அரேஞ்ச் செய்க
வாடியே நின்றவர் கண்டு! – நீ
வாரிய ளிப்பதாம் தொண்டு!!
நாடியே பக்கம்நீ சென்று – சொல்லும்
நயவுரை தான்கற் கண்டு!!
(வாடியே)
ஏதிலார் ஏற்றிடும் ஏணி! – நல்
லின்பம் ஊறிடும் கேணி!!
ஓதிய நல்லறம் பேணி! – நீ
ஓட்டுவாய் வாழ்வெனும் தோணி!!
(வாடியே)
இல்லையென் றாருக்கே தஞ்சம்! – தந்தால்
இடர்தரத் துயர்வர அஞ்சும்!!
அள்ளிக்கொ டுப்பாயே கொஞ்சம்! – நீ
அணைக்க மகிழ்வாரே நெஞ்சும்!!
(வாடியே)
வாழைபனை போல உன்னைத் – தந்தே
வாழ்விப்பாய் நீயொரு அன்னை!
ஏழைக லங்கிடும் முன்னே – நீ
ஏந்தியே தாங்குவாய் கண்ணே!! <
(வாடியே)
– பாவலர் சுப.முருகானந்தம்
