கதை கேளு… கதை கேளு…
| அ |
ந்தச் சிறிய ஊரில் அது அதிசயமாக இருந்தது. ஒரே நேரத்தில் 51 சிறுவர்கள் எல்லோரும் அந்தச் சின்ன வீதியில் ஓடினால் ஊரே அதைப் பற்றி பேசாதா? அதுவும் அதிகாலை அய்ந்து மணிக்கு! அதுவும் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சேர்ந்து ஒன்றாக ஓடினார்கள். டீக்கடைகளில் இருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். தண்ணீர் தெளித்துக் கோலம் போட வந்தவர்களும் கவனித்தார்கள். டியூசனுக்குக் கிளம்பின பத்தாம் வகுப்புக் குழந்தைகள் கவனித்தார்கள். “அண்ணா, எல்லோரும் எங்க போறீங்க?” என்று கேட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. எல்லோரும் அமைதியாகப் புன்னகைத்தனர்.
அன்றைய நாள் அதுதான் பேசுபொருள். ஊரில் மட்டுமல்ல, அந்தப் பெரிய பள்ளியிலும் கூட! ஏனெனில், அவர்கள் எல்லோரும் அந்தப் பள்ளி மாணவர்கள். எல்லோருமே பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். அதனால் கூடுதல் கவனம் பெற்றது. ஓர் ஆசிரியர் இதனைக் கவனித்துவிட்டுப் பள்ளி நிருவாகத்திடம் தெரிவித்துவிட்டார். காலையில் ஓடிய அனைவரையும் பள்ளி நிருவாகி வரச்சொன்னார். அப்போதுதான் தெரிந்தது – பதினொன்றாம் வகுப்பின் ஒரு பிரிவில் இருக்கும் எல்லா மாணவர்களும் ஓடி இருக்கின்றனர். தலைமை ஆசிரியரும் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் இருந்த நிருவாகியும் அந்த அறையில் இருந்தார்கள். கொசகொசவென மீதி 51 மாணவர்களும் அங்கே நின்றிருந்தார்கள்.
“என்னப்பா ஊர் முழுக்க உங்க பேச்சுதான் போல?”
பக்கத்து அறையில் குண்டூசி விழுவது இங்கே கேட்டது.
“உங்களைத்தான் கேட்கறேன். யாராச்சும் சொல்லுங்க. வர்ஷனி நீ சொல்லு” என்றார் கோபமாக.
“ஹெல்த் பராமரிக்க தினமும் ஓடுறோம். அது தப்பா சார்?” என்றாள்.
இதற்கு மேல் என்ன கேட்க முடியும்? எல்லோரையும் அனுப்பிவிட்டார் தலைமை ஆசிரியர். என்ன செய்வது எனத் தலைமை ஆசிரியரும் நிருவாகியும் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். உதவியாளர் சாமியண்ணனை அழைத்து அந்த வகுப்பில் இருந்து ஹரிஹரனை அழைத்து வரச்சொன்னார்கள். உதவியாளர் வகுப்பை அடையும்போது ஒரே பேச்சுக்குரல். “கண்டிப்பா சாமியண்ணன் வருவார் பாரேன்” என்று அங்கே பேசி முடிப்பதற்குள் உதவியாளர் சாமியண்ணன் அங்கே வந்திருந்தார்.
எல்லாரும் ஒரே குரலில் “என்ன அண்ணே, ஆபிஸ்ல ஹரிஹரனைக் கூப்பிட்றாங்களா?” என்று கேட்டனர். எப்படிப் பசங்களுக்கு அதுக்குள்ள தெரிந்தது என நினைத்து, “ஆமாம்” என்றார். ஹரி, வர்ஷனியைப் பார்த்தான். போ எனக் கண்ணசைத்தாள். வகுப்பே அவனுக்கு ‘தம்ப்ஸ் அப்’ காட்டியது. சாமியண்ணன் குழம்பிவிட்டார். இவங்களுக்கு முன்னமே தெரியுமா என யோசித்தார்.
அந்த அறையில் இப்போது மூவர். “ஹரி, நீ என் ப்ரெண்ட் பையன் என்பதால கேட்கல, நல்ல பொறுப்புள்ள பையன் என்பதால கேட்கறேன். ஏன் இப்படி எல்லாரும் காலையில ஓடுனீங்க?” எனக் கேட்டார் நிருவாகி. இதே போலக் கேட்பார்கள் என முன்னமே நண்பர்கள் அவனுக்குச் சொல்லி இருந்தார்கள்.
“எல்லோரும் ஆரோக்யமா இருக்கத்தான் சார்” என்றான் சிரித்துக்கொண்டே. நிருவாகி கடுப்பானார். “உண்மையைச் சொல்லு. எந்த விஷயமும் வெளியே போகாது” என்றார்.
“சொல்றேன்… அன்னைக்கு வர்ஷனி வகுப்புக்கு முன்னாடி போய் எல்லோரையும் சத்தம்போட்டதும்தான் எங்களுக்கு உறைத்தது. ‘டேய், அவன் நம்ம ப்ரெண்டுடா… இப்படி அவனைத் தினமும் அவர் அசிங்கப்படுத்துறார். அதுக்கு எல்லோரும் சிரிச்சு வைக்கறீங்க. யாராச்சும் ஒருத்தனாவது எழுந்து அப்படிச் சொல்லாதீங்கன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தேன். பாரு, மூனு நாளா சங்கர் பள்ளிக்கு வரவே இல்லை. நேத்தும் காலையில வந்தான், மதியம் போயிட்டான். ஏன் தெரியுமா? மாலை கடைசி வகுப்பு அந்த ஆசிரியருடையது. இன்னைக்கு வந்தான். அந்த ஆசிரியர் அவன் இல்லைன்னாலும் அசிங்கமாப் பேசுறார். இன்னைக்கு யூனிபார்ம் வாங்கிட்டியா? உனக்கு ரெண்டு வாங்கி ஒன்னை தைக்கணும்னு சொல்றார். அவன் முகத்தைப் பார்த்தீங்களா? அவனுக்கு படிப்பு மேலயும் ஸ்கூல் மேலயும் வெறுப்பு வராதா?”. வர்ஷனி சொன்னதும் வகுப்பே அமைதியா இருந்துச்சு. உண்மையில எங்ககிட்ட பதில் இல்லை. ‘பாடி ஷேமிங்’ எவ்வளவு பெரிய வன்முறைன்னு எங்களுக்கு அந்தக் கணம்தான் புரிஞ்சது. உலகம் முழுக்கக் கடுமையான தண்டனைகள் இருக்கு. ஆனால், எங்கே கம்ப்ளெய்ன்ட் செய்தாலும் இதென்ன பெரிய விஷயமான்னு கேட்குறாங்க. பொதுவில கேட்காம, தனியாய்ப் போய்க் கேட்ட வர்ஷனியை ‘நீ என்ன செய்யமுடியுமோ செய்’ன்னு மிரட்டி அனுப்பி இருக்காங்க. சங்கருக்காக அவள் மட்டுமே நின்னா…”
நிறுத்தினான் ஹரி. மற்ற இருவரும் கவனமாகக் கேட்டனர்.
“அதுக்கு?”
“சங்கரின் உடல் எடையைக் குறைக்க நாங்க முடிவெடுத்தோம். அவன் வாயில இருந்து ‘நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்’ன்னு இனி வரக்கூடாதுன்னு நெனச்சோம். தினமும் பள்ளிக்கு மகிழ்ச்சியா வர வைக்கணும்னு முடிவெடுத்தோம். வகுப்பில்தான் அவன்கூட நிக்கல, எல்லோரும் அவன் உடல் எடையைக் குறைக்க உடன் நிற்கலாம்னு நெனச்சோம். அவனுக்கு இங்கே நடந்த எந்த விஷயமும் தெரியாது. காலையில இருந்து ரன்னிங் போகலாம்னு நான்தான் சொன்னேன். நான் மட்டும்தான் வருவேன்னு அவன் நெனச்சான். அவன்கூட 50 பேர் ஓடுவோம்னு அவன் நினைச்சுக்கூடப் பார்க்கல. அவனை எங்களுக்கு நடுவில ஓடவிட்டோம். உடல் குலுங்குவதைப் பற்றிக் கவலைப்படாம ஓடுன்னு ஓடவெச்சோம். இனி தினமும் ஓடுவோம். வீட்டுக்குள்ளயோ ஜிம்லயோ இதனைச் செய்யலாம். ஆனால் இது ஒரு வகையில் எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும்விதம்” என்றான்.
தலைமை ஆசிரியருக்கு எல்லாம் புரிந்தது. புள்ளிகளைச் சேர்த்தார்; என்ன நிகழ்ந்திருக்கும் என முழுவதுமாகச் சிந்தனையில் ஓடவிட்டார். நல்லவேளை, ஊரில் இது தெரிந்தால் பெரிய பிரச்சனையாகும் என நினைத்துக்கொண்டார்.
“யாருப்பா அந்த சார்?” என்று கேட்டார் நிருவாகி.
“சார், அந்த சாரை நீங்க கண்டுபிடிங்க. அவன் ‘இப்படிப் பண்ணி இருக்கலாமே’, ‘அம்மா அப்பாகிட்ட சொல்லி இருக்கலாமே’ன்னு நீங்க கேட்கலாம். நிறைய முறை ஏற்கெனவே புகார் கொடுத்திருக்கோம். நடவடிக்கை எடுக்கல. ஆனால், எங்க நடவடிக்கை அந்த சாருக்கு எதிராக அல்ல… முதலில் எங்க நண்பனுக்கு உறுதுணையாக இருப்பது. இப்பத்தான் கூட நிற்பதுன்னா என்னன்னு புரிஞ்சிருக்கு” என்றான்.
வகுப்பிற்குத் திரும்பினான் ஹரிஹரன். அந்த வகுப்பு ஆசிரியர் இன்று விடுப்பு எடுத்து விட்டார். மாற்று ஆசிரியர்களும் வரவில்லை. ஏற்கெனவே மகிழ்ச்சியில் இருந்தனர். ஹரி தன் விரல்களை உயர்த்தி வெற்றி என்றான். சரியாக அந்த நேரத்தில் தூரத்தில் இருந்து “டண்டன் டன் டனக்க நக்க டண்டன் டன் டனக்க நக்க” என்ற இசை. வகுப்பின் நடுவே வர்ஷனி ஓடிவந்து சங்கரை மேடைக்கு இழுத்து, இசைக்கு ஏற்ப குத்து நடனம் ஆடினாள். சங்கரையும் ஆடவிட்டாள். முதலில் தயங்கினான். வெட்கப்பட்டான். வகுப்பில் எல்லோரும் சேர்ந்துகொண்டனர். சங்கரும் மெல்ல இணைந்துகொண்டான். சத்தமின்றி அந்த இசைக்கு ஏற்ப உடலினை அசைத்து ஆடினார்கள். அவ்வழியே சென்ற தலைமை ஆசிரியர் புன்னகையை மட்டும் வீசிவிட்டு, கடந்து சென்றார்.<
