தவிட்டுக் குருவி தாவிக் கொண்டே இருப்பதேன் ?
ஒ |
ரு ஊருல ஒரு தாத்தா இருந்தாராம். அவரு வடை சுட்டா, ஊரே மணக்குமாம். அதனால, ஒரு கடை போட்டு வடை சுட்டு வித்துட்டு இருந்தாராம். (அதே காக்கா, வடை கதை தான்.) அப்போ, ஒரு காக்கா வந்து ஒரு வடையைத் தூக்கிட்டுப் போயிடுச்சாம். ஆனால், அந்த வடையைக் காக்கா திருடிட்டுப் போகல! தினமும் காக்காவுக்கு ஒரு வடை, நாய்களுக்கு நாலு வடை எடுத்து வச்சிடுவாரு நம்ம தாத்தா.
பறந்து போன காக்கா சாப்பிடும் போது, கொஞ்சமா வடை கீழ விழுந்துடுச்சு. அதை, அங்க இருந்த தவிட்டுக் குருவிக் கூட்டம் கூச்சலிட்டுக்கிட்டே சாப்பிட்டுச்சுங்க. இதை எல்லாம், ஓரமா உட்கார்ந்து பார்த்துக்கிட்டு இருந்த பேத்திக்கு, ஒரு கேள்வி வந்துச்சு. “காக்கா இரண்டு கால்களைக் கொண்டு நடக்குது, தாவுது, ஆனால், தவிட்டுக் குருவி மட்டும் ஏன் தவ்வித் தவ்விப் போகுது?”
ஆமாம், ஏன்?
பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை. ஆனால், அதை வச்சி, உடல் என்ன செய்யும்? நாம (நாமும் விலங்குகள் தானே!) உண்ணும் உணவில் இருந்து வரும் குளுக்கோசுடன் மூச்சுக் காற்றில் இருக்கும் ஆக்சிஜன் சேரும் போது, அது எரிசக்தியாக மாறும். ஒவ்வொரு நாளும், பெரிய அளவில் இந்த எரிசக்தி உற்பத்தி செய்யப்படுது. இந்த எரிசக்தியைப் பயன்படுத்தித்தான், நாம எல்லா வேலைகளும் செய்யுறோம். புரியும்படி சொல்லணும்னா, பெட்ரோல் போட்டாத்தானே வண்டி ஓடும். அந்தப் பெட்ரோல் போலத்தான் நம்ம உடலுக்கு எரிசக்தி!
உறங்கும் போதும் ஏன், சும்மா உட்கார்ந்து இருக்கும் போதும் கூட எரிசக்தியை நம்ம உடல் பயன்படுத்துது. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அளவுல எரிசக்தியை நம்ம உடல் பயன்படுத்துது. இதே போலத்தான் பறவைகளுக்கும் நடக்குது.
குருவியின் கால்களின் நீளம், அவற்றின் இரை தேடும் பழக்கத்தைப் பொறுத்துப் பறவை நடக்குதா அல்லது தாவுதா என்பது மாறும். கால்களின் நீளம் குறைவாக இருந்தா, நடக்கும் போது அது கடக்கிற தூரத்தை விட தாவும் போது கடக்கிற தூரம் அதிகமாக இருக்கும்.
ஒரு பறவை பறப்பதற்குத் தேவையான எரிபொருளை விட, நடப்பதற்கோ தாவுவதற்கோ தேவையான எரிபொருள் குறைவு. அதனால தான், பறவைகள் தரையில் இரை தேடும் போது நடக்கவோ தாவவோ செய்யுது. சில பறவைகள் இரண்டும் செய்யும்.
தவிட்டுக் குருவியின் (Yellow-billed babbler) கால்களின் நீளம் மிகவும் குறைவு. அதோடு, அதன் எடையும் குறைவாக இருக்கும்; அப்போ, நடப்பதை விட, தாவும்போது, தவிட்டுக் குருவி பயன்படுத்தும் எரிசக்தி மிகக் குறைவா இருக்குது. அதனால தான், தவிட்டுக் குருவி தாவுது.
சில பறவைகள் தாவிக்கிட்டே இருக்கும், ஆனால், திடீரென நடக்க ஆரம்பித்து விடும். பறவைகளும் நம்மைப் போலத் தான். பொறுமையா மகிழ்ச்சியா தாவிக்கிட்டே இருக்கும். ஆனால், ஒரு ஆபத்து வந்தவுடன் வேகம் எடுக்க வேண்டும் என்பதால், நடக்க ஆரம்பித்து விடும். சேர்த்து வச்ச எரிசக்தி எல்லாம் உயிரைக் காப்பாத்திக்கத்தானே! அதுக்கே ஆபத்து வந்தா… விடு ஜூட்!
ஆமா, அத்திபூத்தாற் போல எனும் பழமொழியைக் கேள்விப் பட்டு இருக்கீங்களா? அத்திப் பழம் இருக்கும்போது அத்திப் பூ இருக்காதா? அப்போ, இந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம்? யோசிங்க… அடுத்த மாதம் பார்க்கலாம். (யாராவது பதில் எழுதினீங்கன்னா, அதுக்குப் பரிசு உண்டாம் – சொல்லிக்கிட்டாங்க!)<