ஆசிரியர் மாணவர் உறவில் ஈர்ப்பும் வெறுப்பும்
| ஒ |
ருவர் மீது மற்றவர்க்கு ஏற்படும் ஈர்ப்பும் வெறுப்பும் பல காரணங்களால் ஏற்படுகிறது. சிலருக்கு, சிலரைப் பார்த்தவுடனே பிடிக்கும். அவரோடு நெருங்கிப் பழக விரும்புவர். மாறாக, சிலரைப் பார்த்தவுடனே சிலருக்கு வெறுப்பு உண்டாகும். இவை உளம்சார்ந்த உணர்வுகள். ஆனால், பெரும்பாலும் விருப்பும் வெறுப்பும் காரணங்களோடுதான் ஏற்படுகின்றன.
உருவம்:
உடல் அமைப்பு, உடை அணியும் விதம், தலை வாரும் முறை, பேசும் பாங்கு, உடல் அசைவுகள், நிறம் போன்றவை ஒருவரை விரும்பவும் வெறுக்கவும் காரணமாக அமைகின்றன.
உடல் அழகாகவும், நடை மிடுக்காகவும், உடை நேர்த்தியாகவும், பேச்சு இனிமையாகவும், உடல் அசைவுகள் கவர்ச்சியாகவும், நிறம் கவர்ச்சியாகவும் தலைமுடி அழகாகவும் இருப்பின் அவர்கள் பலராலும் கவரப்பட்டு விரும்பப்படுகிறார்கள்.
இதற்கு எதிர்மாறாக உள்ளவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பெரிதும் ஈர்க்க முடிவதில்லை. ஆனால் உருவக் கவர்ச்சியில்லாதவர்கள் தங்களுக்குள்ள தனிச் சிறப்புகளால் அனைவரையும் ஈர்த்துவிடுகின்றனர். அங்கு அவர்களுக்கு உருவம் குறையாக இல்லாமல் சிறப்புக்குரியதாக மாறிவிடுகிறது.
அதற்குச் சிறந்த எடுத்துகாட்டு அறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அழகானவர் அல்ல; கம்பீரமான தோற்றம் உடையவர் அல்ல; இனிமையான குரல் உடையவர் அல்ல; நல்ல உடை உடுத்தியவர் அல்ல; தலைமுடியை அலங்கரித்தவர் அல்ல. ஆனால், கோடிக்கணக்கான மக்கள் அவரை ஏற்றிப் போற்றி அன்பு செலுத்தினார்கள்.
அவர் நோய்வாய்ப்பட்டபோது, மக்கள் துடிதுடித்துக் கலங்கினர். கண்ணீர் விட்டு அழுதனர். பக்தர்கள் அவர் நலம் பெற வழிபாடு செய்தனர். ஆனாலும் அண்ணா புற்றுநோய்ப் பாதிப்பால் இறந்து போனார். அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து, தன்னெழுச்சியாக லட்சக்கணக்கான மக்கள் அவரைக் காணச் சென்னையில் கூடினர். உலக வரலாற்றில் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது அவருக்கு மட்டுமே! அது கின்னஸ் பதிவேட்டிலேயே இடம் பெற்றது. அவரை இன்றும் மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.
இதற்கு என்ன காரணம்? அவர் மக்களுக்காக உழைத்தார். மக்கள் உரிமைக்காகப் போராடினார். மொழிக்காகக் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டுக்குச் சிறப்புச் சேர்த்தார். கேட்டோரை ஈர்க்கும் வண்ணம் தனது கருத்துகளை எடுத்துரைத்தார். அடுக்குச்சொல், ஆழ்ந்த அறிவு அவரின் தனிச் சிறப்பு. மக்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தினார். அவர்களின் நலனுக்காக வாழ்ந்தார். இதனால் மக்கள் அவரை விரும்பினர். ஆக, பிறர் நலனில் நாம் முனைப்புக் காட்டினால், அதற்காகப் பாடுபட்டால் அவர்கள் நம்மை நேசிப்பர் என்பது உறுதி!
பெற்றோர் – பிள்ளை உறவு:
இது இயற்கையாய் அமைந்தது. அங்கு இரத்த பாசம் ஈர்க்கிறது. பிள்ளைகள் மீது அன்பு, அக்கறை, அவர்களுக்காக உழைத்தல் ஆகியவை இயற்கையாய் அமைவன. அதேபோல் பிள்ளைகள் பெற்றோர் நலனை விரும்புவது, பாசம் செலுத்துவதும் அன்பு காட்டுவது இயற்கையே!
ஆசிரியர் – மாணவர் உறவு:
பெற்றோருக்கு அடுத்தபடியாக இரண்டாம் பெற்றோர் என்று எண்ணப்படுகின்றவர்கள் ஆசிரியர்கள். இங்கு இரத்த உறவு இல்லை. யார் யாரோ பெற்ற பிள்ளைகள் ஆசிரியர்களிடம் வருகிறார்கள். அப்படியிருந்தும் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள். அவர்கள் நலனில் அக்கறை செலுத்துகிறார்கள். அவர்கள் முன்னேற்றத்திற்காக உழைக்கிறார்கள். அவர்கள் முன்னேறும்போது பெற்றோர்களைப் போலவே இவர்களும் பெருமை கொள்கிறார்கள். மகிழ்கிறார்கள். அதனால்தான் அக்காலத்தில் அன்னை, தந்தை, ஆசிரியர் என்று வரிசைப்படுத்தினர். தாய்க்கு அடுத்துத் தந்தை; தந்தைக்கு அடுத்து ஆசிரியர் என்று எண்ணி மதித்தனர்.
ஆசிரியர் – மாணவர் உறவு சிறக்க அடிப்படை:
இந்த நாட்டின் குடியரசுத் தலைவராய் ஒருவர் உயர்ந்த பின்னும் தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரைக் கண்டால் எழுந்து நின்று வணங்குகிறார் என்றால், அதற்குக் காரணம் என்ன? இதை ஆசிரியர்கள் நன்கு புரிந்து தங்கள் பணியைச் செய்ய வேண்டும். உலகில் எத்தனையோ பணிகள் உள்ளன. அவைபோல அல்ல ஆசிரியர் பணி. இது பொறுப்பு. ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வைச் சிறக்கச் செய்கின்ற பொறுப்பு. அவர்களை வார்த்தெடுத்து வழிகாட்ட வேண்டிய பொறுப்பு. ஒரு ஆசிரியர் முயன்றால், அதற்காக மாண்புடன் உழைத்தால் நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்வைச் சிறக்கச் செய்ய முடியும். அதற்கு மாணவர் நலனே தங்களது முதல் இலக்கு என்று கொண்டு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். தங்களை மாணவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு நடக்கும்படி ஆசிரியர்கள் நடந்து காட்டவேண்டும். ஒழுக்கம், நன்னடத்தை, தூய்மை, வாய்மை, நேரம் தவறாமை, கடமையைச் செய்தல், அன்பு செலுத்துதல், கோபம் தவிர்த்தல், பொறுமை, எதிர்கால இலக்கு என்று எல்லாவற்றுக்கும் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டாக நடக்க வேண்டும். மாணவர்கள் அவற்றைப் பின்பற்றச் செய்ய வேண்டும்.
மாணவர் கடமை
மாணவர் பருவம் என்பது பிறரைச் சார்ந்து வாழும் பருவம். தன்னுடைய உணவு, உடை, பாதுகாப்பு, படிப்பு, செயல் என்று எல்லாவற்றுக்கும் பெற்றோர், ஆசிரியர், உறவினர் ஆகியோரைச் சார்ந்து வாழ வேண்டியவர்கள்.
தாங்கள் எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பெற்றோரும், ஆசிரியர்களுமே அவர்களுக்கு வழிகாட்டி நிற்பவர்கள். எனவே, பெற்றோரும் ஆசிரியர்களும் கூறும் அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டியது மாணவர்களின் கடமை. இவர்களின் அறிவுரையை ஏற்போர் வாழ்வில் சிறப்பர்; ஏற்க மறுப்போர் வாழ்வில் வீழ்வர். மாணவர் நலனில் அக்கறை உள்ளவர்கள் பெற்றோரும், ஆசிரியர்களுமே என்ற உண்மையை மாணவர்கள் உணர வேண்டும்; உள்வாங்க வேண்டும்.
ஆசிரியர் – மாணவர் உறவில் விரிசல்:
மதிக்கத்தக்க ஆசிரியர்களை மாணவர்கள் வெறுக்கும் நிலை வரக் காரணம் என்ன என்பதை ஆசிரியர்களும், தங்களை ஆசிரியர்கள் ஏன் தண்டிக்கிறார்கள் என்பதை மாணவர்களும் புரிந்து நடந்தால் இவர்கள் உறவில் விரிசலும், வெறுப்பும் வராது. மாறாக, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் வெறுப்பு வரும்; விரிசல் வரும்.
தனிமனித உணர்வுகள் ஆசிரியருக்கும் உண்டு; மாணவர்களுக்கும் உண்டு. அதை இரு தரப்பும் உணர்ந்து நடக்கவேண்டும். நாம் ஆசிரியர் என்கிற முறையில் மாணவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், பேசலாம் என்று செயல்பட்டால் அது மாணவர்களிடம் வெறுப்பை உருவாக்கும்.
அதேபோல் ஆசிரியர் பெரியவர், அதிகம் படித்தவர், நம்மைவிட அனுபவம் உடையவர், தமக்கு வழிகாட்டக்கூடியவர், தங்கள் நலனில், முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர் என்பதை உணர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
மோதல் ஏற்படுவது ஏன்?
ஆசிரியர் ‘தொழில்’ என்று இன்றைக்குப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. அது ஒரு பணி என்ற நிலை மாறி வருகிறது. கல்வி பெரும்பாலும் வணிகமாகி வருகிறது. மதிப்பெண் ஒன்றே குறிக்கோள் என்ற நெருக்கடியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமை காட்டுகின்றனர். மேலதிகாரிகள், நிருவாகம் ஆசிரியர்களுக்குத் தரும் அழுத்தம்.
மாணவர்களுக்கு பாடச் சுமை. அவர்களை விளையாட, மகிழ்வாகப் பொழுதுபோக்க அனுமதிக்காமை, இவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணாமாய்ப் படிப்பை வெறுக்கின்றனர். படிக்கச் சொல்கின்றவர்களையும் வெறுக்கின்றனர். இதன் விளைவு மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்கும் அவலம்கூட ஆங்காங்கே அரங்கேறி விடுகிறது.
எனவே, ஆசிரியர் – மாணவர் உறவு அன்பு, பாசம், நலம் நாடல் என்ற கட்டுக்குள் அமைய வேண்டும். ஆதிக்கம் செலுத்தும் போக்குதான் மோதலுக்கு வழிவகுக்கிறது. ஆதிக்கத்தால் சாதிப்பதைவிட, அன்பால் சாதிக்க முடியும் என்பதே அனுபவம் தரும் பாடம்.
ஆசிரியர்கள் மதிக்கத்தக்கவர்கள். அவர்கள் நம் நலத்திற்காகப் பாடுபடக் கூடியவர்கள். நம் முன்னேற்றத்திற்குத்தான் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதை மாணவர்கள் மனதில் கொண்டு நடந்தால் ஆசிரியர்கள் மீது வெறுப்பு வராது. மதிப்பு வரும். இதை உணர்ந்து மாணவர்கள் நடக்க வேண்டும். ஆசிரியர்களும் தங்கள் மாண்பறிந்து செயல்பட வேண்டும்.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்குப் பாடம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. ஒழுக்கம், நேர்மை, பணிவு, கனிவு, அன்பு, உதவும் எண்ணம், நன்னடத்தை போன்றவற்றைக் கட்டாயம் வாரத்திற்கு ஓரிரு பாட வேளைகள் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் உடற்கல்வி வகுப்பைக்கூட, பாடம் நடத்தப் பயன்படுத்தும் நடைமுறை தடுக்கப்பட வேண்டும்.
பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் போதைக்கு அடிமையாவதால் வகுப்புகளுக்கு மது அருந்திவிட்டு வரும் அவலம் நடக்கிறது. ஆசிரியர் கண்டித்தால் அவரையே மாணவர்கள் தாக்கும் கொடுமையும் நடக்கிறது.
மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் எந்த வகையிலும் எந்த வழியிலும் கிடைக்காமல் தடுக்கவேண்டியதும் கண்காணிக்க வேண்டியதும் அரசின் தலையாய கடமையாகும். மாணவ சமுதாயம் சீரழிந்தால் எதிர்காலத் தலைமுறையே சீரழியும்.
மாணவர்களும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி, தீய செயல்களையும் போதைப் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்வு சிதறிச் சீரழியும், குற்றவாளிகளாய் வாழ்நாளெல்லாம் சிறையில் வாழவேண்டி வரும். இதை மாணவர்கள் ஆழமாய் மனதிற்கொண்டு நல்ல நடத்தையை மேற்கொள்ள வேண்டும்.<