டிங் டாங் பாட்டி
| ட |
ிங் டாங் பாட்டியைப் பற்றிக் கேட்டதில் இருந்தே அவர் நினைவாகவே இருந்தது. கவனகனின் அத்தை மகள் தித்தித்தா பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வருகின்றாள். இரவு உறங்கும்போது டிங் டாங் பாட்டியைப் பற்றிக் கவனகன் குறிப்பிட்டான். “என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போகணும்” என உறுதி வாங்கிய பின்னரே உறங்கச் சென்றாள். கவனகன் வசிக்கும் அதே தெருவில்தான் டிங் டாங் பாட்டி வசிக்கின்றார். பாட்டியின் வீட்டைச் சுற்றி உயரமான சுற்றுச் சுவர் உள்ளது. பாட்டி தனியாகத்தான் வசிக்கின்றார். எத்தனை ஆண்டுகளாகத் தனியாக வசிக்கின்றார் எனச் சிறுவர்கள் யாருக்கும் தெரியவில்லை. குழந்தைகள், பெயரப் பிள்ளைகள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. கவனகனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர் தனியாக வசிக்கின்றார். உறவினர்கள், நண்பர்கள் என யாரும் அவரைப் பார்க்கச் செல்வதில்லை.
டிங் டாங் பாட்டி பெயர்க் காரணமே ரொம்ப விநோதமாக இருந்தது. அதுதான் தித்தித்தாவை மிகவும் கவர்ந்தது. டிங் டாங் என்றதுமே ஏதோ அழைப்பு மணி விஷயம் என யூகித்தது சரிதான். பல ஆண்டுகளுக்கு முன்னர், பாட்டியின் வீட்டில் அழைப்பு மணி இருந்தது. எப்போதும் சிறுவர்கள் அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடிவிடுவார்கள். பாட்டி மெதுவாக வந்து பார்த்துவிட்டுச் செல்வார். யாரும் இல்லை என்பதை அறிந்தாலும் கோபப்பட மாட்டார். சலித்துக் கொள்ளும் பழக்கம் இல்லை. ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் திரும்ப உள்ளே சென்றுவிடுவார். அவர் வீட்டுக் கதவு திறந்துதான் இருக்கும். திரும்பவும் வந்து அழைப்பு மணியை அடிப்பார்கள். திரும்பவும் வருவார். அதே புன்னகை. எத்தனை முறையானாலும் இப்படியே நடந்துகொள்வார்.
ஒரு நாள் மழை பெய்த போது அந்த அழைப்பு மணி பழுதடைந்துவிட்டது. குழந்தைகள் ஏமாறுவார்கள் என்று உடனே சரி செய்தார். ஆனாலும் மூன்று முறை தொடர்ச்சியாக வேலை செய்யாமல் போனது. அப்படியே விட்டுவிட்டார். ஆனால் பசங்க விடவில்லை. முன் வாசலைத் திறந்து, வீட்டுக் கதவருகே சென்று “டிங் டாங்” எனக் கத்திவிட்டு ஓடுவார்கள். ஆனாலும் பாட்டி வெளியே வந்து புன்னகைப்பது தொடர்கின்றது. பால்காரர், தபால்காரர், மின் ஊழியர்கள், கணக்கெடுப்பவர்கள் என யார் வாசலுக்கு வந்தாலும் “டிங் டாங்” என்று கூறுவார்கள். சன்னமான குரலில் அழைத்தாலும் பாட்டி வருவார்.
பாட்டியைப் பார்க்க தித்தித்தா, கவனகனை எவ்வளவு அழைத்தாலும் வரவில்லை. “வார்த்தை தவறிவிட்டாய் கவனகா” எனக் கிண்டலடித்தாள். தித்தித்தா தனியாகவே பாட்டியின் வீட்டுக்குச் சென்றாள். கதவு திறந்தே இருந்தது. பல ஆண்டுகளாக, யாருமே அந்தக் கதவினைத் தாண்டிச் சென்றதில்லை. தித்தித்தாதான் முதன் முதலாகச் செல்கின்றாள். உள்ளே சென்றதும் பெரிய வரவேற்பறையில் சுமார் இருபது பூனைகள் இருந்தன. எல்லாம் அமைதியாக சோபாவில் அமர்ந்து இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு திசையிலும் மிகவும் சொகுசாகவும் படுத்து இருந்தன. “பாட்டி..” என்று அழைத்தாள். இரண்டு கோப்பைகளில் பால் எடுத்துக்கொண்டு சமையலறையில் இருந்து பாட்டி வந்தார். சேலையில் இல்லை, சுடிதாரில் இருந்தார்.
‘வா, வந்து இந்தக் கோப்பையைப் பிடி’ என்றவாறு சைகை காட்டினார். பூனைகள் மெல்ல வந்து பாலினைப் பருக ஆரம்பித்தன.
“நீ என்ன சாப்பிடுற கண்ணு?” என்றார். தித்தித்தாவை யார், எதற்கு வந்திருக்கின்றாள் என்றுகூடக் கேட்கவில்லை.
ஆனால், தித்தித்தா தன் பெயரைக் கூறியபின், “உங்களைப் பார்க்க வந்தேன்” என்றாள்.
பாட்டியின் முகத்தில் அவ்வளவு புன்னகை!
“தோட்டம் பார்க்க வர்றியா?” எனக் கேட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல் பின் வாசலுக்கு அழைத்துச் சென்றார் பாட்டி.
அம்மாடி! அம்மாடி! அம்மாடி!
வாயடைத்து நின்றாள் தித்தித்தா. அவ்வளவு செடிகளும் பூக்களும் நிறைந்து இருந்தன. எல்லா வண்ணங்களிலும் இருந்தன. எல்லா வகைப் பூக்களும் இருந்தன. பூக்களையும் செடிகளையும் வருடியபடி நடந்தாள் தித்தித்தா. ஒவ்வொரு செடியின் பெயரையும் கூறினார் பாட்டி. சுற்றுச்சுவரை ஒட்டியபடி உயரமான மரங்கள் இருந்தன.
“பாட்டி, உள்ளே இவ்வளவு செடிகள் இருக்கின்றன என்று வெளியே யாருக்குமே தெரியாது”
“ஆமாம். எனக்கு மட்டும்தான் தெரியும்”
“ஏன்? ஏன் நீங்க வெளியவே வர்றதில்லை? ஏன் யாருமே வீட்டுக்குள்ள வர்றதில்லை?”
கொஞ்சம் யோசித்து “நான் வரவேண்டாம்னு சொல்லவே இல்லையே” என்றார்.
கசாயம் ஒன்றினைப் போட்டுக் கொடுத்தார்.
வீட்டுக்குச் சென்று கதை கதையாகப் பாட்டி வீட்டில் நடந்ததைச் சொன்னாள். பாட்டி வீட்டின் பின்புறம் அவ்வளவு பூஞ்செடிகள் இருக்கா என ஆச்சரியப்பட்டார்கள். மறுநாளும் தித்தித்தா மட்டும் தனியாகச் சென்றாள். பூனைகளுக்குப் பால் வைக்கவும் சில செடிகளுக்குத் தண்ணீர் விடவும் உதவினாள். பாட்டி இவ்வளவு அன்பாக இருக்கின்றார். ஆனால், ஏன் தெருவாசிகளுக்கு எதுவுமே தெரியவில்லை. சின்னதாக ஒரு தடை இருக்கின்றது என உணர்ந்தாள்.
“பூனைகள் இருக்கு வாங்க” என்று தெருச் சிறுவர்களிடம் கூறி அழைத்தாள். யாருமே வரவில்லை. வண்ண வண்ணப்பூக்கள் பூத்து இருக்கு என்றாள். யாருமே வரவில்லை.
இப்படியாகச் சில நாள்கள் கடந்து போயின.
இன்னும் ஒரே நாள்தான். மீண்டும் ஊருக்குக் கிளம்பவேண்டும். அந்த இரவு ஒரு காரியத்தைச் செய்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
மறுநாள் ஓர் அதிசயம் நடந்தது. அந்தத் தெரு மட்டுமல்லாமல் அந்த ஊரின் எல்லா வீடுகளின் வாசலிலும் ஒரு பூந்தொட்டி. “டிங் டாங் பாட்டியின் பரிசு” என்றும் எழுதி இருந்தது. பாட்டியின் வீட்டில் இருந்த முக்கால்வாசிச் செடிகளைப் பூந்தொட்டியில் போட்டு ஒவ்வொரு வீடாக வைத்துவிட்டாள்.
ஊரே வியப்பில் ஆழ்ந்தது. பூந்தொட்டியில் இருந்து செடியை வீட்டில் எடுத்து வைத்துவிட்டு தொட்டியைப் பாட்டியின் வீட்டில் வைத்தனர். ஒவ்வொருவராகப் பாட்டி வீட்டில் வைத்துவிட்டு “டிங் டாங்” என்று கத்தினார்கள். பாட்டி வெளியே வருவதற்குள் பத்துப் பதினைந்து தொட்டிகள் சேர்ந்துவிட்டன. அப்போது வந்த சிறுவர்கள் ஆளுக்கு ஒரு தொட்டியைக் கையில் வைத்திருந்தனர். அதில் ஒருவன் “எடுங்க உள்ளே வெச்சிடலாம்” என்று சொல்ல, தொட்டிகள் அனைத்தையும் எடுத்து தோட்டத்தில் வைக்கச் சென்றனர். முதல் முறையாக அவர்கள் பாட்டியின் தோட்டத்தைப் பார்க்கின்றனர். தித்தித்தாவைப் போல வியந்தனர்.
“இவ்வளவு வச்சுக்கிட்டு காட்டவே இல்லை” என்றனர்.
தித்தித்தா இதே வார்த்தைகளை அன்பினைக் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தாள். பாட்டிக்கு நினைவுக்கு வந்தது. “இவ்வளவு பாசமா இருக்கீங்களே பாட்டி, காட்டவே இல்லையே நீங்க; காட்டினாத்தானே தெரியும். அது இன்னும் இன்னும் மகிழ்ச்சியா இருக்குமில்லையா?”
அன்றைய நாள் முதல் பாட்டியின் வீட்டில் சிறுவர்கள் குழுமினார்கள். பூச்செடிகளுக்குத் தண்ணீர் விடுவார்கள். பூனைகளைப் பராமரிப்பார்கள். ஆளுக்கு ஒருவேளை உணவு கொடுத்து அனுப்புவார்கள். வீடு வழக்கம் போலத் திறந்தே இருந்தது. எல்லோரும் வந்து போகும் கூடாரமாக மாறி இருந்தது.
பாட்டி எல்லாக் குழந்தைகளையும் “தித்தித்தா” என்றே அழைத்தார். இப்போதெல்லாம் வாசலில் “டிங் டாங்” எனக் கத்திவிட்டு உள்ளே செல்வார்கள். பூந்தொட்டியில் செடிகளை எடுத்துச் செல்வார்கள். டிங் டாங் பாட்டியின் தோட்டம் மட்டுமல்ல; ஊரே மலர் வனமாக மாறத் தொடங்கியது.<
