விண்வெளிக்குச் சென்று இரண்டாவது இந்தியர்
| த |
ன்னுடைய நாட்டின் தயாரிப்பின் மூலம் இந்தியா இதுவரை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதில்லை.
சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் 1984-ஆம் ஆண்டு ராகேஷ் சர்மா என்பவரை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பியது. அதன் பிறகு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், சிரிஷா பண்ட்லா, ராஜா சாரி ஆகியோர் சென்றிருந்தாலும் இவர்கள் அனைவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். இந்தியக் குடிமகனாக விண்வெளிக்குச் சென்ற இரண்டாம் நபரும், பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதலாம் நபரும் சுபான்சு சுக்லா தான்.
வரும் 2027ம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிக்காக ககன்யான் திட்டத்தைத் தற்போது செயல்படுத்தி வருகிறது. அதில் தேர்வான வீரர்களில் ஒருவர் சுபான்சு சுக்லா. அவரை நாசாவின் உதவியுடன், மனிதர்களைப் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஆக்ஸியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்துள்ளது.
2025 ஜூன் 25 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. டிராகன் விண்கலம் பூமியைச் சுற்றி 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 26 மாலை பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா படைத்தார்.
இந்த விண்கலத்தில் சுபான்சு சுக்லாவுடன் ஆக்ஸியம்-4 திட்டக்குழுவின் கமாண்டரான நாசா முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னாஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோர் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர். இத்திட்டத்தில் சுபான்சு சுக்லா விண்கலத்தின் விமானியாகச் செயலாற்றினார்.
தனது விண்வெளி அனுபவத்தை பகிர்ந்த வீடியோவில் பேசிய சுபான்சு, ‘‘இது ஒரு அற்புதமான பயணம். இது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு ஆதரவளித்தனர். விண்வெளியில் எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது என்பதை ஒரு குழந்தையை போல கற்றுக் கொள்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் நேரத்தை செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்’’ என்றார்.
பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு சென்ற 634வது வீரர் என்ற பெருமையையும் இந்திய வீரர் சுபான்சு சுக்லா பெற்றுள்ளார். 18 நாட்கள் பயணத்தை முடித்து, ஜூலை 15 அன்று பத்திரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்சு. மருத்துவக் கண்காணிப்பில் ஒரு மாத காலம் இருக்கும் சுக்லா அதன்பின் சுகன்யான் திட்ட தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். இவரது தரவுகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டு இஸ்ரோ விரிவான செயல் திட்டங்களில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது..<

