பாடம் பெறுவது பட்டுணர்ந்தா? பார்த்துணர்ந்தா?

வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலில் கற்றுணர்ந்து வாழ்வதாகும். பிறந்த குழந்தைக்கு தாய், தந்தை, குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் வீட்டில் அவர்கள் செயல்படுவதை வைத்து, அவ்வீட்டில் பிறந்து வளரும் குழந்தை பலவற்றைக் கற்கிறது. உண்ண, பேச, நடக்க, ஓட என்று பலவற்றைக் கற்கிறது.
குழந்தையாய் இருக்கும்போது பட்டுணர்ந்தும் பாடம் கற்கும்; பார்த்துணர்ந்தும் பாடம் கற்கும். விழுந்து அடிபட்டால் வலிக்கும் என்று அறிகிறது. நெருப்பைத் தொட்டால் சுடும் என்பதை அறிந்து கொள்கிறது. தப்பு செய்தால் பெரியவர்கள் கோபப்படுவார்கள், அடிப்பார்கள் என்று அறிந்துகொள்கிறது. இவைபோன்றவை குழந்தை பட்டுணர்ந்து அறிகிறது.
சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, நடப்பது, பேசுவது, பாடுவது, ஆடுவது, விளையாடுவது, தொலைக்காட்சி, செல்பேசி பார்ப்பது போன்றவற்றைப் பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது.
குழந்தைப் பருவத்தில் பட்டு அறிவதும், பார்த்து அறிவதும் அதிக அளவில் இருக்கும். ஆனால், இது வயது கூடக் கூட, வளரவளரத் தொடரக் கூடாது. வயது கூடக்கூட பட்டு அறிவது குறைய வேண்டும்; பார்த்து அறிவதே மிகுதியாய் இருக்கவேண்டும். அதுவே அறிவு வளர்ச்சிக்கும், ஆளுமைத் திறத்திற்கும் அடிப்படையாய் அமையும்.
தனிநபரைப் போலவே உலகச் சமுதாயத் திற்கும் இந்த நிலையுண்டு. தீ சுடும் என்பதை இன்று உலகத்தில் பலரும் சுட்டுக் கொள்ளாமலே அறிந்துகொள்கின்றனர். முதலில் வாழ்ந்த மனிதர்கள் சுட்டுக்கொண்டு பெற்ற பாடத்தைத் தன் தலைமுறைக்குத் தருகின்றனர். இது முன்னோரைப் பார்த்து நாம் அறிந்த பாடம். மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் சாப்பிடலாம்; அரளிப்பழம், எட்டிபழம், குன்றுமணிப்பழம் போன்ற நச்சுப்பழங்களைச் சாப்பிடக்கூடாது. சில கீரைகளைச் சாப்பிட வேண்டும், சில கீரைகள் நச்சு – சாப்பிடக்கூடாது என்பதை நம் முன்னோர் பட்டுணர்ந்து நமக்குக் கூறியதால் நாம் அவர்களைப் பார்த்தே இந்த உண்மைகளைக் கற்றுக்கொள்கிறோம்.
நம் முன்னோர் பட்டுப்பட்டு, பாடம் கற்றுக்கற்று பல அனுபவங்களப் பெற்றனர். அதனால், அவர்களைப் பார்த்தே நாம் பலவற்றைக் கற்றுக்கொள்வதால் நம் வாழ்க்கை எளிதாகிறது என்பதோடு, அதிகப் பாதிப்பு இல்லாததாகவும் அமைகிறது.
இன்றைக்கு நாம் அடுக்குமாடி வீடு கட்டுகிறோம் என்றால் நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாய்ப் பட்டுணர்ந்து பெற்ற, கற்ற பாடங்களை நாம் பெறுவதால், நாம் நம்முடைய கட்டுமான முயற்சியை எளிதால் மேற்கொள்கிறோம். அதன்மூலம் கட்டுமானத்தில் அடுத்தடுத்தக் கட்டங்களை அடைகிறோம்.
மண்ணால் சுவர் கட்டியவர்கள், அடுத்து செங்கல்லால் கட்டினார்கள், சுண்ணாம்பால் சுவர் எழுப்பியவர்கள் அடுத்து சிமெண்டைப் பயன்படுத்திச் சுவர் எழுப்பினார்கள். மரச்சட்டங் களால், கருங்கல்லால் மாடி வீடு கட்டியவர்கள் தற்போது இரும்பு, ஜல்லி, சிமெண்ட் இவற்றின் மூலம் கான்கிரீட் மாடி கட்டுகின்றனர்.
இன்றைக்கு நாம் பெற்றிருக்கும் வளர்ச்சிக்குப் பெருங்காரணம், நம் முன்னோர்கள் பட்டுணர்ந்து பெற்ற பாடங்களை நாம் பார்த்தறிந்து செயல்படுவதே ஆகும். சுருங்கச் சொன்னால் நம் முன்னோர் தோள் மீது நாம் நிற்பதால் நாம் உயரமாகத் தெரிகிறோம்.
நம் முன்னோர் பல அனுபவங்களை, பாடங்களை பல இடர்கள், இன்னல்கள், இழப்புகளை, வலிகளை ஏற்றே கற்றனர். அதனாலே நம் வாழ்க்கை இன்னல் குறைந்ததாய், இழப்புக் குறைந்தாய் இருக்கிறது.
இந்த அடிப்படை உண்மையைப் பிஞ்சுகளாகிய நீங்கள் ஆழமாக உள்ளத்தில் கொள்ளவேண்டும். அதிக வேகமாக வாகனத்தில் சென்றால் விபத்தும், உயிர் இழப்பும் ஏற்படுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். உடனே நாம் என்ன கற்க வேண்டும்? நாம் அளவான வேகத்தில் செல்லவேண்டும் என்ற பாடத்தைக் கற்க வேண்டும். சாலை விதிகளைப் பின்பற்றாதவர்கள் விபத்தில் இறப்பதைப் பார்த்து, நாம் விதிமீறிச் செல்லக்கூடாது, சாலை விதிகளின்படி செல்ல வேண்டும் என்ற பாடத்தைப் பெற வேண்டும். மாறாக, நாம் விபத்தில் சிக்கிய பின்தான் பாடம் பெறுவோம் என்றால் அது அறிவற்ற செயலாகும். அது அழிவைத்தரும்.
முறையாக வகுப்பில் கவனமாகப் பாடம் கேட்டு, நாள்தோறும் படிக்கிறவர்கள் நிறைய மதிப்பெண் பெறுவதையும், அவ்வாறு செய்யாதவர்கள் குறைவான மதிப்பெண்ணையும் பெறுவதைப் பார்க்கும் நாம், அவர்களைப் பார்த்தே பாடம் கற்க வேண்டும். மாறாக, தேர்வில் தோல்வி அடைந்து, வருந்திப் பாடம் கற்கக் கூடாது.
தப்புச் செய்கின்றவர்கள் தண்டனை பெற்று வருந்துவதைப் பார்த்தே நாம் தப்பு செய்யக்கூடாது என்று முடிவெடுக்க வேண்டும். மாறாக, நாமும் தண்டனை பெற்ற பின்தான் திருந்துவோம் என்பது அறிவுக்கு உகந்த செயலாகாது.
படித்துப் பட்டம் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து, வருவாய் பெற்று வளமாய் வாழ்வதையும், படிக்கத் தவறுகின்றவர்கள், வாழ்வில் புறக்கணிக்கப்பட்டு, இன்னல் அடைவதையும் பார்க்கும் நாம் அவர்களைப் பார்த்தே பாடம் பெறவேண்டும். நாமும் படிக்க வேண்டும், நாமும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கம் பெறவேண்டும். அந்த ஊக்கத்துடன் படித்து மேல் வரவேண்டும்.
ஒழுக்கம், நேர்மை, வாய்மை, உழைப்பு, பொறுமை, அன்பு, பணிவு, துணிவு, உறுதி, கட்டுப்பாடு என்று உயர்குணங்களுடன் வாழ்பவர்கள் சிறப்பாக வாழ்வதையும், இதற்கு எதிராக வாழ்கின்றவர்கள் வாழ்வில் மிக மோசமான நிலையை அடைவதையும் பார்த்தே நாம் பாடம் கற்று வாழவேண்டும். மாறாக, நாமும் பாதிக்கப்பட்ட பின் வருந்துவதோ, திருந்துவதோ ஏற்புடையதல்ல.
இந்த நேரத்தில் நீங்கள் ஒருகருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பார்த்துப் பாடம் பெற்றே வாழ வேண்டும் என்றாலும், நம் வாழ்வில் சிலவற்றை நாம் பட்டுணர்ந்தும் கற்றுக்கொள்ள வேண்டிவரும். அப்போது, அந்த அனுபவத்தை நாம் பாடமாகக் கொள்ள வேண்டும். ஒரு செயலைச் செய்யும்போதும், ஒரு தொழிலைக் கற்கும் போதும், ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முற்படும்போம், ஒரு சாதனையைச் செய்ய முயற்சிக்கும் போதும், நாம் நம் அனுபவத்தில் சில பாடங்களைக் கற்போம். எது சரி, எது தப்பு, இதை இப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாம், இதை இப்படிப் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற அனுபவப் பாடங்களை நாம் பெறும்போது அதை அப்படியே கற்றுக்கொள்ள வேண்டும், அதன் வழி நம்மைச் சீர்செய்து கொள்ள வேண்டும்.
நாம் பட்டுணர்ந்தவற்றை மற்றவர்களுக்கும் சொல்லி, அவர்களுக்கு வாழ்வை எளிதாக்க வேண்டும்.
எனவே, வாழ்வில் பட்டுணர்வது குறைவாகவும், பிறரைப் பார்த்தே நம்மைச் சீர் செய்துகொள்வது அதிகமாகவும் இருக்கவேண்டும். அது வாழ்வை எளிதாக்கும், இனிமையாக்கும், சிறப்பாக்கும்.







