கப் பேசினார் பாட்டி.
“அம்மா! அதான் அமுதாவுக்கு ஒண்ணும் ஆகலையே. காட்டுவாசி சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்டாரே…” என்றார் அப்பா ஆனந்தன்.
“காட்டுவாசி மட்டும் குழந்தைகளைப் பாதுகாக்குலேன்னா… சே… நினைச்சாலே பயமா இருக்கு” என்றார் அம்மா.
“டார்ஜான், சூப்பர்மேன், ஸ்பைடர்மேனுன்னு நான் கதையில, சினிமாவுலேதான் பார்த்திருக்கேன்; படிச்சிருக்கேன். ஆனா!… காட்டுவாசி மாதிரி ஒருத்தரை இப்பத்தான் பார்த்தேன்.” என்றாள் அமுதா.
“ஆனந்து… இந்தக் காட்டுவாசி யாரு? எங்க இருக்கிறவரு? அவருக்கும் அந்தக் காட்டுக்கும் என்ன தொடர்பு? இதெல்லாம் ஒண்ணுமே புரியலே…” என்று ஆதங்கப்பட்டார் பாட்டி.
“இப்பதானே… மலையாண்டி, மாசி, குருஜி எல்லாம் சிக்கியிருக்காங்க. இனிமேதான் எல்லா உண்மையும் வெளியே வரும்” என்றார் ஆனந்தன்.
“அப்பா… மலையாண்டியும், மாசியும் சரியான உளறு வாயனுங்க. எப்பப் பார்த்தாலும் சம்மந்தா சம்மந்தமில்லாம பேசிக்கிட்டே இருப்பாங்க. எல்லாமே ஒரே கற்பனையாகவும், பொய்யாகவும்தான் இருக்கும்.
ஆனா, காட்டுவாசி ரொம்ப விவரமானவரு. அப்பா! அவருக்குத் தண்டனை குடுப்பாங்களா?” என ஏக்கத்தோடு கேட்டாள் அமுதா.
“எல்லாம் நாளைக்குத் தெரிஞ்சிடும்” என்றார் ஆனந்தன். உடனே பாட்டி…
“காட்டுவாசிக்குத் தண்டனை கொடுத்தாங் கன்னா நான் தெருவுல இறங்கி அவருக்காகப் போராடுவேன்“ என்றார். “நானும் கூட வர்றேன் பாட்டி!” என்றாள் அமுதா.
(தொடரும்)