காட்டு வாசி -11 கூடியது நீதிமன்றம்

அதே நேரம்… மாணிக்கம் வீட்டில்… அம்மா வள்ளி, தாத்தா, மாணிக்கம் மூவரும் சாப்பிட்டு முடித்து படுக்கையில் படுத்து விட்டனர்.
படுத்திருந்த தாத்தா… “அம்மா வள்ளி… நம்மை எதுக்கு நாளைக்கு கோர்ட்டுக்கு வரச் சொல்றாங்க? நாம மாணிக்கத்தைக் காணோம்னு போலீஸ்லே சொன்னோம். மாணிக்கத்தைக் கண்டுபுடிச்சு நம்மகிட்ட ஒப்படைச்சுட்டாங்க. இதுக்கப்புறம் நமக்கு அங்கே என்ன வேலை…?” என்று கேட்டார்.
“ஒரு வேளை குழந்தைகளைக் கடத்துனதுக்கு காட்டுவாசிக்கு தண்டனை கொடுப்பாங்களோ?” என சந்தேகத்தோடு கேட்டாள் வள்ளி.
“அம்மா! அவரு ரொம்ப நல்லவரும்மா. அவரு மட்டும் அந்தக் காட்டுலே இல்லாமப் போயிருந்தா என்னையும், அமுதாவையும் நீங்க யாருமே பார்த்திருக்க முடியாது. எங்களைக் கடத்துனதே மாசியும், மலையாண்டியும்தான். அவங்களுக்கு பாஸ் மாதிரி இருந்தவன் அந்தக் குல்மால்ஜிதான்! அவங்களுக்குத்தான் தண்டனை கொடுக்கணும்” என்று படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து சொன்னான் மாணிக்கம்.
“அட… நீ என்ன மாணிக்கம்… திடீர்னு நீதிபதியா மாறி தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சுட்டே… ஏப்பா… நான் தெரியாமத்தான் கேக்குறேன்… யாருமில்லாத காட்டுக்குள்ள அந்தக் காட்டுவாசிக்கு என்ன வேலை? அவரு யாரு… ஒண்ணுமே புரியலே… விடிஞ்சாதான் நமக்கு உண்மை தெரியும்.” என்றார் தாத்தா.
“ஆமாமா! தாத்தா சொன்ன மாதிரி நாளைக்கு நாம கோர்ட்டுக்குப் போனாத்தான் உண்மை என்னன்னு விளங்கும். காலையிலே சீக்கிரம் எழுந்து போகணும், தூங்குங்க” என்றாள் வள்ளி.
பொழுது விடிந்தது. நீதிமன்ற வளாகத்தில் எல்லோரும் பரபரப்பாக அங்கும் இங்கும் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். காலை பத்து மணியளவில் காட்டுவாசியை ஏற்றி வந்த நீலநிற வாகனம் நீதிமன்றத்தின் உள்ளே வந்து நின்றது. அதனைத் தொடர்ந்து பல ஜீப்புகளும் கார்களும் வரிசை கட்டி வந்து நின்றன.
வழக்கம்போல நீதிபதி இருக்கையில் நீதிபதி அமர, அவருக்கு அருகில் டபேதார் நிற்க, கீழ் உள்ள இருக்கையில் அலுவலகப் பணியாளர்கள், எதிரே உள்ள நாற்காலிகளில் வழக்குரைஞர்கள் என நீதிமன்றமே ஓர் அரண்மனையைப் போல களைகட்டி இருந்தது.
நீலநிற வாகனத்தில் இருந்து அதே கம்பீரத்தோடு இறங்கி மிடுக்காக நடந்து வந்தார் காட்டுவாசி. அவர் நீதிமன்றத்தின் உள்ளே சென்ற சற்று நேரத்தில் வனத்துறையைச் சேர்ந்த பச்சை நிற வாகனம் ஒன்று வளாகத்தின் உள்ளே வந்து நின்றது. அதிலிருந்து சில வனத்துறை அதிகாரிகள் காவல்துறையைப் போலவே காக்கி உடையுடன் இறங்கினார்கள். அதில் இருந்த ஒருவர் கையில் சில கோப்புகள் இருந்தன. அவர்களும் நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்து பார்வையாளர்கள் இருக்கையில் முன்னால் அமர்ந்தார்கள்.
மாணிக்கம் தன் அம்மா வள்ளி, தாத்தாவுடன் முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தான். அமுதா அப்பா, அம்மா, பாட்டியுடன் அடுத்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அமுதாவைப் பார்த்ததும் வேகமாக எழுந்து போன மாணிக்கம்,” என்ன அமுதா சாப்பிட்டியா?” என்று பரிவோடு கேட்டான். “மாணிக்கம் நேத்து ராத்திரிதான் பயமில்லமை அம்மா, அப்பா கூட சேர்ந்து மகிழ்ச்சியா சாப்பிட்டேன்.” என்றாள் அமுதா.
“தம்பி… மாணிக்கம் நீ சாப்பிட்டியா அய்யா?” என்று அன்பாகக் கேட்டார் அமுதாவின் பாட்டி.
“ஓ… ரொம்ப நாளைக்குப் பிறகு அம்மா எனக்குப் புடிச்ச பூரி சுட்டுக் குடுத்தாங்க. நல்லா சாப்பிட்டேன்” என்றான் மாணிக்கம்.
சலசலப்புக்கு நடுவே “சைலன்ஸ்” என்ற டபோதாரின் குரல் கேட்டு நீதிமன்றமே அமைதியானது.
காவல்துறை அதிகாரி நீதிபதி முன் வந்து நின்று சல்யூட் அடித்துவிட்டு தன் கையிலிருந்த தாள்களைப் பணிவுடன் நீதிபதியிடம் வழங்கினார்.
அதை வாங்கிப் படித்துப் பார்த்த நீதிபதி “வெரிகுட்! ஒரு நாள் அவகாசத்திலே குல்மால் குருஜி யாரு, அவரோட இருந்த மலையாண்டியும், மாசியும் யாருண்ணு தீர விசாரிச்சு தகவல் தந்திருக்கீங்க. காவல்துறைக்குப் பாராட்டுகள்!
ஏற்கெனவே… பல வழங்குகளிலே சம்மந்தப்பட்டிருக்கிற தேடப்பட்ட குற்றவாளியான மலையாண்டியும், மாசியும்தான் குழந்தைகளைக் கடற்கரையிலேயிருந்து கார்லே கடத்தியிருக்காருங்கன்னு போலீஸ் விசாரணையிலே ஒத்துக்கிட்டு இருக்காங்க.
இதுக்கு மூலகாரணமா இருந்த குல்மால் குருஜி ஏற்கனவே அந்த வனப்பகுதியிலே ஏராளமாய் சந்தன மரங்களையும், செம்மரங்களையும் இந்த ரெண்டு பேரை வச்சு கடத்தியிருக்கருங்கிற உண்மையும் தெரிய வந்திருக்கு. அதோட நேத்து ராத்திரி குல்மால் குருஜி வீட்டுல சோதனை போட்டதுலே சில சந்தன மரக்கட்டைகளும் கிடைச்சிருக்கு. அதனாலே, குழந்தைகளைக் கடத்துனதா காட்டுவாசி மேலே குற்றம் சுமத்துன குல்மால் குருஜிதான் இந்தக் குழந்தை கடத்தலுக்கான முக்கியக் காரணம்னு தெரியவருது. அதோட காட்டு மரங்களைக் கடத்த, தனக்கு இடைஞ்சலா இருந்த காட்டுவாசியைக் குழந்தைகளைக் கடத்துனதா மாட்டிவிடத் திட்டம் போட்டிருக்காரு குல்மால் குருஜி.
ஆனா… அவரு விரிச்ச சதிவலையிலே கடைசியிலே அவரே வந்து மாட்டிக்கிட்டிருக்காரு.
குழந்தைகளை அந்தக் கடத்தல் கும்பல்கிட்டேயிருந்து காப்பாத்துனதோட, நாட்டின் சொத்தான காட்டையும் காப்பாத்தி இருக்காரு காட்டுவாசி.
குல்மால் குருஜி, மலையாண்டி, மாசி இவங்க செய்த குற்றங்களுக்கு முறைப்படி பல சட்டப் பிரிவுகளின் கீழே இன்னும் அவங்களுடைய சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைப் பற்றி தீவிரமாக ஆராய்ஞ்சு உரிய வழக்குகளைப் போட காவல்துறைக்கு ஆணை வழங்கப்படுது. அதுக்குரிய தண்டனையும் வழங்கணும்.
அதே நேரத்திலே காட்டுக்குள்ளே குடில் அமைச்சு காட்டையும் காப்பாத்தி கடத்தப்பட்ட குழந்தைகளையும் காப்பாத்துன இந்த காட்டுவாசி யாருன்னு தான் தெரியலே.
ஏங்க… காட்டுவாசி நீங்க யாரு? எதுக்காகக் காட்டுக்குள்ளே குடில் போட்டு தங்கியிருந்தீங்க… அதைச் சொல்லுங்க” என்றார் நீதிபதி.<
(தொடரும்…)