கல்விப் பாதை வழிநடப்போம் !
கல்வி என்னும் பெருநிதியைக்
காலம் முழுதும் தமிழரெலாம்
நல்ல விதமாய்ப் பெறுவதற்காய்
நாட்டில் எங்கும் பள்ளியெனும்
கல்விச் சாலை வைத்திட்ட
காம ராசப் பெருமகனார்
கல்விக் கண்ணைத் திறந்ததனால்
கர்ம வீரர் என்றானார்!
வயிற்றுப் பசியால் வாடியிங்கே
வருந்தும் ஏழை கல்விபெற
பயிருக்(கு) உரத்தை இடுதல்போல்
பகலில் உணவும் ஈந்தாரே:
குயில்போல் மயில்போல் குழந்தையெலாம்
கூடிப் பாடிக் கற்பதனை
உயிரின் மேலாய்க் கண்டுவந்த
உயர்ந்த தலைவர் அவரன்றோ?
வருங்கா லத்துத் தமிழ்நாட்டை
வளமா யாக்க வேண்டுமெனின்
பெருங்காப் பிங்கே கல்வியெனப்
பெரிதும் உணர்ந்த பெருமகனார்;
இருளும் இங்கே மறைந்ததின்று;
இலவ சமாகக் கல்வியுண்டு;
* கருமை காந்தி காட்டிட்ட
கல்விப் பாதை வழிநடப்போம்!
– கே.பி.பத்மநாபன்