கேள்விக்கெட்டு பழகு
| ஹ |
ாய் செல்லங்களா! பள்ளிக்கூடம், வகுப்பறை அப்படீன்னா, நமக்கு முதல்ல கவனத்துக்கு வருவது ஆசிரியர் தான். ஆசிரியர் என்றதும் முதலில் அனைவருக்கும் பயம்தான் வரும். பல பேர் சந்தேகங்களைக் கூட கேட்க மாட்டோம். கேட்டா திட்டுவாங்களோன்னு பயப்படுவோம். வீட்ல போயி அம்மாகிட்டேயும் அப்பாகிட்டேயும் கேட்டா, அவங்களுக்குத் தெரிஞ்சா, ஃப்ரியா இருந்தா சொல்லுவாங்க. விடை தெரியலேன்னாலும் அல்லது வேறு வேலைகள் இருந்தாலும், ‘போ அதிகப் பிரசங்கி, சும்மா தொண ‘தொணன்னு’ ஏதாச்சும் கேட்டுகிட்டே இருப்பேன்னு’ சொல்லுவாங்க. கொஞ்சம் ஓவரா போனா ‘வாயாடி’ன்னு சொல்லிடுவாங்க.
ஆனால், நிறைய கேள்விகள் கேட்டால் தான் நம்முடைய சிந்தனைகளைத் தூண்டும். பெரியார் தாத்தா கேள்விகள் நிறைய கேட்டதால்தான், நிறைய சிந்தித்துச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்னதால தான் அவரை, இன்னைக்குப் பகுத்தறிவுப் பகலவன்னு சொல்றோம்.
பாடப் புத்தகங்கள் தொடங்கி நம் வாழ்க்கையில் நாம் தினமும் காதால் கேட்கிற அல்லது கைப்பேசியில் பார்க்கிற பல தகவல்கள் உண்மையா, பொய்யான்னு தெரியாமலேயே நம்பிக்கிட்டு இருக்கோம்.
உதாரணத்துக்குச் சொல்றதுன்னா… ஒரு படம் செல்பேசியில பார்க்கிறோம். அதை 100 பேருக்கு அனுப்பினால், உனக்கு இன்னைக்கு நல்லது நடக்கும் என்று சொன்னால் அதை யோசிக்காமல் உடனே செஞ்சிடுவோம். அந்தச் செய்தி உண்மையா? அப்படிச் செஞ்சா நல்லது நடக்குமா? – என்பதைப் பத்தி எல்லாம் யோசிக்கிறதே கிடையாது.
சூரிய கிரகணம் வருது… அப்போ கர்ப்பிணிப் பெண்கள் வெளியே போகக்கூடாதுன்னு சொல்றாங்க; சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க; வெளியே ஏன் போகக்கூடாது? சாப்பிட்டா என்ன ஆகும்?னு ஆசிரியரைப் பார்த்து கேள்வி கேட்கிறது இல்லை. பல பள்ளிகளில் அறிவியல் ஆசிரியரே அதுபோல கடைப்பிடிக்கச் சொல்வாரு!
இரவுல நகம் வெட்டக்கூடாது, வெள்ளிக்கிழமை – கொடுக்கல், வாங்கல் இருக்கக்கூடாது, அமாவாசை வந்தால் தலைக்குக் குளிக்கணும், கனவுல பாம்பு வரக்கூடாது, வீடு எரியக்கூடாது, இவை போன்ற பலப்பல மூடநம்பிக்கைச் செய்திகளைத் தினம் தினம் நம்மைச் சுற்றி யாரோ ஒருவர் மூலம் கேள்விப்படுவோம். அப்படிக் கேள்விப்படும்போது நாம தைரியமாய் கேள்வி கேட்கணும். அது வீடாக இருந்தாலும் சரி, பள்ளி வகுப்பறையாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, கேள்வி கேட்டுப் பழக வேண்டும்.
பெரியார் தாத்தா என்ன சொல்லி இருக்காங்க? யார் என்ன சொல்லி இருந்தாலும், எப்போது சொல்லி இருந்தாலும், உன் அறிவுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்; இல்லை என்றால் விட்டுவிடு என்று சொல்லி இருக்கிறார்கள் அல்லவா?
அதனால குழந்தைகள் நீங்கள் கேள்வி கேட்கணும்னு
சக.முத்துக் கண்ணன் மற்றும் ச.முத்துக்குமாரி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து “கேள்வி கேட்டுப் பழகு”ன்னு ஒரு புத்தகம் எழுதி இருக்காங்க. இந்தப் புத்தகம் குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டுற புத்தகம் மட்டுமல்ல, பல மூடநம்பிக்கைகளுக்கு எதிரான புத்தகமும் கூட!
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிங்க! வெறும் மூடநம்பிக்கைகள் பற்றி மட்டும் சொல்லாம அதற்கான காரணங்களையும் உண்மைப் பதில்களையும் இதுல சொல்லி இருக்காங்க. சரியா?
இந்தப் புத்தகம் எழுதிய மாமாவுக்கும் அத்தைக்கும் நன்றி சொல்லலாமா?<