நம்ம ஊர் பாட்டி
| ப |
ொய்யாமணி” இந்தச் சிற்றூரின் பெயர். நகர வாடையே இல்லாத பழமையான ஊர். ஊருக்கு நடுவே இருக்கிற தெருவில் திண்ணை வைத்த ஒரு அழகான சின்ன ஓட்டு வீடு. அந்த வீடு பல ஆண்டு காலமாகப் பூட்டியே் கிடந்தது. தெருவில் இருக்கும் குழந்தைகள் கூடி விளையாட அந்தத் திண்ணை பயன்பட்டதைத் தவிர….. ‘அந்த வீடு யாருடையது?’ அது ஏன் பூட்டி இருக்கிறது?’ என்பதெல்லாம் ஊரில் இருக்கும் ஒரு சில முதியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
இப்படி பல ஆண்டுகளாய்ப் பூட்டிக் கிடந்த வீட்டின் முன்னால் விடியற்காலை ஆறு மணியளவில் ஒரு குட்டி யானை வண்டி வந்து நின்றது. வண்டி முழுவதும் நாற்காலி, கட்டில், மெத்தை எனப் பல பொருள்கள்.
தெருவில் காலை நேரத்தில் வாசல் பெருக்கிக் கூட்டிக் கோலம் போட்டுக் கொண்டிருந்த சில பெண்களும், விடியற்காலை நேரத்தில் வேலைக்குப் புறப்பட்ட சில ஆண்களும் பல காலமாய்ப் பூட்டியிருந்த வீட்டின் முன்னால் வந்து நின்ற வண்டியை வியப்போடு பார்த்தார்கள்.
வாகனத்தின் வலது புறக் கதவைத் திறந்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் இறங்கினார். இடது புறத்தின் கதவைத் திறந்து ‘ஜங்’ என குதித்தார் எட்டு முழம் புடவையைப் பின் கொசுவம் வைத்துக்கட்டியிருந்த பாட்டி. வயது மூப்பில் முகத்தில் பல சுருக்கம்… இருந்தாலும் வண்டியை விட்டு இறங்கிய விதமே கம்பீரமாக இருந்தது.
“மணி! இந்தாப்பா சாவி…. பூட்டைத் திறந்து கட கடன்னு பொருள்களை இறக்கி உள்ளே வைங்க”… என்று குரல் கொடுத்தபடி இடுப்பில் இருந்த சாவிக் கொத்தை எடுத்து ஓட்டுநரிடம் தூக்கி வீசினார் பாட்டி. அந்தக் காட்சி… ‘அட! பாட்டி சரியான ஆளுப்பா…’ என்று சொல்லும் அளவிற்கு இருந்தது.
ஓட்டுநர் மணியும், வண்டியின் பின்னால் பொருள்களோடு வந்த ஆறுமுகமும் கதவைத் திறந்து பொருள்களை வீட்டின் உள்ளே கொண்டு போய் வைக்கத் தொடங்கினார்கள்.
பாட்டி வீட்டுக்குள் போகாமல் அடுத்த வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பானுமதி அருகில் போய் நின்று “அம்மாடி நீ பரமசிவத்தோட மருமகளா?” என்று கேட்டார்.
“ஆமா! என் பேரு பானுமதி, நீங்க யாரு பாட்டி? இந்த வீட்டுக்குப் புதுசா குடிவந்திருக்கீங்களா?” என்றார் பானுமதி.
“இல்லே….. பானு…. இந்த வீடு என்னோட சொந்த வீடு. நான் பிறந்தது… வளர்ந்தது எல்லாமே இந்த ஊருதான், இந்த வீடுதான். எனக்குக் கல்யாணம் ஆனதுனாலே பட்டணத்துக்குப் போயிட்டேன். எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு ஒரே ஒரு பையன். அவன் படிச்சு வெளிநாட்டுல வேலை கிடைச்சு அங்கே போயிட்டான். என் வீட்டுக்காரரு நாலு வருசத்துக்கு முன் உடம்புக்குச் சரியில்லாம இறந்துட்டாரு. ஒத்தையா எதுக்கு பட்டணத்துலே கிடக்கணும்னு சொந்த ஊரான இந்தப் பொய்யாமணிக்கே புறப்பட்டு வந்துட்டேன். இனி இங்கே இருக்கிற நீங்க எல்லாருந்தான் எனக்கு ஊரு, உறவு எல்லாம்! ‘யாதும் ஊரே…. யாவரும் கேளிர்’னு எனக்காகத்தான் எழுதி வைச்சாரு கணியன் பூங்குன்றனாரு. சரி… சரி…. ஏழு புள்ளி வைச்சு எடுப்பா கோலம் போட்டுக்கிட்டிருந்த உன் வேலையைக் கெடுத்துட்டேன். அப்புறம் பேசுவோம்! வரட்டுமா… பானு” என, பல நாள் பழகிய ஒருவரிடம் பேசுவது போல் பேசிவிட்டு நகர்ந்தார் பாட்டி.
“பாட்டி, எல்லாம் சொன்னீங்க. உங்க பேரைச் சொல்லலியே? என்றாள் பானு. “தள்ளாத வயசுக் கிழவிக்கு பொல்லாத பேரு எதுக்கு? என்னை செல்லமா பாட்டீன்னே கூப்பிடு, போதும்.”
“உங்களுக்குன்னு ஒரு பேரு வெச்சுக் கூப்பிட்டிருப்பாங்களே.. அதைத் தெரிஞ்சு வச்சிக்கிட்டா நல்லதுதானேன்னு கேட்டேன். ஊருக்குள்ள பல பாட்டிங்க இருந்தாலும் உங்களை மாதிரி ஒரு பாட்டியை நான் இதுவரை பார்த்ததே இல்லே. அதான் பேரைக் கேட்டேன்.”
“பானு… ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுதான் நீ… என் பேருக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு. உன் மாமனாரு பரமசிவத்தைக் கேட்டுத் தெரிஞ்சிக்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுநர் மணி வந்து பாட்டிமா! எல்லாத்தையும் இறக்கி உள்ளே வச்சுட்டோம். நாங்க புறப்படட்டுமா ?” என்றார்.
“ரொம்ப நன்றி தம்பிகளா! பார்த்து பத்திரமா ஊர் போய்ச் சேருங்க. என் மகன் பணம் அனுப்பீட்டாரா? என்றார் பாட்டி.
“அதெல்லாம் புறப்படும் போதே மொத்தப் பணத்தையும் அனுப்பீட்டாரு. வர்றோம் பாட்டி”! என்றபடி நகர்ந்தான் மணி.
“பானு… இந்தத் தெருவுல எங்கே பால் கிடைக்கும்?
“பாட்டி… அதோ பாருங்க… பலராமன் அண்ணே… பால் கொண்டு வராரு. அவருக்கிட்டே சொன்னா தினமும் பால் கொண்டு வந்து தருவாரு” என்று பானு சொல்லி வாய் மூடுவதற்குள், பலராமனைப் பார்த்து கையாட்டியபடி “பால்ராமன்” “பால்ராமன்” என்று உரக்கக் கூவினார் பாட்டி.
‘யார்டா இது, புதுப் பார்ட்டியா இருக்கு. அதுவும்… புதுப் பாட்டியா இருக்கே?’ என்று பால் கேன் பின்னால் கட்டிய சைக்கிளை ஓட்டியபடி பாட்டி அருகில் வந்து நின்றார் பலராமன்.
“பாட்டியம்மா! யாரு நீங்க? எந்த ஊரு? புதுசா இந்த வீட்டுக்கு வந்திருக்கீங்களா?” என்றார்.
“இல்லேப்பா! பழைய ஆளுதான். கொஞ்ச நாள் கழிச்சு வந்ததுனாலே புதுசாத் தெரியுது உனக்கு. இது என் வீடுதான்.”
“அடடே! எங்க தாத்தா சொல்லியிருக்காரு- – இந்த வீட்டுல கம்பீரமா பெரிய மீசையோட பன்னீர் செல்வம்னு படிச்ச பெரிய மனுஷன் இருந்தாருன்னு.
“அந்த பெரிய மனுசனோட ஒரே மகள் தான் நான். எனக்குத் தினமும் பாலப் வேணும். கொண்டு வந்து தர்றீங்களா பால்ராமன்?” என்றார் பாட்டி.
“என் பேரு பால்ராமன் இல்லே, பலராமன்…”
“அட, பலராமன் இருக்கிற இந்த ஊருக்குள்ளே பால் விக்கிற நீ பால்ராமனா இருந்தா என்ன தப்பு? நான் என்ன உனக்குக் கோயில் கட்டுறேன்னா சொல்றேன்… பால்ராமன்னு இருக்குமில்லே! கொஞ்சம் கூப்பிட்டா பளிச்சுன்னு இருய்யா! நான் பாத்திரம் கொண்டுக்கிட்டு வர்றேன்” என்று வீட்டுக்குள் போனார் பாட்டி.
பலராமன் “பலே பாட்டிதான்” என மனதில் நினைத்தபடி சிரித்தார்.
பாத்திரத்தோடு வந்த பாட்டி… “பால்ராமன்… எனக்கு அரை லிட்டர் எருமைப் பால் கொடு!”
“ஏன் பாட்டி பசும்பால் வேண்டாமா?”
“அது பசும் பாலை விட எருமைப்பாலில அதிக சக்தி இருக்கு பால்ராமன்!… அதனாலே… தினமும் காலையிலே இந்த நேரத்துக்கு அரை லிட்டர் கொடுத்திடு. மாசமானா மொத்தமா காசை வாங்கிக்க அய்யா” என்று சொல்லியபடி வீட்டுக்குள் போனார் பாட்டி.
“சரி பாட்டி!” என்று சிரித்தபடி சைக்கிளில் ஏறிப் போனார் பால்ராமன்… அதாவது பலராமன்.
(பாட்டியின் லூட்டி தொடரும்…)