பச்சைக் கிளி
| இ |
ந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும் சொந்தமானது. அவை வாழ்ந்தால் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும். இதை இன்னும் மனிதர்களாகிய நாம் புரிந்துகொள்ளாததால்தான் காடுகளையும் விலங்குகளையும் நீர்நிலைகளையும் பறவைகளையும் நம் தேவைகளுக்காக அழித்து வருகிறோம். மனிதர்கள் சொகுசாக வாழ்வதற்கு முக்கியக் காரணம், இயற்கை மட்டுமே! நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வகைப் பறவைகளும், தாவரங்களும், விலங்குகளும் பிற உயிரினங்களை உள்ளடக்கியவை. சுற்றுச்சூழலிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சமநிலைப்படுத்துகின்றன. அதாவது, ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்து வருகின்றன. எனவே, நீங்கள் ஒன்றை அழித்துவிட்டால் சுற்றுச்சூழல் அமைப்பு சமநிலையற்றதாகி ஒவ்வொன்றாக அழிந்துவிடும். மனிதர்களாகிய நாம் நம்முடைய வசதிக்காக அவற்றின் இருப்பிடங்களையும், வாழ்வாதாரங்களையும் அழித்துவிடுகிறோம். அதனால் பறவைகளும் விலங்குகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. விலங்குகளைக் காப்பாற்ற மனிதர்களாகிய நாம் காடுகளை அழிப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
பறவைகள் புகலிடம் (சரணாலயம்) என்பது பறவைகளின் வாழ்விடமாகவும், அவற்றைப் பாதுகாக்கும் இடமாகவும் உள்ளது. இது பறவைகளின் இனப்பெருக்கம், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற தேவைகளை நிறைவு செய்கிறது. தமிழ்நாட்டில் பல பறவைகள் புகலிடங்கள் உள்ளன. பறவைகள் புகலிடங்களில் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் மூலம் அவற்றின் இனங்களும் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பழமையான புகலிடங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. கிராம மக்களின் பாதுகாப்பில் சுமார் 250 ஆண்டு காலமாகப் பறவைகள் புகலிடமாக இருந்துவருகிறது.
வனப்பரப்பில் 17% பெற்று இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 14ஆம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக் காடுகளில் விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், நீர்நிலைகளும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுப் பாதுகாத்து வரப்படுகின்றன. மேலும் பறவைகள் வாழ்வதற்கேற்ப பல்வேறு சூழலமைவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 360 வகையான பறவைகள் வாழ்ந்துவருகின்றன. நீர்நிலைகளில் பறவைகளைப் பாதுகாக்க 16 பகுதிகளைப் பறவைகள் காப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்துப் பாதுகாத்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் வந்து ஏப்ரல்– மே மாதங்களில் திரும்பிச் செல்கின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்அமெரிக்காவிலும் மிக அதிகமாகக் கிளிகள் காணப்படுகின்றன. கிளி இனங்களில் சுமார் 372 வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாகக் காணப்படுவது சிவப்பு வளையக் கிளிகளாகும். மற்ற எந்தப் பறவைக்கும் இல்லாத தனிச்சிறப்பு இப் பறவைக்கு உள்ளது. அது இப்பறவையின் அலகுப் பகுதியாகும். அது வளைந்த அழகான சிவந்த அலகும் பளீர் வண்ணமும் கொண்டது.
பொதுவாக அலகுகள் பறவைக்குப் பறவை வேறுபடுகின்றன. பறவையின் வெளிப்புற உறுப்பாக இருக்கும் அலகினால் உணவை உண்ணவும், எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க அப் பறவையோடு சண்டையிடவும் இளம் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டவும் பயன்படுகிறது. மேலும் பறவை அலகின் வடிவம், நிறம், அமைப்புகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. பொதுவாக, பறவைகளின் அலகுகளில் இரண்டு தாடைகள் உள்ளன. கிளிகளால் மேல் தாடை அலகை மட்டுமே அசைக்க முடியும். வளைந்த கூர்மையான அலகால் விதைகளையும் பழங்களையும், பழக்கொட்டைகளையும் கொறித்துத் தின்கின்றன. பறவை இனங்களில் புத்திக் கூர்மை கொண்டதாகவும், கேட்கும் ஆற்றல் உடையனவாகவும் கிளிகள் உள்ளன. மேலும் கிளி விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையும் உடையது. பயிற்சி அளித்தால் மனிதர்கள் போலவே ஒலி எழுப்பக் கூடியது. புல்வெளியின் சிரிப்பும், கிளைகளின் இலைகளும் போல, கண்ணையும் உள்ளத்தையும் குளிரச்செய்யும் வண்ணமான பச்சை நிறத்தை உடல் முழுவதும் கொண்டவை கிளிகள். ஆண் மற்றும் பெண் பறவைகள் பச்சை நிறமாக இருந்தாலும் ஆண் கிளியின் கழுத்தில் மட்டும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் கலந்த சிறிய அளவிலான வளையம் காணப்படும். ஆனால், இளம் வயதுடைய ஆண் கிளியின் கழுத்தில் சிவப்பு வண்ண வளையம் இருப்பதில்லை. வால் இறகு நீண்டும் கூர்மையாகவும் கிளியின் மொத்த நீளத்தில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. காலின் முன்பக்கம் இரண்டு விரல்களும், பின்பக்கம் இரண்டு விரல்களுமாக நான்கு விரல்கள் உள்ளன. இவ்விரல்கள் மரக்கிளையை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும், பழக்கொட்டைகளை இறுகப் பிடித்துக்கொள்ளவும் உதவுகின்றன. இவை எடை சுமார் 10 கிராம் அளவிலிருந்து 4 கிலோ வரையிலான எடையில் உள்ளன. கிளி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் தன்மையுடையது. கிளிகளின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகளாகும். இப்பறவையினங்களில் சில வகை கிளிகள் 80 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயதிற்கு வந்த இளங்கிளிகள் பெண்கிளியின் அருகில் அமர்ந்து நெஞ்சை நிமிர்த்தி அலகோடு அலகு பொருத்தி முத்தமிட்டு தன் அன்பை வெளிக்காட்டுகின்றன. கிளிகள் இனப்பெருக்கக் காலத்தில் உயரமான மரப்பொந்தில் ஆண்டுக்கு ஒரு முட்டை மட்டுமே இட்டு 20 நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன.
பல்வேறு வகைகளான கிளிகளில் கியா என்னும் பெயர் கொண்ட ஆஸ்திரேலியப் பறவை இறைச்சியை விரும்பி உண்ணும் ஓர் அசைவப் பறவையாகும். அதுபோல Kakapo (ககாபு) என்ற பெயர் கொண்ட கிளிகளால் பறக்க முடியாது.
பொதுவாக, கிளிகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் வடக்கு அய்ரோப்பாவில் மிகக் குறைந்த குளிர்காலப் பகுதிகளிலும் வாழ்கின்றன. இவ்வாறாக உலகம் முழுவதும் கிளிகள் வாழுகின்றன. கிளிகள் அழகானவை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் அமைவுக்கு இன்றியமையாததாகவும் இருப்பதால் இப் பறவையைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆந்திர அரசு ரோஜா வளையக் கிளியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் மே 31ஆம் நாளே உலக கிளிகள் நாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயர நிலத்தில் வாழத் தெரிந்த கிளிகளால் சுமார் 6 அடி உயரக் கிளைகளில் நிம்மதியாக வாழ முடியவில்லையே என நினைக்கும் போதுதான் நெஞ்சு கனக்கிறது. இயற்கையைப் புதுப்பிக்கும் வல்லமை கொண்ட பறவைகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு ஏதோ ஒரு வகையில் மனிதர்களின் செயல்பாடுகளும் காரணமாக இருப்பதுதான் மிகுந்த வருத்தமளிக்கிறது. விளைநிலங்களில் விளைச்சலை அதிகரிக்க வேண்டி பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதன் மூலமாகவும், காட்டில் சுதந்திரமாக மரத்துக்கு மரம் தாவித் தாவிச் சுற்றித் திரியும் பறவைகளை ஒரு சிறிய கூண்டில் அடைத்து அழகு பார்ப்பதாலும், அதிகப் புரதச்சத்து, உயிர்ச்சத்து, கால்சிய சத்துக்கள், குறைவான கொழுப்பு, அதிக அளவில் இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்கள் பறவைகள் இறைச்சியிலிருந்து கிடைப்பதாலும் எளிதாக வேட்டையாடப்பட்டு பறவையினங்கள் அழிந்து வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். பறவைகளை நாம் அழிவிலிருந்து காப்பாற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.
பச்சைக் கிளிகளைப் பாதுகாப்போம்!
பசுமைக் காடுகள் செழிக்க வைப்போம்!<