எந்த வீரமணி- உடுமலை
| ஆ |
சிரியர் வீரமணி தாத்தா, திராவிடர் கழகத்தின் தலைவர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (பல்கலைக்கழகம்) வேந்தர், சிறந்த நிருவாகி, தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறந்த மேடைப் பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர், ஓயாத உழைப்பாளி என்றுதான் அவரைப் பற்றிப் பலருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றி பலரும் அறியாத ஒரு சேதி என்னவென்றால், அவர் சிறந்த நகைச்சுவை உணர்வுக்குச் சொந்தக்காரர்.
அப்படிப்பட்ட ஆசிரியர் தாத்தா, 15.06.2025 அன்று கோபியில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்காக, கோபியிலிருக்கும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார். ஆசிரியர் தாத்தா, காலையிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு, உள்ளூர் கழகத் தோழர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சந்திப்பு என்று மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.
அந்த நேரத்தில், கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் – திலகவதி இணையர்கள் தங்கள் மகன் ‘அன்பு வீரமணி’யின் 10 ஆம் ஆண்டு பிறந்தநாளை ஆசிரியர் முன்னிலையில் கொண்டாடும் ஆவலுடன், ஒரு பிறந்தநாள் கேக்குடன் ஆசிரியர் தாத்தாவிடம் வந்தனர். ஆசிரியர் தாத்தா என்ன ஏதென்று விசாரித்துவிட்டு, கேக்கில் “அன்பு வீரமணி” என்று எழுதியிருந்ததைப் பார்த்து, அவனுடன் சற்று விளையாடலாம் என்று உள்ளுக்குள் முடிவுசெய்துவிட்டு, “கேக்கில் எழுதியிருப்பது யாருடைய பெயர்?” என்று கேட்டிருக்கிறார்.
இதை எதையும் அறியாத, பெரியார் பிஞ்சு அன்புவீரமணி சட்டென்று, “என்னுடைய பெயர்தான்” என்று சொல்லிவிட்டார். பிறகுதான் ஆசிரியர் தாத்தாவின் பெயரும் இதுதானே என்று அவருக்கு உறைத்திருக்கிறது. உடனே, “இல்லையில்லை இது உங்கள் பெயர்” என்று வேகவேகமாகச் சொல்லியிருக்கிறார். அன்பு வீரமணியிடம் சட்டென்று ஏற்பட்ட அந்த இனிமையான தடுமாற்றம் தந்த சுகத்தால் அனைவரும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். அந்த அரங்கமே சில மணித்துளிகள் கலகலப்பாக மாறிவிட்டது. அப்புறம் பிறந்தநாளைக் கொண்டாடிய பெரியார் பிஞ்சு அன்புவீரமணிக்கு, ஆசிரியர் தாத்தா ஒரு சிறு கேக் துண்டை ஊட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தாத்தாவின் வாழ்க்கையில் இது போன்று எத்தனையோ இனிய நிகழ்வுகள் உண்டு.<

