இது தான் ஆங்கிலம்


‘பெரியார் பிஞ்சு’ வாசகச் செல்வங்களே! ‘ஓய்வு பெற்ற’ என்று சொல்லிக்கொள்ள விரும்பாத ஆங்கிலப் பேராசிரியரான நான் இனிமேல் ஒவ்வொரு மாதமும் ஆங்கில மொழி சார்ந்த பல விஷயங்களை உங்களுக்குக் கற்றுத்தரப் போகிறேன். நீங்களும் கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுத் தந்து வியப்பில் ஆழ்த்துங்கள். (ஆசிரியர்களுக்கு என்றுமே ஓய்வு இருக்கக்கூடாது. என் பணியும் தொடர்கிறது.)
- கட்டை விரல் – thumb – ‘தம்ப்’ அல்ல. ‘தம்’ என்பதே சரியான உச்சரிப்பு. ‘b’ இருக்கிறதே என்று அடம் பிடிக்காதீர்கள். அது உச்சரிக்கப்படக்கூடாது. இதைப் போலவே – climb/tomb/limb இப்படி இன்னும் பல. ‘mb’ இரண்டும் சேர்ந்து வந்தால் – எச்சரிக்கை.
- ‘Bridge’ ப்ரிட்ஜ் என்பது தவறான உச்சரிப்பு. ‘ப்ரிஜ்’ என்பதே சரி. இதைப்போலவே- lodge/fridge/judge/Budget/இப்படி மேலும் பல. ‘dg’ சேர்ந்து வந்தால் ‘d’யை உச்சரிக்காதீர்கள். ‘பட்ஜெட்’ என்பது தவறு. ‘பஜெட்’ என்றே உச்சரிக்க வேண்டும். யாராவது சிரித்தால் கவலைப்படாதீர்கள். உங்கள் அறிவு வளர்ந்தால் போதுமே!
- சட்டைப் பை ‘பேக்கட்’ (Packet) அல்ல – ‘பாக்கிட்’ (Pocket). ‘பேக்கட்ல காசு இல்லையே’ என்று யாராவது சொன்னால் அது ‘பாக்கிட்’ என்று அவர்களைத் திருத்துங்கள்.
- வெங்காயம் (Onion) ‘ஆனியன்’ அல்ல – ‘அன்யன்’. உலகில் வேறு எந்த நாட்டினரும் ‘ஆனியன்’ என்று சொல்வதில்லை – நம்மைத் தவிர! கல்லூரிகளில் இதைச் சொல்லித் தந்த போதெல்லாம் குறும்புக்கார மாணவர்கள் “என்ன சார்… விக்ரம் நடிச்ச ‘அந்நியன்’ படம் மாதிரி இருக்கே? ‘பனியன்’ மாதிரி இருக்கே?” என்றெல்லாம் சிரிப்பது வழக்கம். பிறகு அவர்கள் கற்றுக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள்.
- ‘சார்!’ என்று யாரையும் கூப்பிடாதீர்கள். அப்படி ஒரு வார்த்தையே ஆங்கிலத்தில் இல்லை. ‘ஸர்’ என்பது மட்டுமே (SIR) சரியான உச்சரிப்பு. வெளிநாடுகளுக்குச் சென்று ‘சார்’ என்று யாரையாவது நீங்கள் அழைத்தால் ஏறஇறங்கப் பார்ப்பார்கள். கேலிக்கு ஆளாகாதீர்கள்!
- அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து தினமும் டி.வி. செய்திகளில் ‘HAIR INDIA’ என்று செய்தியாளர்கள் நிமிடத்திற்கு ஒருமுறை உச்சரிக்கும்போது எரிச்சலடைய வேண்டியுள்ளது. அது ‘AIR INDIA’ ‘ஏர் இண்டியா’- (ஹேர் இண்டியா அல்ல).
- தக்காளி ‘டமாடோ’ அல்ல. உருளைக்கிழங்கு ‘பொடேடோ’ அல்ல. Tomato – ‘டமெய்டோ’ Potato – ‘படெய்டோ’. இதுவே சரியான உச்சரிப்பு.
- நடைபாதை – ‘Platform’ என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது ‘side walk’; ‘Lift’ அல்ல- ‘Elevator’ எலவேட்டர். குப்பைக்கூடை ‘Dust Bin’ அல்ல – ‘Trash Can’, ‘பிஸ்கட்டுகள்’ – ‘Cookies’ குக்கீஸ். ‘மெடிக்கல் ஷாப்’ – ‘Drug Store’ இப்படி இன்னும் நிறைய உள்ளன. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
- A முதல் Z வரை உள்ள 26 எழுத்துக்களுக்கு ‘Alphabet’ என்றே பெயர். நூற்றுக்கு 99 பேர் ‘Alphabets’ என்கிறார்கள். என்ன செய்யலாம்?
11 என்ற எண்ணை “‘லெவன்’ அல்ல- ‘இலெவன்’” என்று திருத்தினால் அடிக்க வருகிறார்கள்.
- ‘Stationary’ என்றால் நகராமல் இருக்கும் பொருள். (ஓடாமல் நிற்கும் வண்டிகளுக்கும் இது பொருந்தும்).
ஆனால், stationery என்றால் எழுதுபொருள் (Pen, Pencil, Eraser போன்றவை). இதற்குப் பன்மை கிடையாது. பல கடைகளில் பெயர்ப் பலகையில் ‘stationaries’ என்று குறிப்பிடுகிறார்கள். ‘stationery’ போதுமே! ‘Furnitures’, ‘Machineries’ கூட தவறுதான். ‘S’ சேர்க்கக்கூடாது.
அடுத்த இதழில் இன்னும் நிறைய!






