2026 பொங்கல் வாழ்த்துக்கள்
புத்தாண்டு வந்ததிந்தப் பூதலத்தில்
புன்னகையும் பூத்ததின்று பூமுகத்தில்
புதுமையிங்கு மலரட்டும் புரட்சியோடு;
பொதுவுடைமை பரவட்டும் பெருமையோடு!
இதுவேநம் வாழ்வுக்கு இன்பமயம்
என்றைக்கும் நிலவட்டும் அன்புமயம்!
பொங்கல்நாள் வந்ததிங்கு பாங்குடனே
பேரின்பம் பிறந்ததின்று மனங்களிலே
மங்காத செல்வங்கள் குவிந்திடவே;
மெய்யான வாழ்வொன்று தங்கிடவே
தங்கமகள் தைமகளே நீவருக
தமிழர்தம் வறுமைக்கு விடைதருக!
அன்பெங்கும் விரியட்டும் வானம்போல்
அடலேறாய் ஆர்த்தெழுவோம் உறுதியோடு!
துன்பங்கள் மறையட்டும் எந்தநாளும்;
துணிவோடு நடந்திடுவோம் பூமியிலே!
நன்னெறிகள் நெஞ்சத்தில் தழைக்கட்டும்
நனிதுயரம் இழைப்பவர்கள் ஒழியட்டும்!
இந்நாளில் எல்லோரும் இன்புறவே
எழில்வானம் போல்விரிந்து வாழ்ந்திடவே
இந்நாளில் வந்ததொரு பொன்வசந்தம்;
இற்றைப்போல் எந்நாளும் மகிழ்ந்திடவே
செந்தமிழில் “பா” வொன்று நான்தொடுத்து
அன்புடனே தருகின்றேன் வாழ்த்தொன்று!
– கே.வி.ஜனார்தனன்
காஞ்சிபுரம்
