கொண்டைலாத்தி


சிலு சிலுவென வேரை நனைக்கும் மழையும், மழைக்காக வானம் பார்க்கும் செடிகளும், பயிர்களும் பூத்து நிற்கும் பூக்களும், உலர் ரக மணலில் கூட உயர்தரக் கனிகளைக் கொடுக்கும் மரங்களும் காத்திருக்கின்றன- பறவைகளின் வரவை எண்ணி! இவ்வாறு ஓரறிவு உயிர் ஜீவன் முதல் அய்ந்தறிவு உயிர்கள் வரை பறவைகளைத் தேடும்போது ஆறறிவு படைத்த நாம் ஏன் பறவைகளைக் காணவும், பாதுகாக்கவும் மறந்துவிடுகிறோம்?
பறவைகளைத் தேடல் என்பது அறிவுத் தேடலுக்கான பயணம் மட்டுமல்ல; எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவதற்காகவும்தான். பறவைகள் காலத்தால் அழியாக் காவியம், இயற்கை எழுதும் ஓவியம். அவை நெருப்பினில் குளிராகவும், நீரினில் உயிராகவும், நிலத்தினில் விதையாகவும், காற்றினில் மூச்சாகவும், பெரும்வெளியில் அனைத்துமாய் வலம் வருகின்றன. வீசிவரும் தென்றலைக் கிழித்து வானில் நகரும் கார்கால மேகங்கள் போல பறவைகள் ஊர்வலம் நடத்துகின்றன. பருத்திப் பூவைப் போன்ற பாதத்தை மென்மையாய்ப் பதிக்கிறது, புல்வெளி மேல்.

பூமியில் எந்த இடம் இனவிருத்தி செய்யத் தகுதியானது என்று பறவைகள் தேடி அலைகின்றன. இதற்காகப் பகலிரவு பாராமல் பறந்து, தங்களது வாழ்வாதாரத்தைக் கண்டு, அங்கே சில காலம் தங்கி வாழ்ந்து, வந்த நோக்கம் நிறைவடைந்தவுடன் மீண்டும் தன் இடத்திற்குச் செல்கின்றன. இவ்வாறு வலசைக்கு வரும் இரவு நேரப் பறவைகள் பட்டாசு வெடிப்பதனால் உண்டாகும் காற்று மற்றும் ஒலி மாசுக்களால் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. அவை மேலும் ஒலி மாசுபாடு பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தொடர் சத்தத்தினாலும், மிகையான ஒலி கேட்டும் தெறிக்கும் ஒளிகளைப் பார்த்தும் பழக்கமில்லாத பறவைகள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களை விட்டு வெளியேறுகின்றன. தொலைதூரத்திலிருந்து வரும் பறவைகள் திசை மாறிச் செல்வதும் அவற்றின் உயிருக்கு ஆபத்தாக முடிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வெடிக்கப்படும் பிரகாசமான மற்றும் சத்தமான பட்டாசுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பறவையான ஆந்தை ஒளிரும் வானம் மற்றும் ஒலி மாசுபாடு காரணமாக உணவுக்காகப் போராடும். மேலும் பல பறவைகள் அமைதியான பகுதிகளைத் தேடிச் செல்வதால் தங்கள் கூடுகளையோ அல்லது குஞ்சுகளையோ கைவிடக் கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பறவைகள் இல்லாத பெருங்காடு, விவசாயி இல்லாத வயற்காடு போலக் கெட்டழியும். இதுபோன்ற இன்னும் பிற காரணங்களால் மனிதனை எதிரியாகவே பார்க்கின்றன, பறவைகள். எந்த ஒரு பறவையும் மனிதன் மீது வந்தமரத் தயங்குகிறது. ஆனால், ஒரு கொக்கு மாட்டின் கண்களில் உள்ள அழுக்கை அகற்றுவதையும், ஒரு சிறிய பறவை முதலையின் பற்களுக்கு இடையே இருக்கும் கிருமிகளைச் சுத்தம் செய்வதையும், இரட்டைவால்குருவி எருமை மாட்டின் மீது சவாரி செய்வதையும் நம்மால் காண முடிகிறது. ஆனால், அப்பறவைகள் மனிதனை அச்சத்துடனே பார்க்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பெரியார் பிஞ்சு வாசகர்களே, இன்று நாம் காண இருக்கும் பறவை கொண்டைலாத்தி(HOOPOE) என்னும் பறவை ஆகும். இந்தப் பறவை ஆப்பிரிக்கா, ஆசியா, அய்ரோப்பா கண்டங்களிலும், தமிழ்நாட்டிலும் பரவலாகக் காணப்படுகிறது. இப்பறவையின் தலையில் கிரீடம் வைத்தாற்போல் பழுப்பு வண்ணத்தில் அழகான கொண்டை இருப்பதனால் கொண்டைலாத்தி எனப் பெயர் வந்தது. இது நீண்டு வளைந்த அலகைக் கொண்டது. தலையும், வயிறும் பழுப்பு நிறத்துடனும், இதன் இறக்கை மற்றும் வால் பகுதிகள் கருப்பு, வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகிறது. கொண்டைலாத்திப் பறவைக்கு எழுத்தாணிக் குருவி, சாவல் குருவி, கொண்டை வளர்த்தி, கொண்டை உலர்த்தி, விசிறிக் கொண்டைக் குருவி போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு. இப்பறவையின் அலகு, நீண்டு இருப்பதனால் இதனை மரங்கொத்திப் பறவை என மக்கள் தவறாகக் கருதுவார்கள். கொண்டைலாத்தியின் முக்கிய உணவுகள் வெட்டுக்கிளி, தரையில் வாழும் சிறுசிறு பூச்சிகள், ஊர்வன, தவளை மற்றும் விதைகள். மேலும் இதன் நீண்டு வளைந்த அலகைத் தரையினுள் செலுத்தி சுறுசுறுப்பாக ஓடியாடியபடி மண்ணைக் கிளறிப் புழு, பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகளையும் தேடித் தேடி உண்ணும். வயல்வெளியில் உள்ள எறும்பு, கரையான் மற்றும் வண்டுகளையும் இரையாக்கி, விவசாயத்திற்குச் சேதம் விளைவிக்கும் உயிரினங்களைக் கொன்று தின்பதால் உழவர்களின் நண்பனாகவும் இப்பறவை செயல்படுகிறது. இது தனியாக இரை தேடும். பொதுவாக தரையிலே இரையைத் தேடினாலும் மிக அரிதாகவே பறந்து செல்லும். பறந்து கொண்டே பூச்சிகளை உண்ணும். இப்பறவையின் வலுவான மற்றும் வட்டமான இறக்கைகள் வேகமாகப் பூச்சிகளைப் பின் தொடர்வதற்கு உதவுகின்றன. தரையில் வாழும் பூச்சிகளைத் தனது வலிமையான கால்களால் சதைகளைப் பிரித்தெடுத்து அல்லது தோண்டி எடுத்து உண்ணுகிறது. தனக்கான இரையை இலைகளின் குவியல்களைக் கிளறியும், பெரிய கற்களைத் திருப்பியும், மரப்பட்டைகளை அகற்றியும் ஒளிந்திருக்கும் பூச்சிகளைத் தேடிச்சென்று உண்ணும்.
கொண்டைலாத்திப் பறவைகள் இறக்கைகளையும் வாலையும் தரையில் கீழே விரித்து தலையை மேலே சாய்த்துச் சூரியக் குளியலில் ஈடுபடுகின்றன. தூசி மற்றும் மணல் குளியல் செய்வதிலும் மகிழ்ச்சியடைகின்றன. இப்பறவைகள் தமக்கான வாழ்விடங்களை இரண்டு அடிப்படைத் தேவைகளைக் கொண்டு தேர்வு செய்கின்றன. ஒன்று, சமவெளிப் பகுதியாகவும், இரண்டாவது, அதிலேயும் குறைவான எண்ணிக்கையிலான தாவரங்கள் உடைய நிலத்தில் தனக்கான வட்டாரத்தை எல்லையாகத் தேர்வு செய்து வாழ விரும்புகின்றன. இதன் அனுமதியில்லாமல் வேறொரு பறவை இதன் எல்லையில் நுழைந்தால் அப்பறவையோடு அலகோடு அலகு பொருந்த மோதிச் சண்டையிட்டுத் துரத்தும். விநாடிக்கு ஒருமுறை ‘ஹுபோ’ எனக் கத்துகின்ற கொண்டைலாத்தி இனப்பெருக்கக் காலத்தில் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து கத்தும்.
பெரும்பாலான அய்ரோப்பிய மற்றும் ஆசிய பறவைகள் குளிர்காலத்தில் வெப்பமண்டலப் பகுதிகளுக்கு வலசை செல்கின்றன. ஆனால், ஆப்பிரிக்கப் பறவைகள் வலசை செல்வதில்லை. ஜனவரி முதல் ஏப்ரல் வரை இப்பறவையின் இனப்பெருக்கக் காலமாகும். இப்பறவை தனக்கான கூடுகளை உயரமான கட்டடங்கள், உயரமான மரப்பொந்து மற்றும் பாறை இடுக்குகளில் கூடுகளை அமைத்து இனப்பெருக்கம் செய்கிறது. சுமார் 5 முதல் 7 முட்டைகள் வரையிட்டு சுமார் 15- லிருந்து 18 நாட்கள் வரை பெண் பறவை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றது. இக்காலகட்டத்தில் பெண் பறவைக்கு இரையைத் தேடிக் கொண்டு வந்து ஆண் பறவை ஊட்டிவிடுகிறது. குஞ்சு பொரித்த நாட்களில் பெண் பறவையிடமிருந்து துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் சுரக்கிறது. இத்திரவத்தைக் குஞ்சுகளின் மேல் தடவிவிடும். இதனால் எதிரிகளிடமிருந்து குஞ்சுகள் காப்பாற்றப்படுகின்றன. 2008ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவையாக கொண்டைலாத்திப் பறவை அறிவிக்கப்பட்டுள்ளது்.
மனிதர்களின் சுயநலத்தால் பறவைகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அருகி வரும் பறவை இனங்களை மீட்டெடுக்கவும் நீர்நிலைகளைத் தூர்வாரி நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திடவும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு நாமும் உறுதுணையாக இருந்து பறவைகளைப் பாதுகாத்திட வேண்டும்.
சரணாலயம் அமைப்போம்!
பறவைகளை வரவேற்போம்!







