பழகுமுகாம் கற்றுத்தரும் பாடம் என்ன?
ஆ |
ளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி! உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி!
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா” என்று தொடங்கும் இப்பாடல் 1961 ஆம் ஆண்டு அரசிளங்குமரி திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி, ஜி.ராமநாதன் இசையில், டி.எம். சவுந்தரராஜன் பாடி, பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பெருமைக்குரியது. இன்றைக்கும் இதை முணுமுணுக்கிறவர்கள் பல்லாயிரவர் உண்டு. இப்போதும் இந்தப் பாடலுக்கு உயிர் இருக்கின்றது என்பதற்கு, பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் குறித்த சிந்தனைகளைச் கிளறிவிட்டிருப்பதற்குச் சான்று.
நமது கல்வி என்பது ‘நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி’ போல இருக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் கற்பது முழுமையான கல்வி அல்ல. ‘பள்ளிக்கூடப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான ஓர் உரிமம்’ என்பார் பெரியார் தாத்தா. ஆம்! நாம் கற்கவேண்டியது பள்ளிக்கூடத்திற்கு வெளியில்தான் ஏராளமாக இருக்கின்றன.
குழந்தைகள் உடலால் மட்டுமல்ல, சிறந்த அறிவோடும் வளர்கின்றன! அது பெற்றோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், “எம் புள்ள என்னை விட்டு ஒருநாள் கூட இருந்தது இல்ல; அஞ்சு நாள் எப்படி இருப்பானோ தெரியலையே” என்று குழந்தைகளைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்து, கண் முன்னே பார்த்துக் கொண்டிருப்பதில்தான் பெற்றோர் மனம் மகிழ்ச்சியும், நிறைவும் கொள்கிறது. அதுவே சரியா? தவறா? பேசவேண்டும்! பெற்றோருக்குப் போதுமென்றால், அந்தக் குழந்தைக்கு?
போதாது என்பதைத்தான் குழந்தைகளுக்கான “பெரியார் பிஞ்சு” மாத இதழும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) இணைந்து நடத்திவருகின்ற, இந்த ஆண்டும் நடந்த, “பழகு முகாம் – 2025” உணர்த்துகின்றது.
ஆசைக்காகப் பெற்று ஆசைக்காவே வளர்ப்பதற்காகவா குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது? சரியாக வளர்த்து அவர்களுக்கு சமுதாயம் பயன்பெறும்படி பயிற்சியளித்து ஆளாக்க வேண்டும். அதற்கு அவர்கள், “நாளும் ஒவ்வொரு பாடம் கற்க வேண்டும். காலம் தரும் பயிற்சியைப் பெற்று பயனுற வேண்டும். அதற்கு அவர்கள், பெற்றோரின் பிடியிலிருந்து பாதுகாப்பான வேறொரு சூழலில் இருந்து பழக வேண்டும். அதைத்தான் பழகு முகாம் கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் இதனால் பலன் பெற்றிருக்கிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு துறைகளில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கும் கற்றறிந்த பெற்றோர்கள்கூட என்ன நினைக்கிறார்கள் என்றால்? “அய்யோ… எம் புள்ளைக்கு எதுவும் தெரியாதே; எட்டு வயதுக் குழந்தைக்கு பாத்ரூம் போனா கழுவக்கூடத் தெரியாதே; எப்படி அனுப்புவது?” என்பார்கள். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். மாறாக தன்னுடைய சிறகுக்குள்ளேயே வைத்துக்கொண்டால்…? அதையே பெருமையாகக் கருதினால்…? பிறகு எப்போது குழந்தைகள் கற்றுக்கொள்வது? காலம் கடந்து சமூகத்தைக் கற்றுக்கொண்டால் குழந்தைகளல்லவா பின்னடைவைச் சந்திப்பார்கள்?
‘பெரியாரை அன்றைக்குப் படித்ததற்கு பிறகு இன்றைக்குப் படிக்கும்போது புதிய புதிய கருத்துகள் மிளிர்கின்றன’ என்று ஆசிரியர் வீரமணி தாத்தா அடிக்கடி சொல்வதுண்டு. ‘ஆம், பிள்ளைகள் வளர்கின்றன! அறிவோடும், திறமையோடும் வளர்கின்றன! அறிவும் திறனும் சேர்ந்து சமூகத்தோடு கலந்து உறவாடினால்தான் ஏற்றத்தாழ்வுகள் அற்று, நட்பைப் பாராட்டும் அனுபவம் பெறுவார்கள். அந்த அனுபவம்தான் சமூகத்தை முதிர்ச்சியோடு எதிர்கொள்ளும் ஆற்றலை அவர்களுக்குக் கொடுக்கும்.
சரி, இது பெற்றோர்கள் பக்கம்! பெரியார் பிஞ்சுகளின் நிலை என்ன? அது மிகவும் சுவையானது!
முதல் நாளில் ஒரு பிஞ்சு, அவருடைய பெற்றோர் கொண்டு வந்து பழகு முகாமுக்குள் விட்டவுடன், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, “நான் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன். “உங்களுடனேயே வீட்டுக்கு வந்துவிடுகிறேன்” என்று அமர்க்களம் செய்துவிட்டான். பெற்றோர் கூட பயந்துவிட்டனர். அழைத்து வந்தாகிவிட்டதே; என்ன செய்வது என்று தடுமாறிவிட்டனர். ஆனால், பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது பழகிப் போன ஒன்றாதலால் அவர்கள், மிகவும் எளிதாக கண்ணசைவாலேயே பெற்றோரை அங்கிருந்து புறப்படச் சொல்லிவிடுவர். அழுது ஆர்ப்பாட்டம் செய்த அந்தப் பெரியார் பிஞ்சுதான், பழகு முகாமைக் கொண்டாடித் தீர்த்தவர்களில் முதன்மையானவர். அய்ந்து நாள்தானா? என்று, பழகு முகாமை அணுவணுவாக ரசித்தவர்.
இன்னொரு பெரியார் பிஞ்சு, வந்து இறக்கிவிட்ட நாளிலிருந்து பழகு முகாமோடு ஒன்றிவிட்டார். பெற்றோர் நினைவு அறவே இல்லை. ஆனால், பெற்றோர்தான் கலங்கித் தவித்து விட்டனர். அடிக்கடி ஒருங்கிணைப் பாளர்களுடன் தொடர்பு கொண்டு, பேசியே தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஈவு இரக்கமின்றி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டு, பழகு முகாமின் கட்டுப்பாடுகளுக்கேற்ப இரவு உணவு முடிந்ததும் தொடர்பு கொண்டு பேசச் செய்தனர். அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி, முதலில் அப்பா, “சாப்பிட்டியா?” என்று தொடர்ந்திருக்கிறார். அடுத்து அம்மா அதே பல்லவி, அதற்கடுத்து பாட்டி அதே அனுபல்லவி. இத்தனைக்கும் அந்தப் பிஞ்சு அசட்டையாக ஒற்றை வரியில் பதில் கூறி பெற்றோரையும், சுற்றி நின்றிருந்தோரையும் தெறிக்கவிட்டுவிட்டான். அப்பெற்றோர் நம்மிடம், “என்னங்க இப்படி பேசுறாரு” என்று அங்கலாய்த்துக் கொண்டனர்.
முதலில் குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என்று எண்ணுவதே தவறு. நமது குழந்தைப் பருவத்தில் நமக்குக் கிடைத்த அறிவும், இப்போது இருக்கும் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கும் அறிவும் ஒன்றா? நாம் நமக்குக் கிடைத்த அறிவை எண்ணி, இன்றைய குழந்தைகளையும் எடை போடலாமா?
ஒரு பெரியார் பிஞ்சு, முதல் நாளிலிருந்தே பழகு முகாமுடன் ஒன்றிப்போய்விட்டது. மூன்று நாளுமே இரவில்தான் தனது பெற்றோருடன் இன்முகத்துடன் பேசினார். பெற்றவர்களுக்கோ வியப்பென்றால் அப்படியொரு வியப்பு! அவர்களால் நம்பவே முடியவில்லை. அதே பெரியார் பிஞ்சு நான்காம் நாள், வீடியோ காலில் பேசினார். வீடு, தாய், தந்தை ஆகியோரை நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் அழத் தொடங்கிவிட்டான். அடுத்த நாளே தலைகீழாக மாறிவிட்டான். இப்படி, என் புள்ளைக்கு என்ன தெரியும்? என்று பெற்றோர் பிள்ளைகளுக்குப் போடுகிற தடையும், அப்பா அம்மா இல்லாமல் நான் எப்படி இருப்பேன் என்று குழந்தைகள் தங்களுக்குத்தாங்களே போட்டுக் கொள்கிற தடைகளையும் சுக்கல் சுக்கலாக உடைக்கிற சமத்துவச் சம்மட்டிதான் இந்தப் பழகுமுகாம்!
இந்த ஆண்டு கொஞ்சம் அதிகமாகிவிட்டது. குழந்தைகள்தான் பழகு முகாமின் ஒருங்கிணைப்பாளர்களிடமும், புத்தம் புதிய நண்பர்களிடமும் நெருங்கிப் பழகிவிட்டு, பிரியும் போது கண்களைக் குளமாக்கிக்கொண்டு, “அடுத்த ஆண்டும் நான் வருவேன். நீயும் வரவேண்டும்” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு விடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணைக் கசக்கிக் கொண்டார்கள். இதுவே பழகு முகாமின் மிகப்பெரிய வெற்றிதான். அப்பா, அம்மா மட்டுமல்ல; நம்மை நேசிக்கிறவர்களையும் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதுதான் ஜாதி, மத, பாலியல் பேதமற்ற சமூகத்தைப் படைப்பதற்கான அடிக்கட்டுமானமாக இருக்கும்.
அப்போதுதான் ‘யாரும் ஊரே; யாவரும் கேளிர்’ என்கிற பெருமிதத்தையும் அந்தப் பின்னணியில் நம்மை வளர்த்த இந்தச் சமூகத்திற்கு அதையே திருப்பித் தரவும் முடியும். அதைத்தான் பழகு முகாம் செய்து கொண்டிருக்கிறது. இனியும் செய்யும்!<