வந்தால் பெரியாராய்த்தான் வருவேன் பெரியார் பிஞ்சு அதிரடி
நாகர்கோயிலில் உள்ள, ‘குமாரி மெட்ரிக் தொடக்கப் பள்ளி’யில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் சுதந்திர நாளைக் கொண்டாடும் விதமாக, மாறுவேடப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் யார் யார் எந்தெந்த வேடம் போட வேண்டும் என்பதை வகுப்பு ஆசிரியர்களே முடிவு செய்து, பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பாரதியார் வேடம் தான். மேலும் பாரத மாதா, சுபாஷ் சந்திரபோஸ், அண்ணல் காந்தி, திருப்பூர் குமரன் ஆகியோரின் வேடங்கள்தாம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் ஒப்புக் கொண்ட நிலையில், நான்காம் வகுப்பில் பயிலும் 8 வயது, சைத்தரவி சிறீநிதி (எ) டின்கு (TINKU) மட்டும், தான் “பெரியார் தாத்தா வேடம் தான் போடுவேன்” என்று அடம் பிடித்திருக்கிறார்.
பள்ளி நிருவாகத்தால் சிறீநிதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சிறீநிதியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாததால், நிருவாகம் சார்பில் சிறீநிதியின் பெற்றோரிடம் பேசியுள்ளனர். சிறீநிதியின் பெற்றோரான டாக்டர் கே.வி. ஜோஸ்னா – பாஸ்கர் ஆகியோர் பகுத்தறிவாளர்கள் ஆதலால், தங்கள் மகள் விருப்பத்துக்கு ஆதரவாகவே பேசியிருக்கின்றனர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால், “பெரியார் தாத்தா வேடம் போடக் கூடாது என்றால், நான் நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்ளவில்லை” என்று நான்காம் வகுப்புப் பயிலும், 8 வயது சிறீநிதி அதிரடியாகக் கூறி விட்டார். பள்ளி நிருவாகம் விழி பிதுங்கிப் போயிருக்கிறது. வேறு வழியின்றி டின்குவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டது. “பெரியார் பிஞ்சு” சிறீநிதி, “பெரியார் தாத்தா” வேடத்திலேயே அந்நிகழ்வில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
சிறீநிதியின் தாத்தா சத்தியநாராயணன் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவர் ஒரு பகுத்தறிவாளர். மகாத்மா ஜோதிராவ் ஃபூலே வின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். ஆந்திரா வைசாக்கில் (விசாகப்பட்டினத்தில்) வசிக்கும் இவர் தந்தை பெரியாரைப் படித்துவிட்டு வியந்து போயிருக்கிறார். பெரியார் திடலுக்கு வந்து பார்வையிட வேண்டும் என்ற தணியாத தாகத்துடன், கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வருகை தந்து, பெரியார் திடலை நிதானமாகச் சுற்றிப் பார்த்து விட்டு, பெரியாரைப் பற்றிய ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
