விரும்பி இங்கே வாழ்வோம் !
சிட்டுகள்: அக்கா அக்கா வணக்கம்
அன்பு அக்கா வணக்கம்
இங்கே தங்கி வாழ
எண்ணு கின்றோம் அக்கா
அக்கா: ஒவ்வொரு நாளும் நாங்கள்
உணவு தந்திடு கின்றோம்
இன்னும் என்ன உதவி
எடுத்துச் சொல்வீர் உடனே
சிட்டுகள்: இரவில் தங்கிக் கொள்ள
இல்லை வீடு; இங்கே
கூடு கட்டிக் கொள்ள
கொடுக்க வேண்டும் இசைவு!
அக்கா: இந்த வீட்டின் கீழே
இருக்கின் றோமே நாங்கள்
இங்கே உங்க ளுக்கும்
எப்படி இடம்தர முடியும்?
சிட்டுகள்: உங்களுக்குத் தொல்லை
என்றும் தரவே மாட்டோம்
வீட்டின் கூறையில் கூடு
விரும்பிக் கட்டிக் கொள்வோம்
அக்கா: கூரையில் நீங்கள் அழகாய்க்
கூடு கட்டிக் கொள்ள
இல்லை தடையே இல்லை
என்ன மகிச்சி தானே?
சிட்டுகள்: நன்றி, நன்றி அக்கா
நல்லவர் நீங்கள் அக்கா
விரைவில் கட்டி முடிப்போம்
விரும்பி அங்கே வாழ்வோம்!
என்ன மகிழ்ச்சி தானே?!<
– முனைவர் முரசு நெடுமாறன்