கூழைக்காட
இ |
யற்கையின் சிறப்புப் பரிசான பறவைகளை நாம் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாகக் கூறுகிறோம். உலகில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படுபவை பறவை இனங்கள்தான். கண்கவர் வண்ணங்களைக் கொண்ட பறவைகளைக் காணும் நம் விழிகளில் ஆனந்தம் ஏற்படுவதோடு, இமை சிறிதும் அசையாது. இனிமையை வார்க்கின்றன. பறவைகள் மாறும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, பாலைவனங்களைக் கூட சோலை வனங்களாக மலரச் செய்யும் வல்லமை பெற்றவை. பறவைகளின் பயணங்கள்கூட இலக்குகளைக் கொண்டதுதான். அது இந்தப் பூமிப் பந்தை முழுவதும் பசுமையாக மாற்றிவிட வேண்டும் என்கிற தீராத வேட்கையுடன் பயணங்கள் செய்கின்றன. மேலும் மாந்தோப்பு மரங்களும், நந்தவனச் செடிகளும், கொல்லைப்புறக் கொடிகளும், இவற்றோடு பூவும், காயோடு கனிகளும் தலையாட்டி, பறவைகளை வரவேற்கின்றன. அதுபோல சில பறவையினங்கள் மரங்களின் மருத்துவராகவே செயலாற்றுகின்றன. மேலும் அனைத்துண்ணியாகக் கருதப்படும் காகம், கழுகு போன்ற பறவைகள் இறந்த உயிரினங்களின் ஊன்களை உண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்து நோய்ப்பரவலைத் தடுக்கின்றன. இவ்வாறு பறவைகள் மனிதர்களுக்கும், மரம், செடி, கொடிகளுக்கும் பயனுள்ளதாகவும், பாதுகாவ லாகவும் உள்ளன.
இயற்கை வளங்கள் என்பவை பூமியில் மனிதத் தலையீடு இல்லாமல் தோன்றி, இன்று மனித இனத் தேவைகளைப் நிறைவு செய்யும் வளங்களாகும். இயற்கை வளங்களைப் பொறுத்தே நமது வாழ்வாதாரம் உள்ளது. மேலும் எதிர்காலச் சந்ததியினருக்கும் இயற்கை வளங்களைப் பாதுகாத்துக் கொடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதிக அளவு மரங்களை நடுதல், காடுகளைப் பாதுகாத்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல், நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்காமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாக பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக இயற்கை வளங்களைப் பாதுகாக்கலாம். மேலும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்களிப்பு மகத்தானது; முதன்மையானது.
இவ்வாறு மனித இன மேம்பாட்டிற்குப் பேருதவியாகச் செயல்படும் பறவையினங்கள் இந்தக் கோடை வெயிலில் நீரும், உணவும் இல்லாமல் பாதிக்கப்படுகின்றன. ஆதலால் இந்தக் கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு உணவும், நீரும் கொடையளியுங்கள் என்று பொதுமக்களுக்கு நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதற்கொண்டே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்து கடந்த இருவாரங்களாக பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. நகர்ப்புறங்களில் கோடை வெப்பம் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் பறவைகள் அருந்த நீர் மற்றும் இரை கிடைக்காமல் அவதியுறுகின்றன. இதனால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, நாம் ஒவ்வொருவரும் நமது இல்லங்களில் பறவைகளுக்கு உணவும், நீரும் கொடுத்து முதல்வரின் வழிநின்று பறவைகளைப் பாதுகாப்போம்.
“ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலின் பின்
திருக்குறள்- 225
அதாவது பசியைப் பொறுப்பது பேராற்றல்; அதனினும் பேராற்றல் பிறர் பசியைப் போக்குவது இத்திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து பறவைகளின் பசியைப் போக்கி பறவைகளின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவோம்.
உலகில் உள்ள பல கோடிக்கணக்கான பறவையினங்களில் இவ்விதழில் நாம் காணவிருக்கும் பறவை கூழைக்கடா. இப்பறவையை ஆங்கிலத்தில் பெலிகன்(Pelican) என்றும், வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர். கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரியது. இப்பறவை இனம் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இனமாகும். இப்பறவையின் கால் மற்றும் வால் குட்டையாக இருப்பதனால் கூழை என்றும், இது எழுப்பும் ஒலி கடாமாடு ஒலி போல் இருப்பதால் இப்பறவைக்குக் கூழைக்கடா என்றும் பெயர் வந்ததாக ஒரு சாரரும், இதன் தசை கெட்டியாக இல்லாமல் மென்மையாகக் கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதற்குக் கூழைக்கடா என்று பெயர் வந்ததாகப் பிறரும் கூறுகின்றனர்.
பழுப்பு கூழைக்கடா- Pelecanus Occidentails
பெருநாட்டு கூழைக்கடா- Pelecanus Thagus
அமெரிக்க வெள்ளை கூழைக்கடா – Pelecanus Erythrorhynchos
வெள்ளைக் கூழைக்கடா – Pelecanus Onocrotalus
டால்மேசியக் கூழைக்கடா – Pelecanus cripus
செம்முதுகுக் கூழைக்கடா- Pelecanus Rufescens
சாம்பல் கூழைக்கடா – Pelecanus Philippensis
ஆஸ்திரேலிய கூழைக்கடா – Pelecanus conspicillatus
என பல சிற்றினங்கள் இப்பறவையினத்தில் உள்ளன. இவற்றில் சாம்பல் கூழைக்கடா மட்டும் மற்ற பறவைகளைவிட அளவில் சிறியது. கூழைக்கடாவின் எடை சுமார் 4.5 கிலோவிலிருந்து சுமார் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகள் விரிந்த நிலையில் இப்பறவையின் இறக்கை நீளம் சுமார் 2.7 மீட்டரும், உயரம் 127 செ.மீட்டரிலிருந்து 182 செ.மீட்டர் வரையும் கொண்டது. அலகின் நீளம் 22 செ.மீட்டர். பெரிய உடலும் சிறிய கால்களும் கொண்ட இப்பறவையின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை மேல் அலகின் நுனியில் கீழ் நோக்கி வளைந்தும், முன்பக்கம் கரண்டி போல் அகன்றும் காணப்படுவதுதான். தட்டையான மேல் அலகு கீழ் அலகை மூடி போல் மூடியிருக்கும். இந்தத் தொங்கும் பை, பிறந்த குழந்தையின் அடிப்பாதம் போல் இளஞ்சிவப்பு நிறத்திலும் சில பறவைகளுக்கு அனிச்சம் மலர் போன்ற ஊதா நிறத்திலும் இருக்கும். இதன் முக்கிய உணவு மீன்களாகும். தனியாக அல்லது கூட்டமாகக் குளங்களில் இரை தேடும். நீருக்கடியில் சுமார் ஓரடி ஆழத்தில் நீந்திச் செல்கின்ற மீன்களைக் கூட கூர்மையான கண்களால் பார்க்கும் திறன் பெற்றது. மீன்களைக் கண்டதும் அலகை நீருக்குள் நுழைத்து பை போன்ற அலகில் மீனை முகர்ந்து பிடிக்கும். இதனுடைய நாக்கு சிறியதாக இருப்பதால் பெரிய மீன்களை விழுங்கும்போது எந்தவித தங்குதடையுமின்றி வயிற்றுக்குள் செல்கிறது. நான்கு விரல்களால் ஆன கால்கள் உள்ளன, இவையனைத்தும் மெல்லிய சவ்வினால் இணைக்கபட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்திச் செல்லும். இப்பறவை தண்ணீரிலிருந்து விண்ணில் தாவிப் பறக்கத் தொடங்கும்போது நீரில் தேவைக்கேற்ற தூரம் ஓடி விண் நோக்கி சாய்தளப் பாதையில் ஏறுகிறது. விண்ணில் தன்னைச் சமநிலைப்படுத்தியதும் எந்தவிதத் தடுமாற்றமுமின்றி சீரான சிறகடிப்பில் தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்துப் பறக்கும். நீர் நிலைகளை அடையும்போது நேர்கோட்டில் பறந்து வரும். நீரில் இறங்கும்போது வட்டமிட்டு அல்லது சாய்தளமாக இறங்கி சிறிது தூரம் ஓடி, சறுக்கியவாறு இறங்கும். உடலிறகுகள் வெண்பஞ்சு மேகம் போல் வெள்ளையாகவும், சிறகுகளிலுள்ள நீண்ட சிறகுகளும், வாலும் கண் மை போன்ற கருப்பு நிறத்திலும் காணப்படும். சதுர வடிவம் தலையின் மேல் சிகரம் போல் முடிச்சாகக் காணப்படும். இதன் அதிக எடை, பரந்த உடல் அமைப்பு, பறக்கும் வேகம் இவை விண்ணில் விபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது. இப்பறவை வலசை செல்ல நீண்ட தூரம் பறக்கும்போது முதலில் செல்லும் பறவை அதிக திறனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் களைப்பைப் போக்க, பின்னால் பறக்கும் பறவை முதலில் வந்து தங்கள் இடங்களை மாற்றி, மாற்றி இலக்கை நோக்கிப் பறந்து செல்கின்றன.
இப்பூவுலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் அழியாமல் நிலைத்திருக்க இனப்பெருக்கம் அவசியமாகிறது. அந்த வகையில் பருவமடைந்த கூழைக்கடாக்கள் தனக்குப் பிடித்த இணையைத் தேர்ந்தெடுத்து அதனோடு இணைசேர்ந்து இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை இட்டு, அதை ஆண், பெண் இரு பறவைகளும் மாறி, மாறி 21 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளிவந்த ஒரு வாரத்திற்குப் பிறகு கூழைக்கடாவின் கேள்விக்குறி போன்ற நீண்ட உணவுக் குழலில் இருக்கும் அரைக்கப்பட்ட, அதே நேரத்தில் முழுமையாகச் செரிக்கப்படாத உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும். குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைய ஓராண்டாகும். குஞ்சுகளைத் தூக்க வரும் பறவைகளை வெறியுடன் தாக்கும்.
கூழைக்கடாக்கள் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. வளர்ந்த நிலையில் வெண்ணிறமாக இருக்கும் பறவைகள் தரையில் கூடுகட்டி வாழ்கின்றன. இவ்வகையில், ஆஸ்திரேலிய, டால்மேசிய மற்றும் வெள்ளைக் கூழைக்கடாக்களைக் கூறலாம். மற்றொரு வகை வளர்ந்த நிலையில் பழுப்பு நிறமாக இருக்கும். இவை மரங்களில் கூடுகளைக் கட்டுகின்றன. அவை பழுப்புக் கூழைக்கடா, புள்ளிவாய்க் கூழைக்கடா போன்றவையாகும். இவை அல்லாமல் பெருநாட்டுக் கூழைக்கடாக்கள் கடற்புரங்களில் உள்ள பாறைகளில் கூடுகளைக் கட்டுகின்றன. பெரும்பாலும் பத்தே நாட்களில் அழகான கூட்டைக் கட்டி முடிக்கின்றன. இப்பறவையின் ஆயுட்காலம் சுமார் 15லிருந்து 25 ஆண்டுகள்.
மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டுமே உயிர்வாழ்வதில்லை, பறவைகள் அவனை நேசிப்பதாலும்தான். நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் உயர்ந்த சிகரங்களைக் கூட நம்மால் எளிதில் வெற்றிகொள்ள முடிகிறது. ஆனால், நம்மைச் சுற்றி வாழும் பறவைகளைப் பாதுகாக்கத் தவறிவிடுகிறோம். அதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகிறது. பறவைகளிடமிருந்து என்ன கிடைக்கும் என்பதைவிட, பறவைகளுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சிலவகையான பறவைகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அவற்றைக் காப்பாற்றிக் பாதுகாத்திட வேண்டும். நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய வழியைப் பின்பற்றி கோடைக்காலம் மட்டுமல்லாமல் மற்ற பருவ காலங்களிலும் நம்மால் இயன்ற உணவும் நீரும், இருப்பிடமும் கொடுத்துப் பறவைகளைக் காப்பாற்றுவோம்.
மனிதன் நட்ட மரங்கள் குறைவு!
பறவைகள் இட்ட விதைகள் அதிகம்!
நினைவில் வைப்போம்!<