மூளையைத் தின்னும் அமீபா
| கே |
ரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். ஆனால், அன்றே அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் மூளையில் அரியவகை அமீபா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
மூளைத் திசுக்களைத் திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து சிறுமி வசித்த பகுதிகளில் நீர்நிலை கண்டறிப்பட்டவுடன், அங்கு குளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில், அரியவகை அமீபா பாதிப்பு காரணமாக இறந்த நான்காவது நபர் இந்த 9-வயது சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பின் அறிமுகமில்லாத இடத்திலோ, பெற்றோர் உடன் இல்லாத நேரத்திலோ, சுற்றுலாவுக்கோ, கிராமங்களுக்குச் சென்றிருக்கும்போதோ, அரசால் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, பிற இடங்களில் குளிப்பது கூடாது.
இதில் மற்றொரு சுவாரசியமான தகவல் என்ன தெரியுமா? குளித்தால் உயிரைக் கொல்லும் இந்த மூளையைத் தின்னும் அமீபா கலந்த நீரைக் குடித்தால் எதுவும் செய்யாதாம். ஏனென்றால், இது மூக்கின் வழியாக மூளைக்குச் சென்று மூளையைத் தாக்குமாம்.
இது அரிய வகைப் பிரச்சினை தான் என்றாலும், நுண்ணுயிரிகளால் இப்படி ஏராளமான அரிய வகை நோய்கள் ஏற்படுகின்றன தானே! எதிலும் நாம் நம்மை அறியாமல் சிக்கிக் கொள்ளக் கூடாது அல்லவா?
பல இடங்களில் குடிக்கத் தகுதியற்ற அசுத்தமான, நுண்ணுயிரிகள் நிரம்பிய நீரைக் குடிப்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறது. எனவே, குடிக்கத் தகுதியற்ற தண்ணீரைக் குடிப்பதும் கூடாது. நீரைக் காய்ச்சி வடிகட்டித் தான் குடிக்க வேண்டும்.
நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளல் அவசியம் பிஞ்சுகளே!
* * *
மூளையைத் தின்னும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெக்லெரியா ஃபோவ்லெரி (Naegleria fowleri), ஓர் அரிதான, ஆனால் ஆபத்தான நுண்ணுயிரி ஆகும். இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (பிஏஎம்) எனப்படும் மூளையின் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும்.
அமீபா மூளை திசுக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் அறிகுறிகள்:
முதன்மை அமீபிக் மெனிங்கோஎன் செபாலிடிஸின் அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் 15 நாட்களுக்குப் பிறகு வெளிப்படும். அறிகுறிகள் விரைவாக முன்னேறும். ஆரம்ப கட்டங்களில், பிஏஎம் நோயை அறிதல் கடினமாக இருக்கும், ஏனெனில் அறிகுறிகள் பாக்டீரியா அல்லது வைரஸ் மூளைக்காய்ச்சலுடன் நெருக்கமாக ஒத்திருக்கின்றன.
இந்தப் பிரச்சினையின் ஆரம்ப கட்ட அறிகுறிகளில் மிகவும் வலிமிகுந்த தலைவலி, அதிக காய்ச்சல், கடினமான கழுத்து, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கியதாக இருக்கும்.
பிந்தைய நிலைகளில், நோயாளி குழப்பமடையலாம், தன்னிலை இழக்கலாம், வலிப்பு தாக்கங்களால் பாதிக்கப்படலாம், சமநிலையை இழக்கலாம் மற்றும் கோமா நிலைக்குச் செல்லலாம். தொற்று எப்போதும் ஆபத்தானது.
காணப்படும் இடங்கள்:
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, அமீபா சூடான நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் சூடான நீரூற்றுகளில் செழித்து வளர்கிறது. அரிதான சந்தர்ப்பங்களில், இது மோசமாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களிலும் காணப்படலாம்.
பரவும் வழி:
நெக்லேரியா ஃபோவ்லெரி மூக்கு வழியாக உடலில் நுழையும் போது தொற்று ஏற்படுகிறது. ஏனென்றால், மூளையைத் தின்னும் அமீபா நாசி குழிக்கு அருகில் அமைந்துள்ள ஆல்ஃபாக்டரி நரம்பு வழியாக மூளையை எளிதில் அணுக முடியும்.
நெக்லெரியா ஃபோவ்லெரி அமீபா உள்ள தண்ணீரை விழுங்குவதால் நோய்த்தொற்று ஏற்படாது.<