டிக் டிக் டிக் அடிக்குமா ?
ச |
ரியாக நடு இரவு மணி 12. டிக் டிக் டிக் சத்தம் நின்றது. நொடி முள் நின்றது.
“என்னப்பா கிளம்பலாமா?” என்றது நிமிட முள்.
“என் பேச்சைக் கேட்கவா போறீங்க?” என்றது மணி காட்டும் முள்.
அந்தக் கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து இருந்தது. காலையில் பந்துபட்டு உடைந்தது. கடிகாரத்திற்குள் மொத்தம் 16 நபர்கள். எண் 1இல் இருந்து 12 வரையில் 12 நபர்கள் மற்றும் மூன்று முட்கள். 16ஆம் நபர் கடிகாரத்தின் இதயம். அதனை யாராலும் பார்க்க முடியாது. ஏனெனில், அது பின்னாடி இருக்கும். கடிகாரத்தின் இதயம் மட்டும் “போகாதீங்க… போகாதீங்க… டிக் டிக் டிக் அடிக்காது” என எச்சரித்தது.
12 எண்களும் ஓட்டை வழியே எளிதாக வந்துவிட்டன. நொடி முள் நீளமாக இருந்தது. அதற்கு மட்டும் வெளியே வருவது சிரமமாக இருந்தது. பல ஆண்டுகளாக ஒரே கடிகாரத்தில் இருந்தாலும் இதுவரை எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டது இல்லை. முட்கள் மட்டும் எல்லோரிடமும் பேசும். சுற்றிக்கொண்டே இருக்கும் அல்லவா?
எண் 3 மற்றும் எண் 1 இடம் மட்டும் எண் 2 பேசி இருக்கும். அதே போலவே ஒவ்வொரு எண்ணும் அதிகபட்சமாக இரண்டு எண்களுடன் பேசி இருக்கும். பக்கத்தில் யார் இருக்கின்றார்களோ அவர்களிடம் மட்டும் தானே பேச முடியும்! எண் 4, எண் 9 இடம் வணக்கம் சொன்னது. எண் 6உம் எண் 9உம் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். இரண்டு இலக்க எண்களான 10, 11, 12 மட்டும் உருவத்தில் பெரிதாக இருந்தன. அவர்கள் என்ன எண்ணாக இருந்தார்களோ அதுவே அவர்களின் எடையாகவும் இருந்தது. எண் 5இன் எடை 5 கிராம். எண் 8இன் எடை 8 கிராம். எண் 1 மட்டும் குட்டியாக இருந்தது.
கடிகாரம் சுவரில் இருந்தது. கடிகாரத்தில் இருந்து பொத் பொத் என எல்லோரும் கீழே குதித்துவிட்டனர். முட்களும் பாய்ந்து கீழே விழுந்தன. சதக் சதக் சதக். கடிகாரத்தின் இதயம் மட்டும் “நான் இங்கேயே இருக்கேன், சீக்கிரம் வந்திடுங்க” என்றது. எவ்வளவு தூரம் சென்றாலும் இதயம் பேசுவது எண்களுக்குக் கேட்கும். “கவனமாப் போங்க. சீக்கிரம் வாங்க. தனியா இருக்கப் பயமா இருக்கும்” என எச்சரித்துக்கொண்டே இருந்தது.
“எங்கே போகலாம்?” என்ற விவாதம் கீழே விழுந்த பின்னர்தான் எழுந்தது.
வீட்டின் சமையலறை, குளிர்சாதனப்பெட்டி, வீட்டுச் சிறுவனின் உணவுப் பை, மெத்து மெத்து இருக்கை என வரிசையாக அவர்கள் பார்த்தவற்றை எண்கள் கூறின. ஆனால், நிமிட முள் சொன்னது இறுதி முடிவானது. இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவனின் கணிதப் புத்தகம். நல்லவேளையாக அது மேஜையின் மீது இருந்தது. எளிதாகப் புத்தகத்தினை அடைந்தனர். அதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.
அங்கே இருந்த எண்கள் எல்லாவற்றிற்கும் வாசிக்கத் தெரியும். முட்கள் மூன்றுக்கும் எழுதவும் வரும். கணிதப் புத்தகத்தினைத் திறக்கலாமா எனக் கேட்டது மணி முள்.
ஆனால், வேலை செய்தது என்னவோ நொடி முள்தான். ஒவ்வொரு பக்கமாகத் திருப்பியது. முதலில் “கூட்டுத்தொகை” இயலில் நிறுத்தியது. இரண்டு எண்களை எப்படிக் கூட்டுவது என்று அதில் விளக்கி இருந்தது.
எண் 7க்கு எப்படியோ எல்லாக் கணக்கும் எளிதாக இருந்தது.
12 + 1 + 5 = 18 என எளிதாகச் சொல்லிவிட்டது.
“சரி நேரம் பற்றி ஏதாவது இருக்கா பாருங்க” என்றது எண் 11.
நேரம் என்ற இயல் பக்கம் 50இல் இருந்தது. எண் 2 சத்தமாக முழு இயலையும் வாசித்தது.
“நம்மைப் பற்றிச் சரியாவே சொல்லி இருக்காங்க” என மகிழ்ந்தது எண் 4.
எண் 10க்கு ஒரே கோபம். “என்ன சில கடிகாரங்களில் எண்களே இல்லை? வெறும் 4 கோடு மட்டும் போட்டிருக்காங்க” என்றது. இன்னொரு பக்கத்தைப் பார்த்து “என்ன எனக்குப் பதிலா X என போட்டிருக்கு?” எனப் பதறியது. உடனே நிமிட முள் “அது ரோமன் எழுத்துமுறை. உன் சொந்தக்காரர்தான். அதுவும் 10 தான்” எனக் கிண்டலடித்து.
எல்லோரும் மகிழ்வாக இருந்தபோது கடிகார இதயத்திடம் இருந்து ஓர் எச்சரிக்கை வந்தது. “இன்னும் 30 நிமிடங்களில் கடிகாரத்திடம் 15பேரும் வந்திடுங்க. மணி 6க்கு அலாரம் அடிக்கும். அதன் பின்னர் நீங்க வரவில்லை என்றால் கடிகாரத்தை மாற்றிடுவாங்க. நான் நின்றுவிட்டால் நீங்களும் செயலிழந்து போவீர்கள். சீக்கிரம் வருக”. எல்லோர் காதிலும் ஒலித்தது.
ஆனால், அவர்கள் புத்தகத்தைத் தேடி வரவே 1 மணி நேரமானது. முட்கள் எளிதாகப் பறந்துவிடும். அவை 5 நிமிடங்களில் சென்றடைந்துவிடும். ஆனால், எண்கள் எல்லாம் நடந்துதான் வரவேண்டும். செங்குத்தான சுவரில் ஏறுவதற்கு இன்னும் நேரம் எடுக்கும். என்ன செய்ய என ஒரே குழப்பம்.
கணக்குப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ஒரு ஹெலிகாப்டர் இருந்தது. “நான் வேணும்னா உங்கள விட்டுட்டு வரவா?” என்று அது கேட்டது. அட ஹெலிகாப்டரே, நீ பேசுவியா? பறப்பியா?”
“க்கும், எண்கள் நீங்க எல்லாம் பேசும்போது நான் பேசக்கூடாதா? கடிகார முட்கள் பறக்கும்போது நான் பறக்கக்கூடாதா?” – துன்பமான சூழலிலும் எல்லோரும் சிரித்தனர்.
“ஆனா. ஒரே ஒரு நிபந்தனை”
“எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு. என்னவாம்?” என்றது எண் 6. தன்னுடைய சிக்கலைச் சொன்னது ஹெலிகாப்டர். எத்தனை முறை வேண்டுமானாலும் ஹெலிகாப்டர் புத்தகத்தில் இருந்து கடிகாரம் வரை பறக்கும், ஆனால், முதல் முறை எவ்வளவு எடை எடுத்துச்செல்கின்றதோ அதே அளவிற்குத்தான் அடுத்த அடுத்த பயணத்திலும் எடுத்துச்செல்ல முடியும். அதிபட்சம் இரண்டு எண்களை ஏற்றிச் செல்ல முடியும் என்றது.
சினம் கொண்ட நிமிட முள் “ஆமா, இது கதையா? கணிதப் புதிரா? ஒரு வரைமுறை வேணாம்” என்று வெகுண்டு எழுந்தது.
“இப்போது அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை, எல்லோரும் கடிகாரத்திற்குள் முதலில் செல்வோம். விழியனைப் பிறகு என்ன செய்வதோ செய்வோம்” என்று முடிவெடுத்தன. எண் 12 சொன்னது “நான் முதலில் சென்றுவிடுகின்றேன். அடுத்தது 11ம்,1ம் வரட்டும் அடுத்தது 10ம், 2ம். இப்படியே எல்லோரும் சென்றிடலாம்” என முன்மொழிந்தது.
கூட்டுத்தொகை 12. அதன்படி 12, 11+1, 10+2, 9+3…
திடீரென எண் ஆறு கதறியது “அடேய்ங்களா எல்லோரும் போய்விடுவீங்க, நான் மட்டும் மாட்டிப்பேன். திரும்பக் கணக்கு போடுங்க” என்றது. ஆமாம்
12
11+1
10+2
9+3
8+4
7+5
எண் 6 தனியாகத் தவிக்கும்.
திரும்பவும் எண் 7 தீர்வைச் சொன்னது. “ஒரு பயணத்தில் 13 கிராம் எடையை எடுத்துச் சென்றால் சரியாக இருக்கும். மொத்தம் 6 பயணத்தில் எல்லோரும் போய்விடலாம்
12 + 1
11 + 2
10 + 3
9 + 4
8 + 5
7 + 6
அவ்ளோதான்!”
மூன்று முட்களும் முதலில் பறந்து சென்றுவிட்டன. எண்களை இரண்டு இரண்டாக ஹெலிகாப்டர் கொண்டுவந்து விட்டது. கடைசியாக எண் 7ம் எண் 6ம் வந்தடைந்தன.
உடைந்த கண்ணாடிப் பகுதியில் உள்ளே புகுந்து அவரவர் இடங்களுக்குச் சென்று நின்றனர்.
நிமிட முள் 12அய் நோக்கி நின்றது. நொடி முள் 12அய் நோக்கி நின்றது. மணி காட்டும் முள் மட்டும் 6அய் நோக்கி நின்றது. எண் 6, எண் 9அய்ப் பார்த்துக் கண்ணடித்தது.
“டிக் டிக் டிக்”
மீண்டும் கடிகாரம் இயங்கத் துவங்கியது.
(கதை முடிந்தது)
எண் 9ம் எண் 6ம் ஏன் கண்ணடித்துக் கொண்டன?
எண் 6க்கு எண் 10ம் எண் 8ம் மிகப் பிடித்துவிட்டது. எண் 9க்கு எண் 5ம் எண் 7ம் பிடித்திருந்தது. ஆகவே, இரண்டும் பேசிக்கொண்டு இடம் மாற்றிக்கொண்டன. “நாம தலைகீழாக நின்றுவிட்டால் யாரும் கண்டுபிடிக்க முடியாது” என்றது எண் 6. ஆமாம் யாரும் கண்டுபிடிக்கவே இல்லை. உங்கள் வீட்டில் ஏதோ ஒரு கடிகாரத்தில் இப்படி 6ம் 9ம் இடம் மாறி இருக்கும். ஆனால், உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
(திரும்பவும் கதை முடிந்தது)