முகராசி

மூடநம்பிக்கையில் நாட்டம் கொண்ட
மன்னன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

அவன் தினமும் காலையில் கண்விழித்ததும் மாடத்தில் நின்று இயற்கைக் காட்சிகளை ரசிப்பான்.

ஒருமுறை அப்படி மாடத்திற்கு வந்தபோது தோட்டத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரனின்
முகத்தில் விழித்துவிட்டான்.

“அய்யோ, காலையில் ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்துவிட்டேனே. என்ன தீமை நடக்கப்போகிறதோ? உடனே அவனை இழுத்து வாருங்கள்.”

காவலர்கள் அந்தப் பிச்சைக்காரனை இழுத்து வந்தனர்.

உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் எனது தோட்டத்தில் உட்காருவாய். உனது முகத்தில் விழித்ததால் எனக்குத் தீமை நடக்கப்போகிறது… உன் முகராசி விளங்குமா?

எனவே. அதற்கு முன்பு இவனைச் சிறையில் தள்ளி மரண தண்டனை தாருங்கள். இது அரச கட்டளை!

இந்தத் தீர்ப்பைக் கேட்ட பிச்சைக்காரன் கவலைப்படாமல் சிரித்தான்.
என்ன, கவலைப்படாமல் சிரிக்கிறாய்? அவ்வளவு திமிரா உனக்கு?

அது வேறொன்றுமில்லை மன்னா, காலையில் தாங்கள் என் முகத்தில் கண்விழித்த போதுதான் நானும் கண் விழித்து உங்கள் முகத்தைப் பார்த்தேன். எனது முகத்தில் விழித்த தாங்கள் நலமாக உள்ளீர்கள். ஆனால், தங்கள் முகத்தில் விழித்த எனக்கு, தலையே போகப்போகிறதே… உங்கள் முகராசியை நினைத்தேன். சிரித்தேன்.

அதைக் கேட்டு வெட்கப்பட்ட மன்னன், அவனை விடுதலை செய்ததோடு மூடநம்பிக்கையையும் அன்று முதல் விட்டொழித்தான்.






